

நகைகளின் கலாச்சார முக்கியத்துவம்
தமிழகத்தில், ஒரு பெண்ணின் வாழ்க்கையின் பல கட்டங்களை நகைகள் குறிக்கின்றன. பிறப்பு முதல் திருமணம் வரை, ஒவ்வொரு நிகழ்வுக்கும் தனித்தனி நகைகள் உண்டு. குறிப்பாக திருமணத்தில் அணியும் நகைகள், குடும்ப மரபையும், வளமும் காட்டும் அடையாளமாக பார்க்கப்படுகின்றன.
நம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெண்கள் தலை முதல் கால் வரை அணியக்கூடிய முக்கியமான 10 பாரம்பரிய நகைகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
முக்கியமான பாரம்பரிய நகைகள்
1. மாங்கல்யம்-(தாலி)- இதயமும் மன அமைதியும்.
தாலி கழுத்தில், இதயத்திற்கு அருகில் அணியப்படுகிறது. அறிவியல் பார்வையில், இந்த பகுதி “விஷுத்தி சக்கரம்” (கழுத்து சக்தி மையம்) அருகே இருப்பதால், மனஅழுத்தத்தை குறைக்க உதவுகிறது என்று கருதப்படுகிறது. தங்கம் உடலின் வெப்பத்தை சமநிலைப்படுத்தும் தன்மை கொண்டது.
2. ஒட்டியாணம் (இடைக்காசு) – உடல் நிலை & ஜீரணம்.
பெண்களின் இடுப்பில் அணியும் ஒட்டியாணம், வயிற்றுப் பகுதியை கட்டுப்படுத்துகிறது. இதனால் உடல் நிலை (posture) சரியாக இருக்கும். ஜீரண சக்தி மேம்படும் என்று கருதப்படுகிறது. பழைய பெண்கள், குறிப்பாக கர்ப்பிணிகள், இதை அணிந்து உடல் சமநிலையை பராமரித்தனர். இந்த நகை, பெண்களின் அழகை மேலும் உயர்த்துகிறது. திருமணங்களிலும், பாரம்பரிய நடனங்களிலும் முக்கிய இடம் பெறுகிறது.
3. ஜிமிக்கி (காதணி)– நரம்பு தூண்டுதல்.
காதில் பல நரம்புகள் இணைந்துள்ளன. காதணி அணிவதால், அந்த நரம்புகளில் லேசான அழுத்தம் ஏற்பட்டு, நினைவாற்றல் மேம்படும் மன அழுத்தம் குறையும் என்று பாரம்பரிய நம்பிக்கை உள்ளது. இது “அக்குபிரஷர்” கோட்பாட்டுடன் தொடர்புடையது.
அக்காலத்தில் குழந்தை பருவத்திலேயே காதில் குத்து செய்து நகை அணிவதை வழக்கமாக வைத்திருந்தனர். காதில் அணியும் இந்த அழகிய நகை, இளம் பெண்களிடையே மிகவும் பிரபலமானது. அதன் அசைவில் ஒரு தனி கவர்ச்சி உள்ளது.
4. காசுமாலை– மார்பு பகுதி பாதுகாப்பு.
காசுமாலை மார்புப் பகுதியை மூடி இருப்பதால் இதயப் பகுதியில் ஒரு பாதுகாப்பு உணர்வும்,உடல் வெப்ப சமநிலை கிடைக்கும் என்று நம்பப்பட்டது. தங்க நாணயங்களை வைத்து வடிவமைக்கப்பட்ட இந்த மாலை, செல்வத்தையும், வளத்தையும் குறிக்கும்.
5. வங்கி– இரத்த ஓட்டம்.
மேல்கையில் அணியும் இந்த நகை, பழங்கால அரச பெண்களின் அலங்காரமாக இருந்தது. நாட்டியம் ஆபரணங்களில் மிக முக்கியமான ஒன்று. மேல் கையில் அணியும் வங்கி, தசைகளில் சிறிய அழுத்தத்தை ஏற்படுத்தி இரத்த ஓட்டத்தை சீராக்க கை வலி குறைக்க உதவுகிறது. இது அரச குல பெண்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தது.
6. மூக்குத்தி – சுவாசம் மற்றும் பெண்கள் ஆரோக்கியம்.
மூக்கில் அணியும் மூக்குத்தி, சுவாச மண்டலத்துடன் தொடர்புடைய நரம்புகளைத் தூண்டுகிறது.
