ஆண்கள் பலருக்கும் ஸ்டைலான தாடி, மீசை வைத்துக்கொள்ள ஆசை இருக்கும். பொதுவாக டீன் ஏஜ் வயது இருக்கும் ஆண்கள் தாடி, மீசை வளர்க்க ஆசைப்படுவதுண்டு. தாடி, மீசை வளராத ஆண்கள் மற்றவர்களுடன் தங்களை ஒப்பிட்டு பார்க்க கூடாது. காரணம் அவர்களின் மரபியல் (genetic) வேறு. உங்களுடைய மரபியல் வேறு. தாடி, மீசையின் வளர்ச்சி மரபணுக்களால் மட்டும் தான் தீர்மானிக்கப்படுகிறது. மேலும் 13 லிருந்து 30 வயதிற்குள் தாடி, மீசை வளர்ச்சி என்பது அனைவருக்கும் இருக்கும்.
ஆனால் இந்த பதின்ம வயது தொடங்கிய சிறிது காலத்திலேயே ஆண்கள் தங்களுக்கு தாடி, மீசை வளரவில்லை என கவலைப்படுவார்கள். நாம் இந்த பதிவில் தாடி, மீசை வளர என்ன செய்ய வேண்டும் மற்றும் என்ன செய்யகூடாது என்பதை பற்றி காணலாம்.
தாடி, மீசை
தாடி, மீசை வளர்ச்சிக்கு முக்கிய ஹார்மோனாக இருப்பது டெஸ்டிரோன் என்னும் ஹார்மோன். பதின்ம வயது அடைந்த ஒரு ஆணிற்கு இந்த ஹார்மோன் சுரக்கும் போது DHT (டை ஹைட்ரோ டெஸ்டோஸ்டிரோன்) ஹார்மோனாக மாறி முகத்தில் தாடி, மீசை வளரும்.
செய்யவேண்டியவை
சிலருக்கு தாடி வளர்ச்சி ஆரம்ப நிலையில் இருக்கும். ஒரு சில பராமரிப்பின் மூலம் தாடியின் வளர்ச்சியை தூண்ட முடியும்.
தாடி, மீசை வளரும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தலையில் உள்ள முடியை எவ்வாறு சுத்தமாக வைத்துக் கொள்கிறோமோ அதே போன்று முகத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அடிக்கடி முகத்தை கழுவ வேண்டும். அவ்வாறு கழுவும் போது இறந்த செல்கள் நீங்கி முடி வளர்ச்சியை ஊக்கப்படுத்தும்.
ஒரு சிலருக்கு வறண்ட சருமம் இருக்கும். முகத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொண்டால் முடியின் வளர்ச்சி தூண்டப்படும். எனவே அடிக்கடி எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதால் முகத்தில் ரத்த ஓட்டம் அதிகரித்து முடி வளர்வதற்கான தூண்டுதலை ஏற்படுத்தும். இதற்காக நீங்கள் ஆலிவ் ஆயில், ஆமணக்கு எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தலாம். மேலும் வாசனை இல்லாத மாய்ஸ்சரைசரை பயன்படுத்தலாம்.
உடற்பயிற்சி நேரடியாக தாடி மீசை வளர்ச்சியில் பங்கேற்கவில்லை என்றாலும், (basal metabolic rate) வளர்ச்சிதை மாற்ற விகிதம் ஏற்படுவதனால் உடலில் ஹார்மோன் தூண்டுதல் ஏற்படும், ரத்த ஓட்டம் அதிகரித்து தாடி மீசை வளர்வதற்கான உந்துதலை ஏற்படுத்தும்.
அடுத்ததாக உணவில் கவனம் செலுத்த வேண்டும். சாப்பிடும் உணவில் புரோட்டின் இருந்தால் உடலில் ரோமங்கள் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும். எனவே நாம் சாப்பிடும் உணவு புரதம் நிறைந்தாக இருக்க வேண்டும். இதனுடன் வைட்டமின் D உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
செய்யக்கூடாதவை
பல ஆண்களும் கண்ணாடி பார்க்கும் போது தாடி மீசை வளர்ந்துள்ளதா? என முகத்தை தேய்த்து பார்பார்கள். இவ்வாறு முகத்தை தேய்க்க கூடாது. இதனால் முடி வளர்ச்சி பாதிக்கப்படும்.
அடிக்கடி ஷேவ் செய்தால் தாடி அதிகமாக வளரும் என நினைப்பார்கள். முழுமையாக முடி வளராதவர்கள் அடிக்கடி ஷேவ் செய்வதன் மூலம் முடியின் வளர்ச்சி தடுக்கப்படுகிறது.
புகைப்பிடித்தல் மற்றும் மதுப்பழக்கம் இருந்தால் உடனடியாக நிறுத்த வேண்டும். இது முடியின் வளர்ச்சிக்கு தேவையான டிஎன்ஏவை சேதப்படுத்தி, இரத்த ஓட்டத்தை குறைக்கிறது.
சில ஆண்கள் 20 வயதை கடந்தும் தாடி மீசை வளரவில்லை என்பதற்காக டெஸ்டிரோன் ஹார்மோனை ஊசியின் மூலம் போட்டுக் கொள்ளலாம் என நினைப்பது தவறு. உடலில் பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடும்.
குறிப்பாக 30 வயது வரை தாடி மீசையின் வளர்ச்சி இருக்கும். எனவே அவசரப்படாமல் பொறுமையாக மேலே குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை கடைப்பிடித்தால் நிச்சயம் தாடி மீசை வளரும்.
முக்கிய குறிப்பு : சிறிது நாட்களில் தாடி, மீசை வளர வேண்டும் என சந்தையில் கிடைக்கும் மலிவான பொருட்களை வாங்கி பயன்படுத்துவதால் நம்முடைய சருமம் பாதிக்கப்படும்.