
மூக்கு சிலருக்கு கிளி மூக்குபோல் இருக்கும். சிலரின் மூக்கைப் பார்த்தால் நீண்டு இருக்கும். சிலருக்கு சின்ன மூக்காக இருக்கும். எள்ளுப் பூவை போன்ற மூக்கை உடையவர்கள் மிகவும் சிறப்பு பெற்றவர்கள் என்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். பல்வேறு விதமான மூக்கு அமைப்பு உடையவர்கள் பற்றிய லட்சண சாஸ்திரம் சொல்லும் குறிப்புகளை இதில் காண்போம்.
சிலர் மூக்கைப் பார்த்தால் மிருதுவாகவும், சர்மையாகவும், நீண்டும், துவாரங்கள் வித்தியாசம் இல்லாமலும் சிறியனவாகவும் சமமாகவும் இருக்கும். அதைப் பார்க்கும்பொழுதே ஒரு அழகு தோன்றும். அப்படிப்பட்ட மூக்கை உடையவர்கள் சகல கலைகளிலும் வல்லவர்களாகவும், நல்லவர்களாகவும் இருப்பார்கள்.
பக்தி உள்ளவர்களாகவும், அதிர்ஷ்டசாலிகளாகவும் இருக்கும் இவர்களுடைய குடும்பத்தில் சகலவிதமான சம்பத்துகளும் விருத்தி அடையுமாம். இவர்களுடைய கணவனும், புத்திரர்களும் மிகவும் அன்பாக இருப்பார்கள். தீர்க்காயுளுடன், சுமங்கலியராகவும், மங்களகரமாகவும் வாழ்வார்கள் என்கிறது மூக்கைப் பற்றிய லட்சண குறிப்பு.
மூக்கின் மேல் இடப்பக்கத்தில் எள்ளைப்போன்ற மச்சங்கள் இருந்தால் தன தானிய விருத்தியும், வாகன பாக்கியமும் உண்டாகும். மதிக்கத்தக்க அளவுக்கு பொருளாதார வசதிகளுடனும் இத்தகைய மூக்குடையவர்கள் விளங்குவார்கள் என்று மூக்கைப் பற்றிய சாஸ்திரம் கூறுகிறது.
அதேபோல் மங்கையரின் மூக்கு எள்ளுப்பூவைப் போல் இருந்தால் இவர்கள் எப்போதும் மனம் மகிழ்ச்சியாகவும், மனதிருப்தியுடன் இருப்பார்கள். இவர்கள் லட்சுமி கடாட்சம் உடையவர்கள். கணவன், புத்திரர்கள் அனைவரும் பிரபல ராஜயோகம் உடையவர்களாக விளங்குவார்களாம். செல்வாக்கும் புகழும் அதிகார விருத்தியும் உண்டாவதோடு, இவர்கள் எந்த வேலைகளுக்கு முயன்றிருந்தாலும் அதிக சிரமமின்றி வெற்றி அடைவார்களாம்.
மூக்கு நீளமாகவும், அழகாகவும் அமைந்திருக்கும் பெண்களின் ஆயுள் ஆரோக்கிய ஐஸ்வர்ய அபிவிருத்தி அடையும் .இவர்கள் உண்மையும் நேர்மையும் உடையவர்களாக இருப்பார்கள் என்கிறது மூக்கழகை விவரிக்கும் லட்சண சாஸ்திரம்.
மூக்கு என்றால் எல்லோருக்கும் நினைவிற்கு வருவது கிளியோபாட்ராதான். ஆண்களில் கமலஹாசன், நாசர் மூக்கை யாரும் மறந்து விடமுடியாது.
மூக்கு அழகாக இருக்கவேண்டும் என்றால் அடிக்கடி சளித்தொல்லை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதைப் போல் சைனஸ், ஆஸ்துமா போன்ற தொந்தரவுகள் இருந்தாலும் இருமல் தும்மல் என்று அடிக்கடி மூக்கில் கை வைக்க வேண்டிய நிலைமை ஏற்படும். மேலும் சிலர் மூக்கை உறிஞ்சியபடி இருப்பார்கள். இவர்கள் அடிக்கடி மருந்து, தைலம் போன்றவற்றையும் மூக்கின் மீது தேய்க்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.
அப்பொழுது மூக்கின் வடிவம் மாறிவிட வாய்ப்பு இருக்கிறது. ஆதலால் மூக்கு அழகுடன் இருக்க வேண்டுமென்றால் மூக்கில் நீர் வடியாமலும், மூக்கைச் சுற்றி எந்த நோயும் வராமலும் பத்திரமாக பாதுகாத்தால் அதுவே அழகுடைய மூக்காக திகழும். இப்படி மூக்கும் அழகாக இருந்தால்தான் பேச்சும் சுத்தமாக வரும். ஆதலால் மூக்கை பேணி காப்போம். அதுவே உன்னிப்பாக காது கேட்கும் திறன், நல்ல பேச்சு ஆகியவற்றை கொண்டுவரும்.