சில ஆய்வுகளின்படி:
மாதவிடாய் வலி குறைய உதவும், சுவாச செயல்பாடு மேம்படும் என்று கருதப்படுகிறது. அக்காலத்தில், திருமணமான பெண்கள் மூக்குத்தி அணிவது ஒரு அடையாளமாகவும் இருந்தது. இது பெண்களின் முக அழகை மென்மையாக உயர்த்துகிறது.
7. நெற்றிச்சுட்டி – மன ஒருமை.
நெற்றியில் அணியும் நெற்றிச்சுட்டி, “ஆஜ்ஞா சக்கரம்” (மூன்றாம் கண் பகுதி) அருகில் இருக்கும். இதனால் கவனம் அதிகரிக்கும் மன அமைதி கிடைக்கும் என்று கருதப்படுகிறது. இந்த நகை, மணப்பெண்ணின் அலங்காரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
8. கால்தொட்டு / மெட்டி – நரம்பு தூண்டல்.
திருமணமான பெண்கள் கால்களில் அணியும் மெட்டி (toe ring), கால்நரம்புகளைத் தூண்டுகிறது. இதனால் கருப்பை ஆரோக்கியம் மேம்படும் உடல் மின்சார சமநிலை (energy flow) சீராகும் என்று நம்பப்பட்டது.
9. வளையல் – இரத்த ஓட்டமும் சக்தி ஓட்டமும்.
கைகளில் அணியும் வளையல்கள், மணிக்கட்டு பகுதியில் உள்ள நரம்புகளை தொடர்ந்து தூண்டுகின்றன. இதனால் இரத்த ஓட்டம் சீராகும். உடல் சக்தி (energy flow) சமநிலைப்படும். பெண்களின் உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும். கண்ணாடி வளையல்கள் அணிந்து, வளையல் ஓசை எழுப்புவதன் மூலம் வீட்டில் உயிர்ப்பு உள்ளதாக இருக்கும் என்று நம்பினர்.
10. மோதிரம் – நரம்பு புள்ளி தூண்டல்
விரல்களில் அணியும் மோதிரங்கள், குறிப்பிட்ட நரம்பு புள்ளிகளைத் தூண்டுகின்றன. நாம விரல் (ring finger) இதயத்துடன் தொடர்புடையது. சுட்டுவிரல், நடுவிரல் போன்றவை உடலின் பல உறுப்புகளுடன் இணைந்தவை. மோதிரம் அணிவது மனநிலையை சமநிலைப்படுத்தவும், கவனத்தை அதிகரிக்கவும் உதவும் என்று கருதப்பட்டது.
கைவினை மற்றும் கலைநயம்
தமிழக நகைகளின் சிறப்பு, அவற்றின் நுணுக்கமான கைவினை. கோவில் சிற்பங்களின் தாக்கத்துடன் உருவாக்கப்படும் “டெம்பிள் ஜுவல்லரி” உலகம் முழுவதும் புகழ்பெற்றது. தங்கத்தில் செய்யப்பட்ட இந்நகைகள், சிவன், லட்சுமி போன்ற தெய்வ வடிவங்களால் அலங்கரிக்கப்படும்.
நவீன காலத்தில் பாரம்பரியம்
இன்றைய தலைமுறையிலும் இந்த நகைகள் புதிய வடிவங்களில் மீண்டும் பிரபலமாகி வருகின்றன. லைட்-வெயிட் வடிவங்கள், imitation நகைகள், fusion டிசைன்கள் மூலம் பாரம்பரியமும், நவீனமும் இணைகிறது.
தமிழகப் பெண்களின் நகைகள், வெறும் அலங்காரம் அல்ல. அது அவர்களின் அடையாளம். ஒரு தலைமுறையிலிருந்து மற்ற தலைமுறைக்கு சென்றடையும் இந்த நகைகள், நினைவுகளையும், மரபையும் தாங்கி நிற்கின்றன.
“நகை அணிந்தால் அழகு கூடும்;
பாரம்பரிய நகை அணிந்தால் பெருமையும் கூடும்.”
தமிழ் பெண்கள் தலை முதல் கால் வரை அணியும் 10 முக்கிய நகைகளின் பின்னணியில் உள்ள அறிவியல் மற்றும் நரம்பியல் காரணங்களை உணர்ந்து, நமது பண்பாட்டின் மகத்துவத்தை முழுமையாகப் புரிந்து கொள்வீர்கள்.