

இளநரை போக்க மூலிகை எண்ணெய்
இளவயதிலேயே நரை முடி பிரச்னை இன்று பெரும்பாலான பெண்களுக்கு உள்ளது. அதற்கான காரணம் என்ன? அதற்கான தீர்வு என்ன? என்பதைக் இந்த பதிவில் பார்ப்போம்.
முதல் காரணம் — வேலைப்பளு காரணமாக, சரியான நேரத்தில் புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுக்காதது மிக முக்கியமான காரணமாகும். மேலும், இன்றைய பெண்கள் நாகரீகம் என்ற பெயரில் தலைக்கு எண்ணெய் தேய்ப்பதை தவிர்த்து விடுகிறார்கள்.
இரண்டாம் காரணம் — அதிக நேரம் கண்விழித்து எலக்ட்ரானிக் சாதனங்களில் வேலை செய்வதால் தூக்கமின்மை மற்றும் உடல் சூடு ஏற்படுகிறது. இதுவும் இளநரைக்கும் முடி உதிர்வுக்கும் முக்கிய காரணமாக அமைகிறது. அதைப் போக்க சில எளிய இயற்கை வழிகள் என்ன என்பதை பார்ப்போம்.
இளநரை போக்க மூலிகை எண்ணெய்
தேவையான பொருட்கள்:
பெரிய நெல்லிக்காய் – 20
கருவேப்பிலை – ஒரு கொத்து
வெந்தயம் – ½ கப்
கருஞ்சீரகம் – 2 ஸ்பூன்
வேப்பிலை – ஒரு கைப்பிடி
ஆவரம்பூ – ஒரு கைப்பிடி
துளசி இலை – ஒரு கைப்பிடி
தேங்காய் எண்ணெய் – 1 லிட்டர்
விளக்கெண்ணெய் – ¼ லிட்டர்
நல்லெண்ணெய் – ½ லிட்டர்
தயாரிக்கும் முறை:
நெல்லிக்காய்களின் கொட்டையை நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும். ஆவரம்பூவை சுத்தம் செய்து கொள்ளவும்.
கருவேப்பிலையின் காம்பை நீக்கி வைக்கவும். அடுப்பில் இரும்பு வாணலியை வைத்து, மிதமான தீயில் முதலில் விளக்கெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதனுடன் நல்லெண்ணெய் சேர்க்கவும்.
பிறகு நறுக்கிய நெல்லிக்காயை சேர்த்து பொறிய விடவும். பின்னர் ஆவரம்பூ, கருவேப்பிலை, வேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறவும்.
இறுதியாக அதில் வெந்தயம் மற்றும் கருஞ்சீரகத்தை சேர்த்து மிதமான தீயில் எண்ணெயை காயவைக்கவும்.
எண்ணெய் நல்ல மணத்துடன் காய்ந்து, உள்ள பொருட்கள் நன்றாக எண்ணெயில் மூழ்கும்படி இருக்குமாறு கிளறி மூடி வைக்கவும்.
இந்த கலவையை அதே இரும்பு வாணலியிலேயே மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை வைத்து, தினமும் ஒருமுறை சூடாக்கி வைக்கலாம்.
இறுதியாக எண்ணெயை துணியில் வடிகட்டி, பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளவும்.
இந்த எண்ணெயை தேங்காய் எண்ணெயில் கலந்து தினமும் தலையில் தேய்த்து வந்தால், முடி உதிர்வது குறைந்து, நீண்ட கருமையான முடியை பெறலாம்.
இன்ஸ்டன்ட் ஹேர் கண்டிஷனர் (Instant Hair Conditioner)
துளசி மற்றும் செம்பருத்தி செடியின் இலைகள் தலா ஒரு கைப்பிடி எடுத்து, ஊறவைத்த வெந்தயத்துடன் சேர்த்து அரைத்து, தயிரில் கலந்து தலையில் தடவி
பேக் போல் ஒரு மணிநேரம் விட்டு குளித்து வரவும். வாரம் ஒருமுறை இதை செய்தால் போதும் இளநரை மற்றும் முடி உதிர்வு போன்ற பிரச்னைகள் காணாமல் போகும்.