நாம் அணியும் ஜீன்ஸ் பேண்டுகள் பெரும்பாலும் நீல நிறத்தில் தான் தயாரிக்கப்படுகின்றன. மற்ற நிறங்களில் இதன் எண்ணிக்கை மிகவும் குறைவு. இது ஏன் என்று என்றாவது நீங்கள் சிந்தித்தது உண்டா? அப்படி இல்லையென்றால் இதற்கான காரணம் என்ன என்பதை இப்போது தெரிந்து கொள்வோமா!
இன்றைய தலைமுறையினர் தங்களை அழகுப்படுத்திக் கொள்வதில் அதிக அக்கறையுடன் இருக்கின்றனர். இதில் ஆடைத் தேர்வுக்கு என்று தனி கவனம் செலுத்துகிறார்கள். ஏனெனில் ஒருவரின் தோற்றத்தை நேர்த்தியாக பிரதிபலிக்கும் தன்மை ஆடைகளுக்கு உண்டு. எந்த நாளுக்கு எந்த வண்ணத்தில் ஆடை அணிய வேண்டும் என்பது முதல்கொண்டு, எப்படிப்பட்ட ஆடைகள் நமக்கு நன்றாக இருக்கும் என்பது வரை அனைத்திலும் கவனமாக இருக்கிறார்கள். அதிலும் ஜீன்ஸ் பேண்ட்கள் ஆண், பெண் இருபாலருக்கும் பிடித்தமான ஆடையாக இருக்கிறது. இதில் நீல நிற ஜீன்ஸ் பேண்ட்கள் தான் அதிகளவில் விற்பனைக்கு வருகின்றன. இதற்கு ஒரு வேதியியல் காரணம் உண்டு என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறாதா! இருப்பினும் இது தான் உண்மை.
ஆடைகள் தயாரிக்க உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் துணி வகைகளில் ஒன்று டெனிம். இது பெரும்பாலும் நீல நிறத்தோடு ஒத்துப் போகும் தன்மையைக் கொண்டது. இந்த நீல நிற டெனிம் 19 ஆம் நூற்றாண்டில் இருந்து பயன்பாட்டில் இருக்கிறது. சுரங்கத் தொழிலாளர்களுக்கு நீடித்த வேலை ஆடைகளைத் தயாரிக்க வேண்டும் என்ற முனைப்பில், அமெரிக்க குடியேற்ற வாசிகளான ஜேக்கப் டேவிஸ் மற்றும் லெவி ஸ்ட்ராஸ் ஆகிய இருவரால் நீல டெனிம் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. இண்டிகோ சாயத்தில் இருந்து கிடைக்கும் நீல நிறம், பருத்தி இழைகளில் மிக எளிதாக ஒட்டக்கூடியது என்பதால், ஜீன்ஸ் பேண்டிற்கு இந்நிறம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
நீல நிறம், நீண்ட காலத்திற்கு உழைக்கும் ஆடைகளுக்கு ஏற்றதாக அமைகிறது. மேலும் இது நூலின் வெளிப்புற அடுக்குகளில் ஊடுருவி, ஆடையின் மையப்பகுதியினை வெண்மை நிறமாக மாற்றுகிறது. இதனால் நீல நிற ஆடைகைளை அணிவதன் மூலமும், துவைப்பதன் மூலமும் ஒரு தனித்துவமான முறையில் அவை மங்குகின்றன. இந்த தனித்துவமான நீல நிற ஜீன்ஸை பொதுமக்களும் விரும்பத் தொடங்கினார்கள். நீல டெனிமின் நீடித்தத் தன்மையால், வேலை செய்யும் ஆடைகளுக்கு மட்டுமின்றி நாகரிகத்திற்கும் ஏற்றதாக இது அமைந்து விட்டது.
நீலம் ஒரு நடுநிலை நிறமாகும். பல வண்ணங்களுடன் மிக எளிதில் பொருந்தி விடும் தன்மையைக் கொண்டிருப்பதும் நீல நிற ஜீன்ஸ்களின் தயாரிப்புக்கு மற்றுமொரு முக்கிய காரணமாகும். மேலும் மற்ற நிற ஜீன்ஸ்கள், நீல நிற ஜீன்ஸ்களின் அளவுக்கு மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
ஜீன்ஸ் பேண்ட்களின் எடை மற்றும் தடிமன் மற்ற துணிகளை விடவும் அதிகமாக இருக்கும் என்பதால், குளிர்காலத்திற்கு மிகவும் ஏற்றதாக இருக்கும். இருப்பினும் தற்போதைய இளைஞர்கள் ஜீன்ஸ் பேண்ட்களை அனைத்து பருவ காலங்களிலும் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.