தலைமுடி என்பது ஒவ்வொருவரின் அழகிலும், தன்னம்பிக்கையிலும் முக்கிய அங்கம் வகிக்கிறது. தலைமுடி உதிர்வு, மெலிந்து போதல் போன்ற பிரச்சனைகள் பலரை பாதிக்கின்றன. இதற்கு தீர்வு காணும் வகையில், பலர் மொட்டை அடித்தால் முடி நன்றாக வளரும் எனக் கருதுகின்றனர். ஏனெனில், மொட்டை அடித்தால் முடி நன்றாக வளரும் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது. இதன் உண்மை என்ன என்பதை இந்தப் பதிவில் நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம்.
முடி வளர்ச்சியின் அறிவியல்: முடி வளர்ச்சி என்பது ஒரு சிக்கலான உயிரியல் செயல்முறை. நம் தலையில் உள்ள மயிர்க்கால்கள்தான் முடியின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைகின்றன. மயிர்க்கால்களில் உள்ள செல்கள் தொடர்ந்து பிரிந்து புதிய முடியை உருவாக்குகின்றன. இந்த செயல்முறை பல கட்டங்களைக் கொண்டது.
முதல் கட்டத்தில் முடியின் வேர் ஆழமாக வளர்ந்து தடிமனாகும். பின்னர் முடி வளர்ந்து நீளமாகும். மூன்றாவது கட்டம் ஓய்வு கட்டமாகும். இந்தக் கட்டத்தில் முடி வளர்ச்சி நின்று விடுகிறது. கடைசி நான்காவது கட்டத்தில், பழைய முடி உதிர்ந்து புதிய முடி வளரத் தொடங்குகிறது.
மொட்டை அடித்தால் முடி நன்கு வளருமா?
மொட்டை அடிப்பது என்பது முடியின் நீளத்தை குறைக்கும் செயல்முறையாகும். இந்த செயல்முறை முடியின் வேர் அல்லது மயிர்க்கால்களை பாதிப்பதில்லை. எனவே, முடியின் கட்டமைப்பில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை. சிலர் மொட்டை அடித்த பிறகு முடி வேகமாக வளர்வதாக உணர்கின்றனர். இது ஒரு மாயைதான். ஏனெனில், குறுகிய முடி நீளமாக வளர்வது நமக்கு வேகமாகத் தெரியும். அதேபோல மொட்டை அடிப்பதால் முடி அடர்த்தி அதிகரிக்கும் என்ற நம்பிக்கையும் பொதுவானது. ஆனால், இதற்கும் எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் இல்லை.
ஆய்வுகள் என்ன சொல்கிறது?
மொட்டை அடிப்பது முடி வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பதைக் கண்டறிய பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இப்படி நடத்தப்பட்ட பெரும்பாலான ஆய்வுகளில், மொட்டை அடிப்பது முடியும் வளர்ச்சியின் வேகம், அடர்த்தி அல்லது கட்டமைப்பில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை என்று தெரிவிக்கின்றன.
எனவே, மொட்டை அடிப்பது முடியின் தன்மையில் எவ்விதமான மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். முடி உதிர்வதற்கான உண்மையான காரணங்களை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆண்களில் Testosterone அதிகமாக இருக்கும்போது முடி உதிர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. சிலருக்கு மரபணுவும் முடி உதிர்வுக்கு காரணமாக இருக்கும். இரும்புச்சத்து, துத்தநாகம் போன்ற சத்துக்கள் குறைபாடு இருந்தால் முடி உதிர்வு ஏற்படலாம். நீங்கள் மன அழுத்தத்தை சந்திக்கும் நபராக இருந்தால், முடி உதிர்வு அதிகரிக்கச் செய்யும். மேலும், சில மருந்துகளின் பக்க விளைவாகவும் முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படும்.
முடி உதிர்வை சரிசெய்ய மருத்துவரை அணுகி சரியான சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும். மொட்டை அடித்தால் முடி நன்றாக வளரும் என்ற கருத்தை நம்ப வேண்டாம். உண்மையில் மொட்டை அடிப்பது முடியின் கட்டமைப்பில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. இதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும்.