

பீமா சங்கர் (Bhimashankar) என்பது மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றாகும். இங்கு மூலவர் பீமா சங்கர் சுயம்பு மூர்த்தி, அம்மன் கமலாட்சிபச்சிஷ்டா தேவி. இங்கு மோட்ச குண்டம், குடசாரண்ய தீர்த்தம், சர்வ தீர்த்தம் மற்றும் பீமா நதி ஆகியவை உள்ளன.
நாங்கள் சென்னையில் இருந்து பூனா சென்று அங்கு தங்கி அருகில் உள்ள கோவில்களை எல்லாம் பார்த்துவிட்டு அடுத்தநாள் அதிகாலை 4 மணிக்கு எல்லாம் பூனாவிலிருந்து டாக்ஸி பிடித்து 3 1/2 மணி நேரம் பயணம் செய்து பீமா ஷங்கர் கோவிலை அடைந்தோம். வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் அதனை தவிர்த்து விட்டு புதன்கிழமை சென்றதால் நின்று நிதானமாக தரிசனம் செய்ய முடிந்தது.
தல சிறப்பு:
இங்கு மூலவர் கூம்பு வடிவில் அமைந்திருப்பது தலத்தின் சிறப்பாகும். கோவில் மிகவும் பழமையானது. சஹயாத்ரி மலைத்தொடரில் அமைந்துள்ளது. முக்கிய சாலையில் இருந்து மூன்று கிலோமீட்டர் தூரம் கீழே படிக்கட்டு மூலம் இறங்க வேண்டும். மலைச்சரிவு பள்ளத்தாக்கில் கோவில் அமைந்துள்ளது. 500 படிகள் உள்ளன. காரில் செல்பவர்கள் வேறொரு பாதை வழியாக கோவிலுக்கு மிக அருகில் செல்ல முடியும். நாங்கள் காரில் பயணம் செய்ததால் கோவிலுக்கு மிக அருகில் சென்று இறங்கி அபிஷேகம், அர்ச்சனைக்கான பொருட்களையும் வாங்கிக் கொண்டு தரிசிக்கச் சென்றோம்.
இயற்கை காடுகள், பல்வேறு வகையான வன விலங்குகள் மற்றும் அழகிய நிலப்பரப்புகளுடன் இணைந்த ஒரு புனித யாத்திரை மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கான சிறந்த இடம் இது. புகழ்பெற்ற மராட்டிய மன்னன் சிவாஜியும் இக் கோவிலுக்கு நிறைய நன்கொடைகள் வழங்கியுள்ளார். 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக் கோவில் பின்னர் 18 ஆம் நூற்றாண்டில் நானா பட்னாவிஸ் போன்ற மராட்டிய ஆட்சியாளர்களால் சில பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இக்கோவில் நாகரா (Nagara) பாணியிலான கட்டிடக்கலையின் கலவையாகும். கடல் மட்டத்திலிருந்து 3000 அடி உயரத்தில் அடர்ந்த காடுகளுக்கு இடையே பீமா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது இக்கோவில்.
கோவிலின் முன் மண்டபம் மிகவும் விசாலமானது. இக்கோவிலில் வித்தியாசமான இரண்டு நந்திகள் உள்ளன. வெளிப்புற தரைமட்டத்திற்கு கீழே கருவறை அமைந்துள்ளது. படிக்கட்டுகளில் இறங்கிச் சென்றால் உள்ளே ஒரு அடி உயர லிங்கம், மூலவர் வெள்ளி கவசத்துடன் காணப்படுகிறார். விடியற்காலையில் மட்டும் கவசங்கள் அகற்றப்பட்டு பூஜிக்கப்படுகிறது. கருவறையில் லிங்கத்தைச் சுற்றி அமர்ந்து அபிஷேக ஆராதனையை நாமே நம் கையால் செய்ய அனுமதிக்கின்றனர்.
சனி பகவான் சிறப்பு சன்னதி:
ஈசனுக்கு நேர் எதிரே காக்கை வாகனத்தின் மேல் அமர்ந்து சனி பகவான் தனி சன்னதியில் காணப்படுகிறார். இந்த சன்னதிக்கு மேல் இரண்டு தூண்களுக்கு மத்தியில் பெரிய அழகிய போர்த்துக்கீசிய மணி காணப்படுகிறது. பாஜிராவ் பேஷ்வாவின் சகோதரர் சிம்னாஜி அப்பா என்பவர் போர்த்துக்கீசியர்களை வென்று இரண்டு பெரிய மணிகளை வெற்றியின் சின்னமாக கொண்டு வந்ததாகவும், அவற்றில் ஒன்றை பீமா சங்கர் கோயிலுக்கும், மற்றொன்றை கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள மேநோ வாலி சிவன் கோவிலுக்கும் காணிக்கையாக அளித்ததாக கூறப்படுகிறது.
தல வரலாறு:
ராவணனின் தம்பியான கும்பகர்ணனுக்கு பீமாசுரன் என்ற மகன் இருந்தான். இவன் தன்னுடைய தந்தையை ராமபிரான் கொன்றதை அறிந்து பிரம்மாவை நோக்கி கடும் தவம் செய்து அறிய சக்திகளைப் பெற்றான். அந்த சக்திகளை பயன்படுத்தி தேவர்களையும், முனிவர்களையும், சிவ பக்தர்களையும் துன்புறுத்தினான். அதில் முக்கியமான காமரூபேஸ்வரன் என்ற சிவ பக்தனான மன்னனையும் சிறையில் அடைத்து துன்புறுத்த, மன்னன் சிறையில் இருந்த பொழுதும் சிவலிங்கத்தை வைத்து வணங்கினான். இதனால் கோபமடைந்த பீமாசுரன் வாளால் சிவலிங்கத்தை அழிக்க முயன்றான். அப்பொழுது சிவபெருமான் அங்கிருந்து தோன்றி, கடும் போருக்குப் பிறகு பீமாசுரனை அழித்தார். தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சிவபெருமான் அங்கேயே ஒரு ஜோதிர் லிங்கமாக சுயம்புவாக காட்சியளித்தார். இதுவே பீமா சங்கர்.
திரிபுராசுரன் கதை:
மற்றொரு புராணத்தின் படி திரிபுராசுரன் என்ற அரக்கன் சிவபெருமானை வேண்டி கடும் தவம் செய்தான். சிவன் அவனுக்கு அழிவில்லாத வரத்தை வழங்க, அந்த சக்தியை தவறாகப் பயன்படுத்தி மூன்று உலகங்களையும் துன்புறுத்தத் தொடங்கினான். தேவர்களுடைய பிரார்த்தனையால் சிவபெருமான் அன்னை பார்வதியுடன் அர்த்தநாரீஸ்வரராகத் தோன்றி திரிபுராசுரனை அழித்து உலகை காத்தார் என்றும் கூறப்படுகிறது.
எப்படி செல்வது?
அருகில் உள்ள ரயில் நிலையம் பூனா. இங்கிருந்து 125 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பஸ் அல்லது தனியார் வாகனங்களில் செல்லலாம்.
இக்கோவிலைப் பார்வையிட சிறந்த நேரம் அக்டோபர் முதல் பிப்ரவரி வரை. மழைக்காலங்களில் பலத்த மழை பெய்யும் என்பதால் செல்வதை தவிர்க்கலாம். கோவில் காலை நாலரை மணி முதல் 12 மணி வரையிலும் மதியம் 12 மணி முதல் ஒன்பதரை மணி வரையிலும் திறந்திருக்கும்.