

உடலில் என்ன பாதிப்பு இருந்தாலும் அது முகத்தில்தான் தெரியும். நோய்த்தொற்று இருந்தாலும் அரிப்பு, மருக்கள் ஏற்படலாம். சில எளிய வீட்டு வைத்தியம் முறைகளை கடைபிடிக்க எளிதாக சரும பிரச்னைகளுக்கு தீர்வு பெறலாம்.
எண்ணெய் சருமத்தை சரிசெய்ய
பப்பாளி விழுது_2டீஸ்பூன், வேப்பிலை பொடி -1டேபிள் ஸ்பூன், முல்தானிமட்டி-1டீஸ்பூன் எடுத்து பன்னீர் விட்டு கலந்து பேஸ் பேக் ஆக போடவும். இதை அரைமணி நேரம் வெதுவெதுப்பான நீரில் கழுவ அதிகப்படியான எண்ணெய் வழிவது சரியாகி சருமம் நன்றாக இருக்கும்.
வறண்ட சருமத்துக்கு
100மிலி தே எண்ணையுடன் 10கிராம் சுருள் பட்டையை போட்டு காய்ச்சி வைத்துக்கொள்ளலாம்.அதிலிருந்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் எடுத்து முகத்தில் தடவி பத்து நிமிடம் கழித்து கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.
கரும்புள்ளி, பருக்களை நீக்க
கஸ்தூரி மஞ்சள் பொடி, உலர் ரோஜா இதழ் பொடி, நாகப்பழக் கொட்டயின் பொடி தலா 5கிராம் எடுத்துக்கொண்டு கற்றாழை ஜெல்லுடன் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி வர நாளடைவில் கரும்புள்ளி, பருக்கள் வருவது மட்டுப்படும்.
சரும பளபளப்பிற்கு
இந்த சீசனில் சருமம் சாம்பல் பூத்ததுபோல் வெளிறி இருக்கும். இதை போக்க அஸ்வகந்தா பொடி, சந்தனப் பொடி, கஸ்தூரி மஞ்சள் பொடி, ஆரஞ்சு தோலின் பொடி தலா 5கி எடுத்துக்கொண்டு 25மி லி பாலில் கலந்து முகத்திற்கு பேக் போடவும். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ சாம்பல் பூத்த தன்மை மாறி நல்ல பளபளப்பு கிடைக்கும்.
வெள்ளரி விதை, ரோஜா இதழ்கள் இரண்டையும் வெந்நீரில் ஊறவைத்து அரைத்து அதை முகத்தில் தடவி நன்றாக காய்ந்த பிறகு அலம்பிவிடவும். வெயிலின் கருமை, மங்கு போன்றவை மாறி கலராக சருமம் நன்றாக இருக்கும்.
வியர்க்குரு, கவரிங் நகை போடுவதால் ஏற்படும் பொரி பொரியான தடிப்புக்கு…
வெட்டிவேர் பொடி 10கிராம், ஆம்லா பொடி_10கிராம் எடுத்து போதுமான அளவு பன்னீர் சேர்த்து வேர்க்குருவின் மீது பூசி கழுவிட நல்ல குணம் கிடைக்கும்.
முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க
கடலைமாவு -6டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் -1/4டீஸ்பூன், கடுகு எண்ணெய் -2டீஸ்பூன், லேவண்டர் ஆயில்-2சொட்டு எல்லாவற்றையும் கலந்து ரோமங்கள் உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால் நாளடைவில் ரோமங்கள் நீங்க ஆரம்பித்து மீண்டும் வளராது.
வேண்டாத ரோமங்களை அகற்றும் சிகிச்சை செய்த பின்பு அந்த இடங்களில் சிவப்புத்தன்மையும், லேசான எரிச்சலும் ஏற்படும். கற்றாழை ஜெல்லை அந்த இடங்களில் தடவி ஊறிய பிறகு கழுவிட எரிச்சலும், சிவப்புத்தன்மையும் மாறும்.
கிளிசரின், லெமன் ஆயில் இரண்டு சொட்டு எடுத்துக்கொண்டு இவற்றில் கற்றாழை ஜெல்லை கலந்து முகத்தில் தடவி கழுவி வர சருமம் மிருதுவாகும்.
சிறிதளவு கற்றாழை ஜெல்லுடன் பத்து சொட்டு பாதாம் எண்ணெய் விட்டு முகத்தில் தடவிவர வறண்ட சருமம் சரியாகும்.
ஒரு காட்டன் துணியை நான்காக மடித்து அதில் சிறிதளவு கற்றாழை ஜெல்லை போட்டு கழுத்து, முகங்களில் மேல் நோக்கி தடவவும் சிறிது நேரம் கழித்து துடைத்துவிட்டு முகம் கழுவிவர வியர்வை, மேக்கப், அழுக்கு இவற்றை நீக்க உதவும்.
ஒரு டீஸ்பூன் பச்சைப் பயறு பொடியுடன், ஒரு டீஸ்பூன் கற்றாழை ஜெல், இரண்டு சொட்டு ஆரஞ்சு எண்ணெய் சேர்த்து முகத்தில் போட்டு மேல் நோக்கி மசாஜ் செய்து வந்தால் சருமம் தொய்வடையாமல் சாஃப்ட் ஆக இருக்கும்.