முகச்சருமத்திற்கு டோனர் எவ்வளவு முக்கியமோ? அதே அளவிற்கு ஜெல்லும் முக்கியம். ஏனெனில், முகச் சருமத்தை பாதுகாக்கும் முக்கிய பணியை ஜெல்லே செய்கிறது. ஒருவர் டோனர் பயன்படுத்தவில்லை என்றால் கூட பரவாயில்லை. ஆனால், ஜெல் பயன்படுத்தாமல் மட்டும் இருக்கவே கூடாது.
இந்த கோடைக் காலத்தில் நாம் அதிகம் சந்திக்கும் விஷயம், முகப்பொலிவிழப்பு. ஆம்! வெயில் காலங்களில் கூந்தல் வறட்சியிலிருந்து, முகம் பொலிவு இழப்பது வரை அனைத்தையுமே எதிர்க்கொள்ள நேரிடும். முகத்தின் வறட்சியைப் போக்க நாம் வெவ்வேறு வழிகளில், வெள்ளரி, தயிர், கற்றாழை மற்றும் ரோஸ் வாட்டர் ஆகியவற்றைப் பயன்படுத்துவோம்.
பொதுவாக ரோஸ் வாட்டர் என்றால், டோனராகவே பயன்படுத்துவார்கள். ஏனெனில், அது முகச்சருமத்திற்கு ஒருவிதமான பொலிவை தரும். ரோஸ் வாட்டர் போலவே நாம் ரோஸ் ஜெல்லையும் பயன்படுத்தலாம். இயற்கையான ரோஸ் ஃபேஸ் ஜெல் சருமத்தின் இழந்தப் பளபளப்பை மீண்டும் கொண்டு வந்து முகத்தைப் புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும், சருமத்தை நீரேற்றமாகவும் மென்மையாகவும் வைத்திருப்பதிலும் இது நன்மை பயக்கும். அதை கடைகளில் வாங்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.
ரோஸ் ஜெல்லை நாம் வீட்டிலேயே தயாரித்துப் பயன்படுத்தலாம். ரோஸ் ஜெல்லைத் தயாரிக்க சில எளிய வழிகளைப் பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
1. ரோஜா இதழ்கள்.
2. பாதாம் எண்ணெய்
3. கிளிசரின்
4. வைட்டமின் ஈ கேப்ஸ்யூல்
5. ஆலோவேரா ஜெல்
இந்த ஐந்து பொருட்கள் மட்டுமே இருந்தால் போதும், ரோஸ் ஜெல்லை எளிதாக செய்துவிடலாம்.
1. முதலில் ரோஜா இதழ்களை நன்றாகக் கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பின்னர் அவற்றை ஒரு ஜாரில் போட்டு பேஸ்ட்டாக அரைக்க வேண்டும்.
2. அதில் சில துளிகள் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்துவிடவும். இந்தக் கலவையை நன்றாக வடிகட்டவும்.
3. இப்போது மற்றொரு பாத்திரத்தில் ரோஜா பேஸ்ட் போட்டு, அதில் கிளிசரின், வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் சேர்த்துக் கலக்கவும்.
4. அதனுடன் கற்றாழை சேர்த்து மீண்டும் கலக்கவும். ஜெல்லாகும் வரை நன்றாகக் கலப்பது அவசியம்.
5. இதனை ஒரு இறுக்கமான டப்பாவில் அடைத்து வைத்துப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
இந்த ஜெல்லை ஐந்து நாட்கள் வரைப் பயன்படுத்தலாம். அதன்பின்னர் அதே ஜெல்லைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.