கூந்தல் பராமரிப்புக்கு ஈஸி டிப்ஸ்!
கருகருவென்று நீண்ட கூந்தலை யார்தான் விரும்ப மாட்டார்கள்? ஆனால் இந்த அவசரகாலத்தில் கூந்தல் பராமரிப்பெல்லாம் சாத்தியப்படும் விஷயமா? என்று சிந்தித்து நீண்ட முடியை குட்டை முடியாக கத்தரித்துக் கொள்பவர்கள் உண்டு. அவர்கள் மட்டுமல்ல முடியை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என விரும்பும் அனைவருக்காகவும் இந்த எளிய டிப்ஸ்கள்.
மருதாணி தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் என்றாலும் சிலர் தலைமுடியை வரண்டு போகவும் செய்யும் என்பார்கள். ஆனால் நெல்லிக்காயுடன் மருதாணி இலையும் சேர்த்து அரைத்து தலையில் தடவுவதால் முடி வறண்டு போகாது. அது மட்டுமல்ல, இந்த ஹென்னா நெல்லி பேக் வறண்ட எண்ணெய் பசை நார்மல் ஆகிய மூன்று வகை கூந்தலுக்கும் பொருந்தும்.
சரி ஹென்னா நெல்லி பேக் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
மருதாணி இலைகள் ஒரு கைப்பிடி, முழு நெல்லிக்காய் அரை கைப்பிடி அளவுகளில் எடுத்து இரண்டையும் விழுதாக அரைத்து முடியின் வேர்க்கால்களில் படும்படி நன்கு தடவ வேண்டும் சுமார் ஒரு மணி நேரம் ஊறவைத்து பிறகு தரமான மிதமான ஷாம்புவால் தலைமுடியை அலசி விட வேண்டும். வாரம் ஒரு முறை இப்படி செய்தால் உடல் குளிர்ச்சியாகும் தலைமுடியும் நன்கு வளரும்.
பொதுவாக தலைக்கு ஹென்னா போட்டால் சைனஸ் தொல்லை ஏற்படும் என்பதும் பலருடைய கருத்து. ஆனால் ஹென்னாவில் எலுமிச்சைச்சாறு சேர்க்காமல் தலையில் தடவினால் சைனஸ் பிரச்சனை ஏற்படாது என்கிறார்கள் அழகு கலைஞர்கள்.
வாரம் ஒரு முறை ஆயில் மசாஜையும் செய்து வந்தால் நல்லது. தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் 50 கிராம் எடுத்து லேசாக சூடுபடுத்தி அதை விரலால் தொட்டுக்கொண்டு முடியின் வேர்க்கால்களில் படும்படி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். அரைமணி நேரம் கழித்து தலையை ஷாம்பூ போட்டு அலசி விட வேண்டும் வாரம் இரு முறை இந்த ஆயில் மசாஜை தொடர்ந்து செய்து வந்தால் வறட்சியால் முடி முரடாக மாறுவதை தவிர்க்கலாம்.

அடுத்து வீட்டிலிருக்கும் எளிய பொருளான வெந்தயம். முடி பராமரிப்புக்கு உகந்த பேக் இது.
25 கிராம் வெந்தயத்தை முதல் நாள் இரவே ஒரு கப் தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் நன்றாக ஊறி இருக்கும் வெந்தயத்தை மைபோல அரைத்து முடிவேர்க்கால்களில் படும்படி நன்றாகத் தடவ வேண்டும். அரைமணி நேரம் கழித்து சீயக்காய் அல்லது மைல்ட் ஷாம்பு போட்டு கூந்தலை அலசினால் தலையும் சுத்தமாவும், முடியும் பட்டு போல மாறிவிடும். வெந்தயம் முடியின் வேர்க்கால்களை நன்றாக பலப்படுத்த செய்யும் ஒரு அற்புதமான மருந்து.
இந்த எளிமையான வழிகளால் நீண்ட கூந்தலை பராமரித்து மகிழ்வோமா?