பூவல்ல அது ஒரு பொக்கிஷம்: சாமந்திப் பூவின் மருத்துவ ரகசியங்கள்!
கோயில் பூஜைகளில் தவறாமல் இடம்பெறும் ஒரு பூ சாமந்திப்பூ. மெக்சிகோவை தாயகமாகக்கொண்டது சாமந்திப்பூ. இது ஜப்பான் நாட்டின் தேசிய மலர். பயிர்களை நாசம் செய்யும் பூச்சிகளை விரட்டுவதற்காக வேலி ஓரங்களில் பயிரிடப்படும் பூ. 12ம் நூற்றாண்டில் இதன் மருத்துவக் குணங்கள் முதன்முதலாக தெரிய வந்தது. அழகு, ஆரோக்கியம் என இரண்டிற்கும் மிகப் பயனுள்ளதாக இருக்கிறது சாமந்திப்பூ!
வெளியூர் சென்றுவிட்டு திரும்பியவுடன் உங்கள் கால்களில் சொரசொரப்பு ஏற்படுகிறது என்றால் அதற்கு சாமந்திப்பூக்களை ஒரு சட்டியில் போட்டு, அதில் வெந்நீர் ஊற்றி உங்கள் கால்களை அதில் கொஞ்ச நேரம் ஊறவைத்து, பிறகு எடுத்து பாருங்கள் வலி குறையும்.
குளிக்கும் நீரில் சாமந்திப்பூக்களை நிரப்பி குளிக்க நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும். வெயிலினால் கலை இழந்த முகத்தை முற்றிலும் அழகு பெறச் செய்ய துருவிய கேரட், சாமந்திப்பூ இதழ் சேர்த்து அரைத்து பாலில் அல்லது தயிரில் சேர்த்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து முகம் கழுவ, பொலிவிழந்த முகம் சரியாகும்.
சாமந்திப்பூ இதழ்களை உலரவைத்து, அதனை சூடான தண்ணீரில் சேர்த்து தேநீர் தயாரிக்கவும். தேநீர் ஆறிய பிறகு, இதனை ஃபேஷியல் டோனராக உபயோகிக்கலாம். சாமந்திப் பூவில் சருமத்தை ஆற்றக்கூடிய மற்றும் வீக்கத்தை எதிர்த்துப் போராடும் பண்புகள் இருப்பதால் இது எரிச்சல் நிறைந்த சருமத்திற்கு ஏற்றதாக இருக்கும்.
உலர்ந்த சாமந்திப்பூ இதழ்களை தயிர் அல்லது தேனுடன் கலந்து ஃபேஸ் மாஸ்க் ஒன்றை உருவாக்கவும். இதனை முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இவ்வாறு செய்வது சருமத்தை ஹைட்ரேட் செய்து, புத்துணர்ச்சி தரும்.
-கோவீ. ராஜேந்திரன்

