பெண்கள் தங்கள் 30 வயதைக் கடந்த பிறகு சருமத்தில் சில மாற்றங்களைக் காணலாம். எனவே அவர்களின் சருமப் பராமரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். முதுமை என்பது இயற்கையானது என்றாலும், உங்களது சருமத்தை நீங்கள் பராமரிப்பதால் ஓரளவுக்கு இளமை மற்றும் பொலிவை நீங்கள் அடைய முடியும். இந்தப் பதிவில் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கடைபிடிக்க வேண்டிய சருமப் பராமரிப்பு குறிப்புகள் பற்றி பார்க்கலாம்.
சூரிய பாதுகாப்பு அவசியம்: சருமப் பராமரிப்பு என்றதும் முதலில் நீங்கள் கவனிக்க வேண்டியது சூரிய பாதுகாப்பு தான். சூரிய ஒளியின் தாக்கத்தால் சுருக்கங்கள், கோடுகள் மற்றும் கரும்புள்ளிகள் ஏற்படலாம். நீங்கள் 30 வயதைக் கடந்த பெண்ணாக இருந்தால் வெளியே செல்லும்போது சன் ஸ்கிரீன் பயன்படுத்துங்கள். இது உங்களை சூரிய வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க உதவும்.
தினசரி சருமப் பராமரிப்பு அவசியம்: நீங்கள் 30 வயதைக் கடந்ததும் தினசரி சருமப் பராமரிப்பை வழக்கத்தில் ஏற்படுத்திக் கொள்வது நல்லது. இதில் காலை மாலை என இரு வேளையும் உங்கள் சருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் மற்றும் ஊட்டமளித்தல் போன்றவை அடங்கும். இது எப்போதும் உங்கள் சருமத்தை நீரேற்றமாகவும், மிருதுவாகவும் வைத்திருக்க உதவும்.
நீரேற்றத்துடன் இருங்கள்: வெளிப்புறத்தில் இருந்து உங்கள் சருமத்தைப் பராமரித்தாலும், உங்கள் உடலின் உள்ளே இருந்து சருமத்திற்குத் தேவையான விஷயங்களைக் கொடுக்க வேண்டியது அவசியம். உங்கள் சருமத்தை பொலிவாக வைத்திருக்கவும் ஆரோக்கியமான நிறத்தை பராமரிக்கவும் தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் சருமத்திற்குத் தேவையான விட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களைப் பெறுவதற்கு பழங்கள், காய்கறிகள் மற்றும் ஆரோக்கியக் கொழுப்புகள் நிறைந்த சீரான உணவை உட்கொள்ளுங்கள்.
போதுமான தூக்கம்: சருமப் பராமரிப்பில் தூக்கம் மிகவும் முக்கியமானது. நீங்கள் சரியாக தூங்கவில்லை என்றால், உங்கள் சருமம் சோர்வடைந்து, கருவிழி மற்றும் முகத்தில் கோடுகள் ஏற்பட வழிவகுக்கும். எனவே ஒவ்வொரு நாளும் தினசரி எட்டு மணி நேரம் தூங்குவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இது உங்கள் சருமம் புத்துயிர் பெற்று தன்னைத்தானே சரி செய்து கொள்ள உதவும்.
சுற்றுச்சூழல் மாசுபாடுகளில் இருந்து சருமத்தை பாதுகாத்தால், இயற்கையான பொலிவை நீங்கள் அடைய முடியும். மேலும் சரும பராமரிப்பில் உங்கள் கண்களுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். கண்களைச் சுற்றியுள்ள மென்மையான தோல், வயதான அறிகுறிகளைக் காட்ட வாய்ப்புள்ளது. வீக்கம், கருவளையங்கள் மற்றும் கோடுகள் போன்றவற்றை நீக்குவதற்கு, கண்களையும் கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள்.
30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மேலே குறிப்பிட்டுள்ள எல்லா விஷயங்களையும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். இதன் மூலமாக இயற்கையான முகப்பொலிவைப் பெற்று என்றும் இளமையுடன் நீங்கள் இருக்கலாம்.