திருமணம் என்பது பாரம்பரியமான ஒரு வைபவம் ஆகும். வாழ்க்கை முழுவதும் ஒருவரின் கை பிடித்து நகரக்கூடியதன் தொடக்கம் தான் திருமணம். முன்னொரு காலங்களில் இந்த திருமணம் சிறிய கோயில்களில் நடைபெற்றது. தொடர்ந்து பெரிய கோயில்கள் சற்று ஆரம்பமாக நடைபெற்றது. தொடர்ந்து கலாச்சாரம் மாறியது. மண்டபங்களில் திருமணம் நடைபெற ஆரம்பித்தது. இப்படி காலத்திற்கு ஏற்ப திருமணத்தின் கலாச்சாரங்கள் நாளுக்கு நாள் மாறி வருகிறது.
அப்படித்தான் திருமணத்திற்கு உடுத்தக்கூடிய ஆடையும் கலாச்சாரமும் நாளுக்கு நாள் மாறியது. கூரப்புடவை, பட்டுபுடவையாக ஆனது. தொடர்ந்து தற்போது லெஹங்கா என்ற ஆடை நம்மை கட்டிபோட்டு விட்டது என்றே சொல்லலாம். மிக கிராண்டாக இருக்கும் இந்த லெஹங்காக்கள், மணமகளை ஜொலிக்க வைக்கிறது.
வட இந்திய திருமணங்களில் மட்டுமே கவனம் ஈர்த்த லெஹங்கா தற்போது தமிழ்நாட்டு இளம் பெண்களின் விருப்பமான திருமண உடையாக மாறி இருக்கிறது. திருமண வரவேற்பின்போது மணப்பெண்கள் பலரும் லெஹங்கா அணிவது அதிகரித்து வருகிறது. நீண்ட பாவாடை, வேலைப்பாடுகள் நிறைந்த ரவிக்கை, அதற்கேற்ற துப்பட்டா என இருந்த லெஹங்காவில் தற்போது பல்வேறு புதுமைகள் புகுத்தப்பட்டு வருகிறது.
சேலை, ப்ளவுஸ் என்றதுதான் நாளடைவில் பாவாடை தனியாக, சட்டை தனியாக அதற்கு மாராப்பாக துப்பட்டா என்று லெஹங்கா வழங்கப்படுகிறது. இதில் கொடுக்கப்படும் துப்பட்டாவை சேலை மாராப்பு அணிவது போன்று லெஹங்கா ஆடையில் போடுவார்கள்.
என்னதான் லட்சக்கணக்கில் பட்டுப்புடவை இருந்தாலும் பெண்கள், வரவேற்பு நிகழ்ச்சிகளில் இந்த லெஹங்காவை தான் அணிய விரும்புகிறார்கள். லெஹங்காவும் பல்வேறு வகையில் உள்ளது. அதற்கேற்ப விலை மாற்றம் செய்யப்படும்.
ஃபேஷன் துறையில் அதிகமாக பெண்களை கவரும் ரகங்களில் படேல் லெஹங்காவும் ஒன்று. மெஹந்தி, சங்கீத் போன்ற பகல்நேர திருமண நிகழ்வுகளில் மணமகளை ஜொலிக்க செய்யும் இந்த உடைகள். வெளிர் நிறங்களில் தான் பெரும்பாலும் கிடைக்கின்றன.
மாலைநேர நிகழ்வுகளில் தனித்து தெரிய விரும்பும் பெண்களுக்கு ஏற்ற ரகம் இதுவாகும். பட்டு, புரோக்கேட் மற்றும் ஜார்ஜெட் போன்ற துணி ரகங்களை கொண்டு இவ்வகை லெஹங்கா தயாரிக்கப்படுகிறது. தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்ற உலோக நிறங்களில் தயாரிக்கப்படுவது இதன் சிறப்பாகும்.
இடுப்பு முதல் கால் வரை பல்வேறு அடுக்குகளாக தயாரிக்கப்படும் அடுக்கு லெஹங்கா, அணிபவரின் அழகுக்கு அழகு சேர்க்கும். டல்லே முதல் ஆர்கன்சா வரை பல்வேறு துணி ரகங்களை பயன்படுத்தி குறைந்த எடையுடன் இது தயாரிக்கப்படுகிறது.
இதில் உங்களுக்கு பிடித்தமான பொருத்தமான லெஹங்காவைத் தேர்வு செய்து நீங்களும் அழகாக ஜொலிக்கலாம்.