ஹேர் கலரிங் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் ஹேர் கலரிங் செய்துகொள்கிறார்கள். சிலருக்கு ஹேர் கலரிங் செய்துகொள்ள ஆசை இருந்தாலும் அதனால் தலைமுடிக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா என்ற குழப்பங்கள் இருக்கின்றன. ஹேர் கலரிங் பற்றிய சந்தேகங்களுக்கு விடை அளித்து அதைப்பற்றி விரிவாக விளக்குகிறார் பிரபல அழகு கலை நிபுணர் வசுந்தரா அவர்கள்.
ஹேர் கலரிங் செய்துகொள்ளும் முன் செய்ய வேண்டிய முக்கியமான டெஸ்ட் என்ன?
பொதுவாக ஒவ்வொருவரின் சரும அமைப்பும் மற்றவரிடம் இருந்து மாறுபட்டு இருக்கும். அதனால் அழகு நிலையம் சென்று ஹேர் கலரிங் செய்துகொள்ளும் முன்பு பேட்ச் டெஸ்ட் செய்துகொள்வது அவசியம்.
குறிப்பிட்ட ஹேர் டையை காதின் பின்புறம் அப்ளை செய்து அரை மணி நேரம் கழித்து அதை வாஷ் செய்துவிட வேண்டும். இரண்டு நாட்கள் வரை பொறுத்து இருந்து பார்க்கவேண்டும். அந்த இடத்தில் ஏதாவது சரும அலர்ஜியோ அல்லது எரிச்சலோ இருந்தால் அவர்களுக்கு அந்த வித ஹேர் கலரிங் ஒத்துக்கொள்ளாது என்ற முடிவுக்கு வரலாம். எந்தப் பாதிப்பும் இல்லை என்றால் அவர்கள் மேற்கொண்டு ஹேர் கலரிங் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.
ஹேர் கலரிங்கின் நான்கு வகைகள்;
தற்போது அழகு நிலையங்களில் நான்கு விதமான ஹேர் கலரிங்கள் செய்யப்படுகின்றன.
1. மெட்டாலிக் ஹேர் டை:
இரும்பு, தாமிரம் போன்றவற்றிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு விதமான ஹேர் டை ஆகும். இது பவுடராகவும் கிடைக்கும். லிக்விட் ஆகவும் கிடைக்கும். ஆனால் இதை தற்போது பெரும்பாலானோர் விரும்புவதில்லை. இதில் கலந்திருக்கும் ரசாயனங்களின் விளைவாக சருமத்திலும் தலையிலும் அலர்ஜி, எரிச்சல் போன்ற பக்க விளைவுகள் உண்டாகும். இதனால் நிறைய பேருக்கு முடி கொட்டும் பிரச்னையும் ஏற்படுகிறது. இதை உபயோகித்தவர்களுக்கு நாளடைவில் முகம் முழுக்க கருப்பாகிவிடும். மேலாஸ்மா என்கிற பிரச்னையும் வந்துவிடும். இது பழைய ஹேர் டை முறையாகும். இதன் பக்க விளைவுகளைப் பற்றி அறியாமல் பலரும் இதை பல வருடமாக பயன்படுத்தி வருகிறார்கள். இதை தவிர்ப்பது மிகவும் நல்லது.
2. அனிலைன் ஹேர் கலரிங்:
இந்த வகையான ஹேர் கலரிங் புரதம் நிறைந்தது. புரோட்டீன் மற்றும் பாலிமர் அடிப்படையில் அமைந்த ஒரு ஹேர் டை ஆகும். இந்த ஹேர் டை அப்ளை செய்யும்போது ஸ்கால்ப்பில் ஒட்டாது. இதில் பக்க விளைவுகள் மிகவும் குறைவு. இதில் அம்மோனியா பிபிடி போன்ற கெடுதல் விளைவிக்கும் ரசாயனங்கள் இல்லை. மிகக் குறைவான ரசாயனங்கள்தான் இருக்கின்றன. இது சருமத்துக்கு எந்தவிதமான கெடுதலையும் உண்டாக்காது. அலர்ஜியும் ஏற்படுத்தாது.
இது முடிக்குள் இருக்கும் கார்டெக்ஸ் என்கிற பகுதியை பாதிக்காமல் பாதுகாக்கும். முடியை ப்ளீச்சிங் பெர்மிங் எல்லாமும் செய்யலாம். பலவிதமான வண்ணங்களில் தலைமுடியை ஹேர் கலரிங் பண்ண நினைப்பவர்களுக்கு அனிலைன் ஹேர் கலரிங் நல்ல சாய்ஸ். மறுபடியும் ரீகலரிங் பண்ணவும் ஏற்றது.
