சிலருக்கு முகத்தில் பூனை முடி என சொல்லப்படும் மெல்லிய முடிகள் உதட்டின் மேலும், தாடை பகுதியிலும் வளரும். முகத்தில் முடிகள் வளர்வது முக அழகையே கெடுத்து விடும். இதனால் வெளியே செல்ல சிறிது தயக்கம் ஏற்படும். அதனால், முடியை நீக்க ரேசரையோ, ஹேர் ரிமூவர் கிரீம்களையோ உபயோகிப்பதுண்டு. இதனால் அந்தப் பகுதி சிறிது கருமை படர்ந்து வித்தியாசப்படுத்தி காட்டும். இன்னும் சிலர் பார்லருக்கு சென்று த்ரெட்டிங் செய்து கொள்வார்கள். இதனால் ஒற்றைத் தலைவலி வந்து அவதிப்படுபவர்களும் உண்டு.
ஆண்களுக்கு முடி வளர உதவும் ஹார்மோன்கள் பெண்களின் உடலில் சுரக்கும் போது இப்படி முகத்தில் முடி வளர்வது நடைபெறும். இந்த ஹார்மோன்களால் உதட்டின் மேல் பகுதியிலும், தாடை பகுதியில் மீசை போலும் முடி வளர்வதுடன் நெற்றி பகுதியிலும் சிலருக்கு புசுபுசு என பூனை முடிகள் நிறைய காணப்படும்.
பார்லருக்கு சென்று முடிகளை அகற்றினாலும் திரும்பத் திரும்ப வளரத்தான் செய்யும். இதற்கு இயற்கையான முறையில் முடி வளர்ச்சியை கட்டுப்படுத்த சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன.
வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே இதற்கு எளிதாக தீர்வு காணலாம்!
சிறிதளவு சர்க்கரையுடன் எலுமிச்சை சாறு கலந்து அதனை முகத்தில் வளர்ந்த தேவையற்ற முடிகள் மீது தடவி முடி வளரும் திசைக்கு எதிர் திசையில் 5 நிமிடங்கள் நிதானமாக மசாஜ் செய்யவும். பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி விடவும். வாரத்திற்கு இரு முறை இவ்வாறு செய்ய தேவையற்ற முடிகள் உதிர்வதுடன் முடி வளர்வதும் தடுக்கப்படும்.
ஓட்ஸை பொடித்து அத்துடன் சிறிதளவு எலுமிச்சை சாறு, தேன் கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் காய விட்டு பின் நன்கு தேய்த்து குளிர்ந்த நீரால் கழுவ பூனை முடிக்கு சிறந்த தீர்வாக அமையும்.
ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், சிறிது பொடி உப்பு, பால் ரெண்டு ஸ்பூன் சேர்த்து குழைத்து இதனை முடிகள் வளரும் இடங்களில் தடவி 20 நிமிடங்கள் கழித்து நன்கு மசாஜ் செய்து (இடச்சுற்றில் பத்து முறை, வலச் சுற்றில் பத்து முறை என 20 முறை) தேய்த்து பின் குளிர்ந்த நீரால் கழுவி விட நல்ல பலன் கிடைக்கும்.
1 ஸ்பூன் எலுமிச்சை சாறு 1/2 ஸ்பூன் தேன் இரண்டையும் கலந்து முடிகள் மீது தடவி 20 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி விட நாளடைவில் பூனை முடிகள் வளர்வது நின்றுவிடும்.
கடலை மாவு 4 ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் பொடி 2 ஸ்பூன்,குப்பைமேனி இலை 1 கைப்பிடி ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து பொடித்து ஒரு டப்பாவில் போட்டு ஃபிரிட்ஜில் பத்திரப்படுத்த ஒரு வாரம் வரை இந்த பொடியை பயன்படுத்தலாம். தேவைக்கேற்ப 1/2 ஸ்பூன் எடுத்து அதில் சிறிதளவு எலுமிச்சம்பழச் சாறு கலந்து நன்கு குழைத்து முகத்தில் வளரும் தேவையற்ற முடிகள் மீது தடவி 15 நிமிடங்கள் ஊறவிட்டு காய்ந்ததும் சிறிது அழுத்தி தேய்த்து பிறகு குளிர்ந்த நீரால் கழுவி விட வேர்க்கால்கள் வலுவிழந்து முடிகள் உதிர்ந்து விடும். இதனை வாரத்துக்கு இருமுறை என இரண்டு மாதங்கள் செய்துவர நல்ல பலன் கிடைக்கும்.
முட்டையின் வெள்ளைக் கருவுடன் சிறிதளவு சர்க்கரை, சோள மாவு சேர்த்து குழைத்து முகத்தில் தடவி நன்கு காய்ந்ததும் சிறிது வெதுவெதுப்பான நீரில் கழுவ முகத்தில் இருக்கும் முடிகள் விரைவில் உதிர்ந்து விடும்.இயற்கை முறைகளில் செய்வதால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது.