மக்கள் உணவுக்காக பயன்படுத்தும் பல பொருட்களில் நெய் இன்றியமையாத ஒன்றாகும். குறிப்பாக நெய்யை பயன்படுத்தி சமைக்கும் உணவுகள் சுவையாகவும் ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் இருக்கும். நெய்யை எந்த உணவில் சேர்த்தாலும் அதன் சுவை பன்மடங்கு அதிகரிக்கும். அந்த அளவுக்கு நெய்யானது உணவின் தரத்தை மேம்படுத்துகிறது. ஆனால் இந்த நெய்யை உணவைத் தவிர நம்முடைய சருமந் பொலிவுக்காகவும் பயன்படுத்தலாம்.
பல பெண்களுக்கு தங்கள் சருமத்தை முறையாக பராமரிக்கத் தெரிவதில்லை. அப்படியும் சிலர் தங்களின் சருமத்திற்கு கவனம் செலுத்தினாலும், சந்தையில் கிடைக்கும் ரசாயன பொருட்களையே வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் பலருக்கு அவர்கள் எதிர்பார்க்கும் முகப்பொலிவு கிடைப்பதில்லை. ஆனால் எளிதாக வீட்டில் இருக்கும் நெய்யைப் பயன்படுத்தி சருமத்தை பளபளப்பாக்க முடியும் என்றால் நம்புவீர்களா?
முகத்தில் நெய் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள்:
நெயில் நிறைந்திருக்கும் சத்துக்கள் நமது சருமத்தை மென்மையாக்கி முகத்தில் உள்ள கருவளையம், பருக்கள், தழும்புகள் போன்றவற்றை நீக்கும். சிலருக்கு முகப்பரு வந்தால் அவ்வளவு எளிதில் போகாது. நாள் கணக்கில் முகத்திலேயே இருந்து தழும்புகளாக மாறிவிடும். நெய்யில் நிறைந்திருக்கும் விட்டமின்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலம் தழும்புகளை நீக்கி சருமத்தை பளபளப்பாகி முகப்பொலிவை மீட்டுத்தரும்.
நெய்யில் அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உள்ளது. இது தோலுக்கு ஆரோக்கியத்தைத் தந்து பளபளப்பான சருமத்தை ஏற்படுத்தும். மேலும் உடலில் உள்ள தோல் சுருக்கங்களை நீக்குவதற்கும் நெய்யில் உள்ள விட்டமின்கள் உதவுகிறது. இதன் மூலமாக வயதானாலும் இளமையான தோற்றத்திலேயே இருப்பதற்கு நெய் உதவுகிறது.
தினசரி சமையலறையில் அதிக வெப்பத்தில் இருக்கும் பெண்களுக்கு வியர்வை அதிகமாக வெளியேறி முகத்தில் சுருக்கங்களும், அரிப்புகளும் ஏற்படும். இதுபோன்ற சமயங்களில் முகத்தில் நெய் தடவினால் முகப்பொலிவை மீட்டெடுக்கலாம். அதேபோல சில பெண்களுக்கு எப்போதுமே வறண்ட சருமம் இருக்கும். அத்தகைவர்களும் நெய்யை சருமத்தில் தடவும்போது எப்போதும் ஈரப்பதமாக இருக்க உதவும். தினசரி உதட்டில் நெய் தடவி வந்தால் அதில் உள்ள வெடிப்பு பிரச்சனைகள் நீங்கும். கருவளையம் உள்ளவர்கள் இரவு தூங்குவதற்கு முன் கண்களைச் சுற்றி நெய் தடவினால் அவை விரைவில் குணமாகும்.
இப்படி நெய்யுடன் எதையும் கலக்காமல் வெறும் நெய்யை மட்டுமே பயன்படுத்தி முகப்பொலிவை நீங்கள் அடைய முடியும். இல்லை அதில் ஏதாவது கலந்து முகத்தில் தடவ விரும்புகிறீர்கள் என்றால், குங்குமப்பூ அல்லது மஞ்சள் சேர்த்து முகத்துக்கு தடவி வந்தால், சருமத்திற்கு கூடுதல் நன்மைகள் கிடைக்கும்.