

சிலருக்கு முடி நல்ல அடர்த்தியாக, நீளமாக இருக்கும். இருப்பினும் செம்பட்டையாக ஆகிவிடும். அவற்றை கருகருவென்று வளர வைக்க நாம் என்னவெல்லாம் செய்யலாம் என்பதை இப்பதிவில் காண்போம்.
வாரம் இரண்டு முறை தேங்காயை அரைத்து எடுத்து பாலை தலையில் தேய்த்து குளித்தால் முடி கருகரு என்று இருக்கும். செம்பட்டை நிறம் மாறும்.
தேங்காய் எண்ணெய் தடவிக்கொள்ளும் வழக்கம் உள்ளவர்கள் அந்தத் தேங்காய் எண்ணெயில் காயவைத்த செம்பருத்தி பூ மற்றும் ஆலமரத்தின் இளம் வேர்களையும் பொடி செய்து கலந்து வைத்துக்கொண்டு பயன்படுத்தினால் முடி கருப்பாக வளரும்.
ஆலிவ் எண்ணெயை தினமும் தலையில் தடவி வந்தால் முடி செம்பட்டை நீங்கி கறுக்கும்.
வாரம் ஒருமுறை தவறாமல் முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து ஐந்து நிமிடம் ஊறிய பின் குளிக்கவும். இது போல் தொடர்ந்து மூன்று மாத காலம் செய்து வந்தால் எந்த காரணத்தால் முடி கொட்டினாலும் நின்றுவிடும். கருகருவென முடி வளரவும் செய்யும்.
வேப்பம் பூவை இலேசாக தணலில் காண்பித்து பொறுக்கக்கூடிய சூட்டுடன் உச்சந்தலையில் தேய்த்து வந்தால் கூந்தல் செழிப்பாக வளரும்.
அவ்வப்போது தலைக்கு குளிக்கும் பெண்கள் தலையில் கொஞ்சம் நல்லெண்ணெய் தடவிய பிறகு தலைக்கு குளிக்கவேண்டும். எண்ணெய் தடவிக்கொள்ளாமல் வெறும் தலைக்கு குளித்தால் கூந்தலின் மிருது தன்மை போய் கூந்தலின் நிறம் செம்பட்டையாகவும் ஆகிவிடும்.
கரிசலாங்கண்ணி சாறையும் நெல்லிக்காய் சாறையும் சமஅளவு எடுத்து அதில் ஆறு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து இரும்பு கடாயில் இளம் சூட்டில் காய்ச்சி நீர் வற்றிய பின் அந்த எண்ணெய்யை தடவிவர கருகருவென்று கூந்தல் வளரும்.
நில ஆவாரை, மரிக்கொழுந்து இரண்டையும் சமஅளவு எடுத்து நன்றாக அரைத்து தலையில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவைத்து குளித்தால் முடி கருகரு என்று வளரும்.
மசாஜ் செய்யும்போது ஆமணக்கு எண்ணெய் உபயோகிக்கலாம். மசாஜ் செய்ய முடியாதவர்கள் தலை குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக ஆமணக்கு எண்ணெய் தடவி குளித்தாலும் செம்பட்டை மாறி முடி கருப்பாக வளரும்.
சப்பாத்தி கள்ளிகளில் சிவந்த மலர்களை சேகரித்து தேங்காய் எண்ணெயில் இட்டு சூடாக்கி வடிகட்டி இந்த எண்ணெயை தினமும் பயன்படுத்தி வந்தால் தலைமுடி அடர்த்தியாக வளருவதோடு முடி கொட்டுவதும் நின்று சட்டென்று கருப்பாகும்.