

தலைமுடியை பராமரிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்வது உண்டு. ஏனெனில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கூந்தல் இருக்கும். அதற்கு தகுந்தாற்போல் வெளியில் சென்று விட்டு வரும்போது வறட்சியை, முடி உதிர்வதை, கலர் மாற்றத்தையும் ஏற்படுத்தும். அதை சரி செய்வதற்காக நேரம் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அவற்றில் முடி உதிர்வதை தடுக்க சில விஷயங்களை இப்பதிவில் காண்போம்.
மனிதனின் முடி ஒரு மாதத்திற்கு ஒரு சென்டிமீட்டர் வளர்கிறது. அதை வெட்டாமல் அப்படியே விட்டுவிட்டால் 62 .8 சென்டிமீட்டர் வரை வளரும். ஏன் 90 சென்டிமீட்டர் கூட வளர சாத்திய கூறுகள் உண்டு. இந்த முடி ரத்தத்தை உணவாகக் கொண்டு தோலில் Fallicles என்று சொல்லப்படும் மிகச்சிறிய டியூப் போன்று தோலில் காணப்படும் பள்ளங்களில் இருந்து வளர்கிறது. முடிக்கு 'டை' சாயம் இடுவதால் அது பலகீனப்படுகிறது. வழுக்கைக்கு அதுவும் ஒரு காரணம் என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சி பூர்வமாக கூறுகிறார்கள். ஆனால் ஷேவிங், முடி வெட்டுதல் போன்றையால் முடியின் வளர்ச்சியோ தன்மையோ பாதிக்கப்படுவதில்லை என்கிறார்கள்.
கண் புருவத்தில் இருந்து ஒரு முடியை பிடுங்கினால் 64 நாட்களில் அங்கு வேறொரு முடி வளர்ந்துவிடும். ஆனால் தலை, கால் ,புஜம் போன்ற இடங்களில் இருந்து முடி பிடுங்கப்பட்டால் அது போன்று இரண்டு மடங்கு நாட்களாகும் அந்த இடங்களில் மீண்டும் முடி வளர்வதற்கு. அதனால் நாம் முடியை எப்பொழுதும் நன்கு பராமரிக்க வேண்டியது அவசியம். தலையில் பொடுகு, பேன் போன்றவை இல்லாமல் இருந்தால்தான் முடி இயற்கையாக அழகாக செழித்து வளரும். இல்லையேல் இருக்கும் முடியும் கொட்டுவதற்கு ஆரம்பித்துவிடும். ஆதலால் முடி உதிராமல் காக்க நாம் என்ன செய்யலாம் என்றால் தலையில் அழுக்கு, வியர்வை போன்றவை இல்லாமல் சுத்தமாக வைத்துக்கொண்டோமானால் பேன், பொடுகு தொல்லை ஏற்படாது. நல்லெண்ணெயுடன் எலுமிச்சைசாறு தேய்த்து குளித்து வந்தால் பொடுகுத் தொல்லை குறையும்.
முடி வளர:
சாதாரணமாக வெறும் சீயக்காய் போட்டு குளித்தால் முடி உடைந்து உதிர்வதற்கு ஆரம்பித்துவிடும். அதனால் சீயக்காயுடன் வெந்தயம், பச்சரிசி, செம்பருத்தி இலை, செம்பருத்தி பூ ,ஆரஞ்சு பழத்தோல், கருவேப்பிலை இவற்றை உலர்த்தி அரைத்து பயன்படுத்தி வந்தால் முடி உதிர்வது தவிர்க்கப்படும்.
நெல்லிவற்றல், வெந்தயம், கருவேப்பிலை, செம்பருத்தி பூ, அதிமதுரம் இவைகளை எல்லாம் ஒன்றாக சேர்த்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஆறவைத்து தலைமுடியில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வதை தடுக்க முடியும்.
எலுமிச்சை சாற்றில் நெல்லிக்காயை சேர்த்து அம்மியில் வைத்து மை போல அரைத்து அதை தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து பின்னர் குளித்து வந்தால் தலைமுடி உதிர்வது நின்றுவிடும்.
நெல்லிக்காய் அளவு பசும் வெண்ணையை எடுத்து அதில் 5 அல்லது 6 மிளகை வைத்து கலந்து தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் தலைமுடி உதிர்வது நிற்கும்.
தலைக்கு குளித்துவிட்டு கூந்தலை மோரில் அலசினால் முடி உதிர்வது நின்றுவிடும்.
தேங்காய் பாலைக் காய்ச்சினால் அதிலிருந்து எண்ணெய் வரும். அதை தேய்த்துவர முடி செழித்து வளரும் மாதத்திற்கு இரண்டு முறை முட்டையின் வெள்ளை கருவை மட்டும் எடுத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி பளபளப்பாகவும் இருக்கும். இதனால் முடிக்கு புரோட்டின் சத்தும் கிடைக்கும் .
முட்டை, நல்லெண்ணெய், கிளிசரின், வினிகர், எலுமிச்சை சாறு இவற்றை பயன்படுத்தி தலைக்கு குளித்து வந்தால் முடிக்கு புரோட்டின் சத்து கிடைக்கும். இதனால் நல்ல முடி வளர்ச்சி உண்டாகும்.
சீயக்காய் தூளை சாதம் வடித்த கஞ்சி அல்லது மோரில் கலந்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி நுணுங்கி கொட்டாது.
முடி நன்கு வளர இதுபோன்ற இயற்கையான முறைகளை கடைபிடித்தால் உதிராமலும் நல்ல சத்துடனும் முடிவளரும் என்பது உறுதி. ஆதலால் தலையில் இருந்து ஒரு முடி உதிர்த்தால் அது வளர இரண்டு மடங்கு நாட்களாகும் என்பதை நினைவில் கொண்டு தலை முடியை சிக்கு எடுக்கும் பொழுது வெடுக்கென்று பிடுங்காமலும், உதிராமலும் பாதுகாப்போமாக!