லிப்ஸ்டிக் வாங்கும்போது நீங்க செய்யும் இந்த 'சின்ன தப்பு' உங்க அழகையே கெடுத்துடும்!

lipstick shades
lipstick shades
Published on

பெண்களின் ஒப்பனைப் பெட்டியில் இருக்கும் பல பொருட்களில், உதட்டுச் சாயத்திற்கு தனி இடமுண்டு. இதழ்களின் ஒரு சிறிய மெருகூட்டல் கூட முகத்தைப் பொலிவாக்கிவிடும். ஆனால், சில நேரங்களில் நாம் ஆசையாக வாங்கும் லிப்ஸ்டிக்கின் நிறம் நம் முகத்திற்குப் பொருந்தாமல் இருப்பது போல் தோன்றும். இதற்குக் காரணம் சருமத்தின் நிறத்திற்கும், தேர்ந்தெடுக்கும் உதட்டுச் சாயத்திற்கும் இடையே ஏற்படும் முரண்பாடே ஆகும்.

உங்கள் சருமம் சிவப்பாகவோ அல்லது மாநிறமாகவோ இருந்தாலும், அதன் அடியில் ஒளிந்திருக்கும் உண்மையான நிறமே மேக்கப் ரகசியம். தவறான நிறத்தைத் தேர்ந்தெடுப்பதால் ஏற்படும் 5 முக்கிய தவறுகளையும் அதற்கான தீர்வுகளையும் இங்கே காண்போம்:

1. சருமத்தின் உட்புறச் சாயலை கவனிக்காமல் இருப்பது

உங்கள் மணிக்கட்டுப் பகுதியில் உள்ள நரம்புகளைப் பாருங்கள். அவை பச்சை நிறத்தில் தெரிந்தால் நீங்கள் 'பொன்னிறச் சாயல்' கொண்டவர். இந்தியப் பெண்களுக்குப் பொதுவாகவே மஞ்சள் அல்லது தங்க நிறச் சாயல் சருமத்தில் கலந்திருக்கும். உங்கள் நரம்புகள் நீலம் அல்லது ஊதா நிறத்தில் தெரிந்தால் நீங்கள் 'ரோஜா நிறச் சாயல்' கொண்டவர்.

தவறு: பொன்னிறச் சாயல் கொண்டவர்கள், ரோஜா நிறச் சாயலுக்குரிய வெளிர் இளஞ்சிவப்பு நிறத்தை அணிந்தால் முகம் வெளுத்துப்போய் நோயாளியைப் போலத் தெரியும்.

தீர்வு: பொன்னிறச் சாயல் உள்ளவர்கள் ஆரஞ்சு, பழுப்பு அல்லது தக்காளி சிவப்பு நிறங்களையும்; ரோஜா நிறச் சாயல் உள்ளவர்கள் இளஞ்சிவப்பு, ஊதா கலந்த சிவப்பு நிற லிப்ஸ்டிக்கையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
மிஸ் பண்ணாதீங்க! உங்களுக்காக சில பயனுள்ள அப்டேட்ஸ்!
lipstick shades

2. சரும நிறத்தைவிட மிகவும் லேசான நிறத்தைத் தேர்ந்தெடுப்பது

நம் ஊர் வெயிலில் முகம் லேசாகக் கருத்திருக்கும்போது, மிக மெல்லிய நிறத்தில் உதட்டுச்சாயம் பூசினால் அது உதட்டில் ஏதோ மாவு பூசியது போன்ற தோற்றத்தைத் தரும்.

தீர்வு: உங்கள் சரும நிறத்தை விட ஒரு படி அடர்த்தியான நிறத்தைத் தேர்வு செய்யுங்கள். 'பழுப்பேறிய ஆரஞ்சு' மற்றும் 'பிரவுன் நிறம் பொருத்தமாக இருக்கும்.

3. உதட்டுச் சாயத்தை மட்டும் நேரடியாகப் பயன்படுத்துவது

லிப்ஸ்டிக் மட்டும் போட்டால் அது சில மணி நேரங்களில் உதட்டின் ஓரங்களில் கசிய ஆரம்பிக்கும். இது பார்ப்பதற்கு முகம் எண்ணெய் வழிவது போலக் காட்டும்.

தீர்வு: பயன்படுத்தும் லிப்ஸ்டிக்கின் நிறத்திற்குப் பொருத்தமான லிப் லைனரால் உதட்டின் ஓரங்களில் மெல்லிய கோடு வரைந்து, அதன் பிறகு உட்புறம் உதட்டுச் சாயத்தைப் பூசவேண்டும். இது உதட்டிற்கு ஒரு கச்சிதமான வடிவத்தைத் தருவதோடு, சாயம் கலையாமல் இருக்க உதவும்.

4. ஷைனிங் vs மென்மையான சாயம்

உதடுகள் மின்ன வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், சருமத்தின் தன்மைக்கேற்ப இதைக் கையாள வேண்டும். ஏற்கனவே எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள், உதட்டிற்கும் அதிகப்படியான ஷைனிங் தன்மையுள்ள சாயத்தைப் போட்டால் முகம் முழுவதும் பிசுபிசுப்பாகத் தெரியும்.

தீர்வு: வறண்ட சருமம் உள்ளவர்கள் மின்னும் சாயத்தையும், எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் மென்மையான சாயத்தையும் தேர்வு செய்வது சிறந்தது.

இதையும் படியுங்கள்:
சன்ஸ்கிரீன் லோஷன் - ஆடம்பரமல்ல, அவசியம்! ஏன் இவ்வளவு டிமாண்ட்?
lipstick shades

5. பற்களின் நிறத்தைக் கவனிக்காதது

இது ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் நீங்கள் தேர்ந்தெடுக்கும் நிறம் உங்கள் பற்களை மஞ்சளாகக் காட்ட வாய்ப்புள்ளது. அதிகப்படியான மஞ்சள் அல்லது ஆரஞ்சு கலந்த சிவப்பு நிற உதட்டுச் சாயம் பூசுவது பற்களை மஞ்சளாகக் காட்டும்.

தீர்வு: நீல நிற அடிப்படை கொண்ட சிவப்பு நிறத்தைப் பூசினால், அது பற்களைப் பளீச்சென்று வெண்மையாகக் காட்டும்.

தற்போது அடர்த்தியான பூச்சுகளை விட, லேசான 'இதழ் வண்ணத்தில் உள்ள லிப்ஸ்டிக் ட்ரெண்டிங்கில் உள்ளது. அது உதட்டிற்கு இயற்கையான இளஞ்சிவப்பு நிறத்தைத் தரும். கடையில் லிப்ஸ்டிக் வாங்கும் முன், கை மணிக்கட்டில் தேய்த்துப் பார்க்காமல், உங்கள் முகத்திற்கு அருகில் அந்த நிறத்தை வைத்துப் பார்த்து வாங்குவதே புத்திசாலித்தனம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com