
1. தலைக்கு சீயக்காய்தூள் மட்டும் தேய்த்தால் முடி வறட்சியாக இருக்கும். கஞ்சியுடன் தேய்த்தால் பட்டுப்போல் மிருதுவாக மாறி விடும்.
2. தலைமுடி வளர்ச்சிக்கு மிகப்பெரிய எதிரி பேன் தொல்லைதான். சீதாப்பழத்தின் விதைகளை பொடி செய்து நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி தலைக்குத் தேய்த்துக் குளித்தால் பேன் தொல்லை அறவே நீங்கிவிடும்.
3. வாரம் ஒருமுறை தவறாமல் முடக்கத்தான் கீரையை அரைத்து,தலையில் தேய்த்து ஐந்து நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இது போல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துப் பாருங்கள். எந்தக் காரணத்தால் முடி கொட்டினாலும் நின்று விடும். இந்தக்கீரை நரை விழுவதையும் தடுக்கும். கருகரு வென கூந்தல் வளரவும் செய்யும்.
4. தலையில் உள்ள சொட்டை மற்றும் வழுக்கை மறைய, சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி, செம்பருத்திப் பூவுடன் கலந்து அரைத்து அந்த சாற்றை மேற்குறிப்பிட்ட இடங்களில் தடவினால் தலைமுடி வளர வாய்ப்புண்டு.
5. சீயக்காயை அரைக்கும்போது அதனுடன் வேப்பிலையும் கடுக்காயையும் அரைத்து வைத்துக்கொண்டு உபயோகித்தால் பேன்,பொடுகுத்தொல்லை குறைந்துவிடும்.
6. கோடை உஷ்ணத்தால் தலைமுடி எண்ணெய்ப் பசை காய்ந்து வறண்டு காணப்படும். இதைத் தவிர்க்க நான்கு டீஸ்பூன் வால்மிளகு, இரண்டு டீஸ்பூன் வெந்தயம் இவற்றுடன் சிறிது கசகசாவைச் சேர்த்து, பசும்பாலில் ஊறவைத்து அரைக்கவும்.இந்தக் கலவையை தலையில் தேய்த்து இருபது நிமிடங்கள் கழித்துக் குளித்தால் கூந்தல் வறட்சியின்றி இருக்கும்.
7. தலைமுடி கொட்டுவதை தடுக்க எளிதான வழி பூண்டை நன்றாக நசுக்கி அதன் சாறு மயிர்க்கால்களில் படும்படி மென்மையாக மசாஜ் செய்து வருவதுதான். இதனால் ரத்தஓட்டம் அதிகரித்து முடி கொட்டுவது படிப்படியாக நின்றுவிடும்.
8. தலைக்கு எண்ணெய் தேய்த்தால் சீகைக்காய் பொடியுடன் ஒரு கரண்டி புளித்த தயிர் சேர்த்துக் கொள்ளுங்கள். தலைமுடி மிருதுவாக மாறிவிடும்.
9. கூந்தல் மிக அதிகமாக உதிரும்போது வெந்தயக் கீரையை அரைத்து தலையில் தடவிக்கொண்டு கொஞ்ச நேரம் கழித்து கூந்தலை அலசலாம்.
10. தலை நரை வரக் காரணம் வைட்டமின் " கே " சத்துக் குறைவே. எனவே நாவல் பழம், பீர்க்கங்காய், கறிவேப்பிலை, பீட்ரூட், நெல்லி, சுண்டைக்காய், பாகற்காய், பனைவெல்லம் போன்வற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும்.
11. பாகற்காய், புடலங்காய் விதைகளை தூக்கி எறியாமல், அவற்றை வெயிலில் நன்கு காயவைத்து, சீயக்காயுடன் சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலையில் பேன், பொடுகு தொல்லை அறவே போய்விடும்.
12. வறண்ட நார்மல் முடிக்கு முழு முட்டை, பால், ஆலிவ் ஆயில் சேர்த்து மிக்ஸ் செஞ்சு அதை தலைமுடி முழுக்க தேய்த்து ஒரு மணி நேரம் கழிச்சு அலசலாம். நல்ல ரிசல்ட் தெரியும்.