

பல நூற்றாண்டுகளாக, வறண்ட, அரிப்பு மற்றும் எரிச்சலூட்டும் சருமத்திற்கு சிகிச்சையளிக்க கூழ்ம ஓட்ஸ் அதாவது கொலாய்டல் ஓட்ஸ் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) 2003 ஆம் ஆண்டில் கூழ் ஓட்மீலை ஒரு தோல் பாதுகாப்பாளராக அதிகாரப்பூர்வமாக வகைப்படுத்திய போதிலும், நிபுணர்கள் கூறுகையில், இந்த அதிசய மூலப்பொருள் தோல் பராமரிப்பு உலகில் அதன் நியாயமான பங்கைப் பெறவில்லை.
ஆனால், சமீபகாலமாக, மாய்ஸ்சரைசர்கள் மற்றும் ஷாம்புகள் முதல் ஷேவிங் கிரீம்கள் வரை - இப்போது சந்தையில் கூழ் ஓட்மீலை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் அழகுசாதனப் பொருட்களின் எழுச்சி மிகப் பரந்ததாக இருக்கிறது. இது வரவேற்கத்தக்க மாற்றம் என்கிறார்கள் டெர்மட்டாலஜிஸ்டுகள் (தோல் சிகிச்சை நிபுணர்கள்).
இதையே தனது இன்ஸ்டாகிராம் பதிவில் எடுத்துரைத்த, தோல் மருத்துவரான டாக்டர் ரங்லானி, "இது வறண்ட, உணர்திறன் வாய்ந்த சருமத்திற்கு சிறந்தது என்பதோடு அடோபிக் டெர்மடிடிஸ் மற்றும் பிற வகையான இக்சிமா எனப்படும் அரிப்புத் தன்மையுடன் கூடிய சரும அழற்சி, சொரியாசிஸ் எனப்படும் தடிப்புத் தோல் அழற்சி மற்றும் கீமோதெரபியின் மூலம் வரக்கூடிய முகப்பரு பிரச்னைகளுக்கும் கூட மிகச்சிறந்த சிகிச்சை நன்மைகளைக் கொண்டுள்ளது" என்று எழுதினார்.
கூழ் ஓட்மீல் என்பது ஓட்ஸை நன்றாக அரைத்து, பின்னர் அவற்றைக் கொதிக்க வைத்து கூழ்மப் பொருளைப் பிரித்தெடுப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. நீங்கள் பெறுவது பட்டுப் போன்ற அமைப்புடன் கூடிய வெண்மையான நீர் - அல்லது பயன்படுத்தத் தயாராக இருக்கும் கூழ் ஓட்மீல் சாறு.
மேலும், மும்பையின் பாட்டியா மருத்துவமனையின் தோல் மருத்துவரான டாக்டர் சௌரப் ஷா கூறுகையில், "இது ஒரு குறிப்பிட்ட வகை ஓட்மீல் ஆகும், இது ஈரப்பதத்தை தக்க வைப்பதன் மூலம் சருமத்தை ஈரப்பதமாக்குகிறது அத்துடன் சருமத்தை பளபளப்புடன் வெண்மையாக்கவும் உதவுகிறது. இதை கிரீம், லோஷன் அல்லது தூளாக்கி பெளடராகவும் பயன்படுத்தப்படலாம். என்கிறார்.
ஓட்மீல் என்ன செய்யும்?
டாக்டர் ரங்லானியின் கூற்றுப்படி, இது அவெனந்த்ராமைடுகளைக் கொண்டுள்ளது, இவை தோலில் உள்ள ‘சார்பு அழற்சி’ இரசாயனங்களைக் குறைக்கும் சக்தியை அளிக்கின்றன. (இந்த ரசாயனங்களே தோலில் அரிப்பு, எரிச்சல், சிவப்புத் தடிப்பு ஏற்படக் காரணமாகின்றன என்பதால் இவற்றை கட்டுப்படுத்தும் சக்தியை இந்த அவெனன்ந்த்ராமைடுகள் கொண்டிருப்பது ஓட்மீலைப் பொருத்தவரை வரவேற்கத் தக்க அம்சங்களில் ஒன்றாகிறது)மேலும்,
அதில் உள்ள மாவுச்சத்து மற்றும் பீட்டா-குளுக்கன் ஆகியவை சருமத்தின் வறட்சியைப் போக்கக்கூடிய நீர்ச்சத்துக்களைப் பிடித்து வைக்க உதவுகின்றன. அவை சருமத்தின் ஈரப்பதத்தை காக்கின்றன என்கிறார் டெர்மட்டாலஜிஸ்ட்.
யாரெல்லாம் பயனடைய முடியும்?
இது வறண்ட சருமத்திற்கு சிறந்தது
எரிச்சல், அழற்சி அல்லது அரிக்கும் தோலழற்சியால்(eczema-prone skin) பாதிக்கப்பட்ட சருமத்திற்கும் (குறிப்பாக அடோபிக் டெர்மடிடிஸ்) இது ஏற்றது.
அமெரிக்கன் அகாடமி ஆஃப் டெர்மட்டாலஜி, கடுமையான வெயில் பாதிப்புக்கு உட்பட்ட சருமம் மற்றும் சிக்கன் பாக்ஸுக்கு கூட கூழ் ஓட்மீல் குளியலைப் பரிந்துரைக்கிறது.
எப்படிப் பயன்படுத்தலாம்?
இதற்கு, வெதுவெதுப்பான நீரில் கூழ் ஓட்ஸ் சேர்க்கவும். 10 முதல் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். குளித்த பிறகு, சருமத்தை மெதுவாக உலர வைக்கவும், போதுமான ஈரப்பதத்தை விட்டுவிடுங்கள். பின்னர், தோல் இன்னும் ஈரமாக இருக்கும்போது ஒரு மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள்.
மேற்கண்ட முறையில் முயற்சித்துப் பாருங்கள். ஓட்மீல் சிகிச்சை என்பது நம்மூர் கடலை மாவுக் குளியல் போன்றது தான். அதனால் மோசமான பக்கவிளைவுகள் எதுவும் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை.
இதோ வெயில் காலம் தொடங்கி அதன் கடுமையான முகத்தைக் காட்டத் தொடங்கி விட்டது. அக்னி நட்சத்திர காலம் தொடங்கியதும் அது தன் கோர முகத்தையும் காட்டக்கூடும். எனவே இப்போதே சருமத்தை மென்மையாகவும், வெயில் பாதிப்புகள் இன்றியும் வைத்துக் கொள்ள நாம் நிச்சயம் முயற்சி எடுத்தாக வேண்டும்.
கூழ்ம ஓட்மீல் குளியல் என்பது இது கொஞ்சம் எளிதானது தான். செய்து பார்த்துவிட்டு உங்கள் அனுபவங்களை கல்கி ஆன்லைனில் பகிர்ந்துகொள்ளுங்கள்.