மணிப்பூவந்தி மரத்தின் பழங்கள் காய்ந்துபோய்விட்டால், அதைத்தான் பூந்திக்கொட்டை என்கிறோம். இதற்கு பூவந்திக்கொட்டை, சோப்புக்காய் என்றும் சொல்வார்கள்.
நாட்டு மருந்துக்கடை: நாட்டு மருந்துக்கடைகளில் எளிதாக கிடைக்கக்கூடியவை பூந்திக்கொட்டைகள்.. ஆனால், கொட்டைகளை நீக்கிவிட்டு அதன் தோல் பகுதியைத்தான் பயன்படுத்த வேண்டும்.. பூந்திக்கொட்டை பவுடர் என்றே தனியாக கடைகளில் விற்கப்படுகிறது.
அல்லது இந்த பவுடரை வீட்டிலேயே நாம் தயாரிக்கலாம்.. பூந்திக்கொட்டையை வாணலில் போட்டு, லேசாக வறுத்து, அதன் தோலை உரித்துவிட்டு, பிறகு இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். சோறு வடித்த கஞ்சி, சீயக்காய்தூள், இவைகளுடன் பூந்திக்கொட்டைகளையும் கலந்து தலையில் தேய்த்து குளித்து வரும்போது தலைமுடி உதிராது.
ஷாம்பு: இந்த கொட்டையில் பவுடர் போல தயாரித்து ஷாம்பு போலவும் தயாரித்து கொள்ளலாம். இதற்கு பூந்திக்கொட்டை பொடி, சீயக்காய் பொடி, வெந்தயப்பொடி என 3 பொடிகளையும் சமமாக கலக்கி வைத்து கொள்ளவேண்டும். இதில் எவ்வளவ தேவையோ, அதை மட்டும் வெதுவெதுப்பான நீரில் கலந்து தலைக்கு தேய்த்து குளிக்கலாம்.. ஷாம்பு என்று சொன்னாலும், இதில் நுரை ஏற்படாது. ஆனால், தலைமுடி வலுவாகும். பட்டுப்போல பளபளக்கும். தலைமுடி உதிர்வது கட்டுக்குள் வரும். முடி வளர்ச்சியும் அதிகமாக இருக்கும்.
ஷாம்பு, பவுடர் போல, குளியல் பவுடரும் வீட்டிலேயே தயாரிக்கலாம். இலுப்பை, ரோஜாப்பூ, செம்பரத்தை பூ, செம்பரத்தி இலைகள், சீகைக்காய், வெட்டிவேர், நன்னாரி, பூலாங்கிழங்கு, ஆவாரம்பூ, வெந்தயம், பூந்திக்கொட்டை என அனைத்தையுமே சமஅளவு எடுத்து சுத்தம் செய்து, வெயிலில் காயவைத்து அரைத்து, ஒரு மெல்லிய துணியில் சலித்து வைத்து கொள்ள வேண்டும்.
மினுமினுப்பு: தேவையான அளவு எடுத்து, தண்ணீர் சேர்த்து குழைத்து, தலைமுடிக்கும், உடலுக்கும் தேய்த்து குளித்தால், சரும தொல்லைகள் நீங்கும்.. சருமமும் மினுமினுப்பு தரும்.
தலைமுடிக்கும், உடலுக்கும் சேர்த்தே இதனை பயன்படுத்தலாம். அதேபோல, பூந்திக்கொட்டை மரத்தின் பழங்களையும் தலைக்கு கண்டிஷனர்போல பயன்படுத்தலாம். இந்த பழங்களை கைகளால் பிசைந்து தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்து கொள்ள வேண்டும்.
எண்ணெய் பிசுபிசுப்பு: பிறகு, தலைக்கு தேய்த்து குளிக்கும்போது, கட்டுக்கடங்காத வாசனையும், நுரையும் வரும். இதில் தலைமுடியை அலசிவந்தால், தலைமுடி மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கும். அந்த காலத்தில், ஷாம்பு இல்லாத காலங்களில், தலையில் எண்ணெய் பசை நீங்குவதற்கு, அரப்புத்தூளுடன், இந்த பழங்களைத்தான் அரைத்து தலைக்கு தேய்த்து குளிப்பார்களாம். இதனால், பேன், பொடுகு சிரங்கு பாதிப்புகளும் நீங்கிவிடும். சருமத்திலுள்ள பருக்கள், அரிப்பு, தடிப்பு, புண்கள் போன்றவைகளும் நீங்கும்.
இந்த பூந்திக்கொட்டைகள் ஒரு கிருமிநாசினி என்பதால், இந்த பவுடரை வைத்து, அழுக்கு நிறைந்த துணிகள், கறை படிந்த பாத்திரங்களை பளிச்சென சுத்தம் செய்யலாம்.. பட்டுப்புடவையிலுள்ள கறைகளை பூந்திக் கொட்டைகளை வைத்தே பளிச்சென மாற்றிவிடலாம். அதேபோல, மங்கலாக மாறிவிட்ட தங்க நகைகளையும், பூந்திக்கொட்டைகள் உள்ள தண்ணீரில் நகைகளை ஊறவைத்து, அலசினால், புதுநகைபோல ஜொலிக்கும்..!!