
வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை வைத்தே நம் அழகை மேம்படுத்திக் கொள்ளலாம். அதற்கான சில தகவல்கள் இதோ.
கோடை வந்துவிட்டால் அனைவரும் வெட்டி வேர் வாங்கி வைத்திருப்போம். ஒரு தேக்சாவில் தண்ணீர் வைத்து அதில் சிறிது வெட்டி வேரையும், கைப்பிடி வேப்பிலையையும் போட்டு கொதிக்க விட்டு ஆறியதும் தண்ணீரை வடிகட்டி அதில் முகம் கழுவி பாருங்கள். முகத்தில் படிந்த அழுக்கான கருமை நீங்கி புத்துணர்ச்சியுடன் காட்சியளிப்பீர்கள். வெளியில் சென்று வருபவர்கள் தினசரி இதை செய்யும் பொழுது முகத்தில் பருக்கள் வராமலும் காத்துக்கொள்ள முடியும்.
மரத்தில் இருக்கும் தேங்காயை பறிக்கும் பொழுது சில இளங்காயும் விழுந்துவிடும். அந்த வழுக்கையுடன் இருக்கும் இளநீரை சேர்த்து வழித்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி அதை அப்படியே உடலில் பூசி வைத்திருந்து சிறிது நேரம் கழித்து குளித்தால் நல்ல குளிர்ச்சி கிடைக்கும். சருமமும் மென்மையாகும்.
வீட்டில் நிறைய சந்தன வில்லைகள் வாங்கி வைத்திருப்போம். சந்தன பேளாவில் உபயோகித்து காய்ந்துபோன சந்தனமும் மீந்து இருக்கும். இதனுடன் சிறிதளவு மஞ்சள், கைப்பிடி வேப்பிலையை மைபோல அரைத்து வியர்க்குரு, வேணல்கட்டிகள், கொப்புளங்கள் உள்ள இடங்களில் நன்றாக தடவி அரைமணி நேரம் கழித்து குளித்து வர வேனல் கட்டிகள் வராமல் தடுக்கும். கொப்புளம் குறைந்து வடுக்கலில்லாமல் மறையும்.
சாதாரணமாக உதட்டுக்கு கலர் வரவேண்டும் என்றால் பீட்ரூட் சாரை தொடர்ந்து தேய்ப்போம். அதனுடன் சிறிதளவு பொடித்த சர்க்கரையையும் தேனையும் கலந்து உதடுகளில் தடவி ஏழு நிமிடம் வைத்திருந்து மசாஜ் செய்து அதை அப்படியே மென்மையான துணியால் துடைத்து எடுத்துவிட வேண்டும். தினசரி இப்படி செய்து வந்தால் உதடுகள் மென்மையாக மாறும் வெடிப்புகள் இருந்தாலும் சரியாகும்.
கைப்பிடி செம்பருத்தி இலை, அதன் பூக்கள் மற்றும் வேப்பிலை கைப்பிடி அளவு இவற்றை நன்றாக அரைத்து இதனுடன் பொடித்த வெந்தயத்தினையும் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு சேர்த்து, ஒரு கிண்ணம் தேங்காய் எண்ணெயில் விட்டு அடி பிடிக்காமல் மிதமான சூட்டில் காய்ச்சி ஆறவிட்டு, வடித்து வைத்துக்கொண்டு அந்த எண்ணெயை தலைக்கு தேய்த்து குளித்தால் முடி உதிர்வது நிற்கும். முடியிலும் ஒரு பளபளப்பு தெரியும்.