3. ஹெர்பல் ஹேர் கலரிங்:
இது கிட்டத்தட்ட இயற்கையான முறையில் செய்யப்படும் ஒரு ஹேர் கலரிங் ஆகும். இதில் ஹென்னா எனப்படும் மருதாணி, அவுரி பொடி, செம்பருத்தி போன்ற இயற்கைப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. சிலர் வெறும் ஹென்னா மட்டும் போட்டு ஹேர் கலரிங் செய்வார்கள். ஆனால், அது ஆரஞ்சு நிறத்தைக் கொடுக்கும். முதலில் ஹென்னா போட்டு தலையில் அப்ளை செய்து சில மணி நேரம் இடைவெளி விட்டு தலையை அலசிக்கொள்ளவும். அடுத்த நாள் அவுரி பொடியை தலையில் அப்ளை செய்து அலசி விட்டால் ஊதா போன்ற கருப்பு கலர் கிடைக்கும். இது கிட்டத்தட்ட நமது உண்மையான, ஒரிஜினல் தலைமுடியின் நிறத்தைப் போலவே கருப்பாக மாறிவிடும். எனவே இதை பலரும் விரும்புகிறார்கள். இந்த முறையில் எந்த அலர்ஜியும் வராது. இருந்தாலும் பேட்ச் டெஸ்ட் செய்துகொள்ள வேண்டியது அவசியம்.
4. ஹென்னா ஹேர் கலரிங்:
மருதாணி பொடிதான் ஹென்னா எனப்படுகிறது. இதில் காபி டிகாக்ஷன், தயிர், எலுமிச்சை சாறு முட்டை போன்றவற்றை ஒரு குறிப்பிட்ட அளவு கலந்து கொள்ளவும். இதை தலையில் அப்ளை செய்யும்போது ஒரு விதமான அடர்ந்த சிவப்பு கலந்த பிரவுன் கலர் வரும்.
நரைமுடி குறைவாக இருப்பவர்களுக்கு இதை கொஞ்சமாக அப்ளை செய்தால் போதும். ஆனால் நிறைய நரைமுடி இருப்பவர்களுக்கு இந்த பேக் போடும்போது தலை முழுக்கவும் அடர் சிவப்பு நிறத்தில் மாறிவிடும் இது ஒரு சிலருக்கு பிடிப்பதில்லை.
ஹேர் கலரிங் செய்துகொள்ளும் முன்பு கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்
கண்டிப்பாக பேட்ச் டெஸ்ட் எடுத்த பின்புதான் ஹேர் கலரிங் செய்ய வேண்டும். சிலருக்கு ஹென்னா ஹேர் கலரிங் கூட ஒத்துக்கொள்ளாது. அலர்ஜி போன்ற பிரச்னைகள் வரலாம். அவர்களுக்கு சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலே அழகுதான் என்று விட்டு விட வேண்டியது அவசியம்.
மேலே கூறப்பட்ட நான்கு விதமான ஹேர்டைகளில் மெட்டாலிக் ஹேர் டை அவ்வளவாக நல்லதில்லை. மீதி மூன்றில் எது வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். அனிலைன் ஹேர் கலரிங்தான் நிறைய பேர் விரும்பி செய்துகொள்கிறார்கள்.
பியூட்டி பார்லருக்கு சென்று அப்பாயின்ட்மென்ட் வாங்கிக்கொண்டு நமது தலைமுடிக்கும் உடல் நிலைக்கும் ஏற்ற மாதிரியான ஹேர் கலரிங் எது என்று அவர்களிடம் டிஸ்கஸ் செய்து பின்பு நமக்கான ஹேர் கலரிங் செய்துகொள்ளலாம். பொதுவாக ஹேர் கலரிங் செய்துகொள்பவர்களுக்கு தனியாக ஷாம்பு, கண்டிஷனர் என்று இருக்கிறது. அதை சரியாக உபயோகிக்க வேண்டும் இதனால் தலைமுடி உதிர்தல் பிரச்னை வராமல் இருக்கும். தலைமுடியின் நிறம் வெளுத்துப் போகாமல் இருக்கும்.
தொகுப்பு; எஸ்.விஜயலட்சுமி