சாதாரண இமைகளை வசீகரமான இமைகளாக மாற்றும் மாயம் மஸ்காராவிற்கு உண்டு. மஸ்காராவின் பயன் நம் இமைகளை அடர்த்தியாக, நீளமாக காட்டக்கூடியது. இமைகளை அழகாக்க இதன் பங்கு அவசியமாகும். மஸ்காராவின் வேலை இமை முடிகளை தனித்தனியாக மாற்றி அடர்த்தியாக காட்டுவதுதான்.
முதலில் லேஷ் கர்லர் கொண்டு இமைகளை மேல் நோக்கி தூக்கி விட வேண்டும். அப்பொழுதுதான் இமைகள் மஸ்காரா போடும் போது எடுப்பாக தெரியும்.
அடுத்து புது மஸ்காராவாக இருந்தால் முதலில் மஸ்காரா பிரஷ்ஷை ஒரு டிஷ்யூ பேப்பரில் நன்றாக அழுத்தி பிடித்து துடைக்கவும். மஸ்காரா பிரஷ்ஷில் உள்ள இங்க் திட்டு திட்டாக ஒட்டி இருக்கும். இவ்வாறு செய்யும்போது அது சீராகி மேலும் மஸ்காரா பிரஷ்ஷில் உள்ள முடிகள் தனித்தனியாக பிரியும்.
முதலில் இமைகளின் அடிப்பகுதியில் இருந்து துவங்கி மேல் நோக்கி பிரஷ் வைத்து மஸ்காராவை போடவும். மேல் இமைகளில் போட்டது போல் கீழ் பகுதியிலும் போடவேண்டும்.
இதில் கிரீம், லிக்விட், பவுடர் என வகைகள் உள்ளன. திக்கெனிங் மஸ்காரா ஒரு பக்கம் வெள்ளை மறுபக்கம் கருப்பு ஷேட்களில் வரும். அவை இமைகளை வசீகரமான வடிவில் அடர்த்தியாக காட்டும். திக்கனிங் மஸ்காரா மேல் சாதாரண மஸ்காரா போடும் போது செயற்கை இமைகள் பொருத்தியதுபோல் அடர்த்தியாக அழகாக காட்டும்.
கருப்பு தவிர கலர், கிளிட்டர்ஸ் மஸ்காரா வகைகள் பார்ட்டிகளுக்கு, விழாக்களுக்கு ஏற்றது.
மஸ்காரா பிரஷ்கள் பல இருந்தாலும் முக்கியமான ஆறு வகைகளை தெரிந்து கொள்வோம்.
பால் பிரஷ் (Ball brush).
சிலருக்கு கண்கள் ரொம்பவும் உள்ளடங்கி இருக்கும். இமைகளும் வெளியே தெரியாமல் இருக்கும். இந்த பிரஷ் கொண்டு கண்களுக்கு உள்ளே எளிதில் மஸ்காரா போடலாம். கண்கள் எடுப்பாக அழகாக்க இந்த பிரஷ் உதவும்.
வளைந்த பிரஷ் (Curved brush).
கண் இமைகள் வளைந்து இருந்தால் அதற்கு அழகான ஷேப் கொடுக்கும் இந்த வகை பிரஷ். இமைகளை அடிப்பகுதியில் இருந்து தூக்கி அடர்த்தியாக காட்ட வளைந்த பிரஷ் உதவும்.
ஹவர் கிளாஸ் பிரஷ் (Hour Glass brush).
பெரும்பாலும் கண்கள் இமைகள் நடுவில் வளைந்தும், ரெண்டு ஓரங்களில் குறுகியும் இருக்கும். அந்த ஷேப் ஐ அப்படியே கொடுக்கக்கூடிய பிரஷ்தான் இந்த ஹவர் கிளாஸ் பிரஷ்.
கோன் பிரஷ் (Cone brush).
கண்களுடைய உள் பகுதி மூக்கு ஆரம்பித்து இருக்கக்கூடிய சின்ன இமை முடிகள் துவங்கி ஓரத்தில் இருக்கும் நீண்ட இமைகள் முடி வரைக்கும் கோன் பிரஷ் கொண்டு சுலபமாக மஸ்காரா போடலாம். மஸ்காரா போடத் தெரியாதவர்கள் கூட கோன் பிரஷ் மூலமாக சுலபமாக போட்டு விடலாம்.
அறுங்கோணம் பிரஷ் (Rectangle Brush)
எளிதாகவும், அவசரமாக போட நினைக்கும்போது இந்த வகை பிரஷ் ஐ உபயோகிக்கலாம்.
கோம்ப் பிரஷ் (Comb brush).
ஒரு சிலருக்கு இமை முடிகள் அடிக்கடி ஒட்டிக் கொள்ளும். அவர்களுக்கென பிரத்யேக பிரஷ் இது. இதை வைத்து போடும்போது இமை முடிகள் தனித்தனியாக எடுத்துக்காட்டும்.
மஸ்காராவை பொறுத்தவரை மென்மையான இமைகளில் பயன்படுத்துவதால் தரமான, நல்ல பிராண்ட்டட் பொருட்களையே உபயோகிக்க வேண்டும். அப்போதுதான் கண்களில் எரிச்சல், அரிப்பு, அலர்ஜி ஏற்படாது.
மஸ்காராவை நீக்க மேக்கப் ரிமூவர் அல்லது தே எண்ணெய் கொண்டு நீக்கலாம். நல்ல உறக்கம், சத்தான உணவுகள் சூரிய நமஸ்காரம் போன்றவை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு கண்களையும் அழகாக காட்டும்.