

பொதுவாக மார்கழி மாதம் முதல் மாசி மாதம் வரை குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கும். பனிப்பொழிவின் காரணமாக முதலில் அதிகம் பாதிக்கப்படுவது நமது சருமம்தான். அது வறட்சியினால் சொரசொரப்பாக மாறிவிடும். அதனை தொடர்ந்து எப்படி மென்மையாக பாதுகாப்பது என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.
நல்லெண்ணெய் மசாஜ்
நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வந்தால் சருமத்தில் ஏற்படும் கருத்திட்டுகள் மறைந்து சருமம் பளபளப்பாக இருக்கும். சிறிது நல்லெண்ணெய் எடுத்து வெதுவெதுப்பாக சூடு செய்து ஒரு கிண்ணத்தில் வைத்துக்கொண்டு, அதிலிருந்து சிறிது எடுத்து முகம், கழுத்து மற்றும் கைகளில் நன்றாக தடவி மசாஜ் செய்வதுபோல தேய்த்துவிடுங்கள்.
ஒரு பத்து நிமிடம் ஊற வைத்து, பின் பாசிப்பயறு மாவு அல்லது கடலை மாவு தேய்த்து சூடான தண்ணீரில் குளித்து வந்தால் சருமம் மென்மையாக இருக்கும்.
தேங்காய் எண்ணெய் குளியல்
தேங்காய் எண்ணெயை சூடாக்கி, உச்சந்தலை முதல் கால் வரை நன்றாக தேய்த்துவிட்டு பிறகு நல்ல சூடான தண்ணீரில் குளிக்கலாம். இரவில் படுக்கும் முன்பு மாய்ஸ்சரைசர் அல்லது தேங்காய் எண்ணெயை முகம் மற்றும் கழுத்துப் பகுதி, கை, கால்களில் தடவி, கால்களுக்கு சாக்ஸ் அணிந்துகொண்டு படுத்தால் குளிரின் தாக்கம் குறையும்.
தயிர் அல்லது பாலாடை + மஞ்சள்
ஒரு கிண்ணத்தில் தயிர் அல்லது பாலாடை எடுத்துக் கொண்டு அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு குழைத்து, முகம் மற்றும் கைகளில் பூசி சிறிது நேரம் ஊறவைத்து, பின் கடலை மாவு தேய்த்து குளித்தால் பாலாடையில் உள்ள கொழுப்பு சத்து சருமத்தை மிருதுவாக இருக்க உதவும். மஞ்சள் சேர்ப்பதால் முகப்பரு மற்றும் பிற சருமநோய்கள் கட்டுப்படுத்தப்படும்.
தேங்காய்ப்பால் குளியல்
ஒரு மூடி தேங்காயை துருவி பால் எடுத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி, அதை தலைமுடியின் வேர் பகுதிகளில் நன்கு படும்படி தேய்த்து விடவும். நன்கு மசாஜ் செய்து ஊற வைக்கவும். தேங்காய்ப்பாலுடன் சிறிது சந்தனம் கலந்து முகத்திற்கும் கைகளுக்கும் பேக் போல போட்டு ஊறிய பிறகு, ஷாம்பூ போட்டு குளித்தால் முடி மற்றும் சருமம் மென்மையாக இருக்கும்.