முகத்திற்கும் உடலுக்கும் வயதாவது போல கைகளிலும் சுருக்கங்கள் தோன்றி வயதான தோற்றத்தை ஏற்படுத்தும். வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எப்படி கைச் சுருக்கங்களை அகற்றி அழகாக மிளிரச் செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தக்காளி - இதில் உள்ள லைக்கோபின் என்கிற பொருள் கைகளில் உள்ள சுருக்கத்தை எடுப்பதற்கு உதவி செய்கிறது. இரண்டு பெரிய தக்காளிகளை கழுவி சிறிதாக நறுக்கி மிக்ஸியில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி அடித்துக் கொள்ளவும். அதை ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொள்ளவும். இரண்டு கைகளையும் தண்ணீரில் நன்றாக கழுவி விட்டு தக்காளி சாறு உள்ள பாத்திரத்தில் கைகளை நனைத்து வைக்க வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து கைகளை கழுவி விடலாம். சில நாட்களிலேயே கைகள் அழகு பெறுவதுடன் சுருக்கமும் நீங்கி இருக்கும்.
தேங்காய் எண்ணெய், பீட்ரூட், கேரட் ஜூஸ்
இரண்டு கேரட் ஒரு பீட்ரூட் இவற்றை கழுவி தோல் சீவி மிக்ஸியில் அடித்து சாறு எடுத்துக் கொள்ளவும். ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய், ஒரு ஸ்பூன் பீட்ரூட் ஜூஸ், ஒரு ஸ்பூன் கேரட் ஜூஸ் மூன்றையும் ஒன்றாக கலக்கி கைகளில் தடவி பத்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் அலசவும். இந்தக்கலவை தோலில் உள்ள திசுக்களைப் புதுப்பித்து சுருக்கங்களை அகற்றி தோலை பளபளப்புடன் வைக்கிறது. கேரட், பீட்ரூட் ஜூஸை பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்தும் பயன்படுத்தலாம்.
எலுமிச்சைச் சாறு- எலுமிச்சை சாறு இயற்கையான ஒரு நிறமி. இது சூரிய ஒளியால் கைகள் கருப்பாவதை தடுத்து தோல் சுருக்கங்களையும் தடுக்கிறது. இரண்டு ஸ்பூன் எலுமிச்சைச் சாறுடன் ஒரு ஸ்பூன் சர்க்கரையை கலந்து அந்த கலவையை கைகளில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் அலசவும்
எலுமிச்சை சாறுடன் இரண்டு டீஸ்பூன் பால் கலந்து அதையும் கைகளில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவி வந்தால் அது தோலுக்கு ஈரப்பதத்தை அளித்து சுருக்கங்களை நீக்கும்.
ஓட்ஸ் மாவு- ஒரு முட்டையை உடைத்து மஞ்சள் கருவை மட்டும் எடுத்துக்கொண்டு, ஒரு ஸ்பூன் ஓட்ஸ் மாவு, ஒரு ஸ்பூன் தேன், ஆலிவ் ஆயிலையும் சில துளிகள் விட்டு நன்றாக கலக்கி அதை கைகளில் தடவி மசாஜ் செய்து 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். இது கைகளுக்கு அழகையும் பளபளப்பையும் தந்து, சுருக்கங்களையும் நீக்கிவிடும்.
பாதாம் பருப்புகள் - ஏழு பாதாம் பருப்புகளளை இரவு நீரில் ஊற வைத்து, காலையில் தோலை உரித்து விட்டு மிக்ஸியில் நீர் சேர்த்து, அரைத்து எடுக்கவும். அதை கைகளில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவலாம். பாதாம் எண்ணெயையும் இதே போல தடவி கழுவி விடலாம்.
வாழைப்பழக்கூழ் – இதில் ஏராளமான மினரல்களும் விட்டமின்களும் உள்ளன நன்கு பழுத்த வாழைப்பழத்தை மசித்து அவற்றை கைகளில் தடவி அரை மணி நேரம் கழித்து, வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவிக் கொள்ள வேண்டும். கைகளை ஈரப்பதத்துடன் வைத்து சுருக்கங்களையும் நீக்குகிறது.