

தமிழ்நாட்டில் தற்போது குளிர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு குளிரின் தாக்கம் அதிகம் உள்ள நிலையில், பருவநிலை மாற்றத்தால் உடல் நலம் பாதிக்கப்படுவதோடு சரும வறட்சி, கருந்திட்டுகள், முகப்பருக்கள் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் இதற்கு சரியான தீர்வாக இருக்கிறது. அந்த வகையில் நெல்லிக்காய் மிட்டாய் செய்முறை குறித்து இப்பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்
நெல்லிக்காய் - 5
கேரட் - 1 கப்
பீட்ரூட் - 1 கப்
உப்பு - சிறிதளவு
சோளமாவு - 1 டீஸ்பூன்
நெய் - சிறிதளவு
சாட் மசாலா - சிறிதளவு
செய்முறை;
ஒரு இட்லி பாத்திரத்தில் நெல்லிக்காய் 5, கேரட் ஒரு கப் பீட்ரூட் ஒரு கப் எடுத்துக்கொண்டு இம்மூன்றையும் முதலில் பத்து நிமிடங்களுக்கு வேகவைக்கவும். பின்பு வெளியில் எடுத்து நெல்லிக்காயில் உள்ள விதைகளை அகற்றி விட்டு, கேரட, பீட்ரூட் நெல்லிக்காய் மூன்றையும் மிக்ஸியில் நன்கு அரைக்கவேண்டும்.
பின்பு கடாயை அடுப்பில் வைத்து சூடேற்றி மிக்ஸியில் அரைத்த நெல்லிக்காய் கலவையை சேர்த்து நன்கு கிளறவேண்டும். கிளறிக்கொண்டே சர்க்கரை, ஒரு சிட்டிகை உப்பு, சாட் மசாலாவையும் சேர்த்து நன்கு கிளறிவிடவும். கரைத்து வைத்துள்ள சோளமாவை சில நிமிடங்களுக்கு பிறகு இதனுடன் சேர்த்து கலந்துவிடவும்.
இந்தக் கலவை கெட்டியாகும் பாதத்திற்கு வந்ததும் சிறிது நெய் சேர்க்கவும் பின்பு அடுப்பை அணைத்து விட்டு இறக்கி வைக்கவும். மிதமான சூட்டில் இருக்கும்போது சிறிய உருண்டைகளாக பிடிக்கவும். இதுதான் சுவையான சருமத்தை பொலிவாக்கும் நெல்லிக்காய் மிட்டாய்.
6 மாதங்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும் இந்த நெல்லிக்காய் மிட்டாயை காற்று புகாத கண்ணாடி ஜாடையில் சேமித்து வைத்து, தினமும் காலை வெறும் வயிற்றில் 1 அல்லது 2 மிட்டாய்களை சாப்பிட குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய சரும பிரச்னைகளை தவிர்க்கலாம்.
நெல்லிக்காயை பல வழிமுறைகளில் உணவு முறையில் சேர்த்துக்கொள்ள சருமத்திற்கு மட்டுமல்ல குளிர்காலம், கோடை காலம் என அனைத்து காலங்களிலும் உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கிறது. மேலும் செரிமான மண்டலம் சீராக்குவதோடு சர்க்கரை நோய் மற்றும் PCOS பாதிப்பு உள்ளவர்கள் நெல்லிக்காய் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.