முக அழகைக் கூட்டவும், சருமத்தைச் சுத்தம் செய்யவும் இயற்கையான வழியில் நாம் முயற்சி மேற்கொள்ள வேண்டும். இதற்காக நாம் அதிகம் செலவு செய்யவோ, அலையவோ வேண்டியதில்லை. அவ்வகையில், எளிதாக கிடைக்கும் அரிசியில் ஃபேஸ் பேக் செய்து, எப்படி முகத்தை சுத்தம் செய்யலாம் என இப்போது தெரிந்து கொள்வோம்.
அழகின் மீதான ஆர்வம் இன்றைய இளைஞர்களிடம் அதிகரித்துள்ளதை நம்மால் காண முடிகிறது. முகத்தில் சிறிய முகப்பரு வந்தால் கூட அது நம் அழகைக் கெடுத்து விடும் என வருந்துகின்றனர். அதனாலேயே அழகு சாதனப் பொருள்களை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். வெளியில் செல்லும் போது நம்மைச் சுற்றியிருக்கும் தூசுகளால் முகத்தில் அழுக்குகள் சேர்ந்து விடுகின்றன. இதனால் வேலைக்குச் செல்லும் ஆண், பெண் இருபாலரும் தங்கள் முகத்தை சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள அதிகமாக மெனக்கெடுகின்றனர்.
அழகு சாதன பொருள்கள் உடனடி நிவாரணம் தரக் கூடியவையாக இருக்கலாம். ஆனால், இதில் நமது தோலை பாதிக்கும் கெமிகல்ஸ் அதிகமாக நிறைந்துள்ளது. ஆகையால் வீட்டில் இருக்கும் உணவு பொருள்களைக் கொண்டே சில நிமிடங்கள் நேரம் ஒதுக்கி ஃபேஸ் பேக் போடலாம். இதற்கு முதல் தேர்வாக மிக எளிதாக கிடைக்கும் அரிசி இருக்கிறது.
தேவையான பொருள்கள்:
அரிசி, தேன், எலுமிச்சை, கிரீன் டீ
செய்முறை:
முதலில் அரிசியை எடுத்து மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த அரிசி மாவுடன் எலுமிச்சை சாற்றைச் சேர்த்து கலக்கி கொள்ளவும். பிறகு இந்தக் கலவையுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து, இதனுடன் சிறிதளவு கிரீன் டீ தண்ணீரைக் கலந்து நன்றாக கலக்கி விட வேண்டும். ஃபேஸ் பேக் கெட்டியாகவோ அல்லது மென்மையாகவே இல்லாமல், பாதியளவு கெட்டியாக இருப்பது நல்லது.
தயாரித்த ஃபேஸ் பேக்கை முகத்தில் தடவுவதற்கு முன், முகத்தை நன்றாக கழுவி உலர வைத்து சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அரிசி ஃபேஸ் பேக்கை தடவி, அரை மணி நேரத்திற்குப் பிறகு காய்ந்ததும் முகத்தை கழுவி விடலாம்.
அரிசி ஃபேஸ் பேக் உங்கள் முகத்தில் இருக்கும் அசுத்தங்களை வெளியேற்றி, இயற்கையான சருமத்தை மீட்டெடுக்க உதவுகிறது. மேலும், சருமத்தை ஈரப்பதமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. மந்தமான சருமத்தை புத்துயிர்ப் பெறச் செய்ய இந்த ஃபேஸ் பேக் துணை நிற்கிறது. இதிலிருக்கும் தேன் சருமத் தொற்றுகளைத் தடுத்து, சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. வைட்டமின் சி நிறைந்துள்ள எலுமிச்சை சாறு, ஆக்ஸிஜனேற்றியாக செயல்பட்டு சருமப் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
அரிசியில் இருக்கும் சில தானிய அமைப்புகள், உங்கள் முகத்தில் எரிச்சலை ஏற்படுத்தலாம். இருப்பினும், இது எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. தோல் பராமரிப்புக்கு மிகச் சிறந்ததாக அரிசி ஃபேஸ் பேக் பார்க்கப்படுகிறது. இதனை எந்த நேரத்திலும் வீட்டிலேயே மிக எளிதாக செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.