

30 வயதுகளின் தொடக்கத்திலேயே ஒரு சில ஆண்களுக்கு தலைமுடி உதிரத்தொடங்கி வழுக்கை விழ ஆரம்பித்து விடுகிறது. ஆண்களின் வழுக்கை தலைக்கு காரணம் பெரும்பாலும் அவர்களின் குடும்பம், பாரம்பரியமாக ஆண்ட்ரோஜெனிக் அலோபீசியாவால் பாதிக்கப்பட்டு இருக்கலாம். நீண்ட காலமாக வழுக்கை தலைக்கு, வலியற்ற சரியான சிகிச்சை முறை எதுவும் இல்லை.
அறுவை சிகிச்சை முறைக் கொண்ட ஹேர் டிரான்ஸ்பிளாண்ட் மட்டுமே வழுக்கைக்கு ஒரே தீர்வாக இருக்கிறது. அதை தொடர்ந்து விலையுயர்ந்த பிஆர்பி போன்ற சிகிச்சைகளையும் தொடர வேண்டி உள்ளது. இவையெல்லாம் தற்போது மிகவும் அதிக செலவு வைப்பதாக உள்ளது. அதே நேரத்தில் குறிப்பிட தகுந்த பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன. நீண்ட காலமாக அறுவை சிகிச்சை முறை இல்லாமல், தலையில் புதிய முடியை வளரவைக்க விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக முயற்சி செய்துகொண்டு வருகின்றனர்.
சந்தைகளைப் பொறுத்தவரை பெரும்பாலும் பலவித இயற்கையான மூலிகைகள் கொண்ட எண்ணைகளும், முடி வளர்ச்சி சீரம்களும், அதிகத்திறன் கொண்ட விட்டமின் மாத்திரைகளும், முடியை வளர வைப்பதாக கூறி, விற்பனையில் கொடி கட்டி பறந்து வருகின்றன. முடி வளர்ச்சியில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சீரமாக மினாக்சிடில் உள்ளது. மினாக்சிடிலை பொறுத்தவரையில் அது முடி வளர்ச்சிக்கு உதவினாலும் அது வழுக்கை தலைக்கு சிகிச்சை அளிக்கும் அளவுக்கு திறன் கொண்டதாக இல்லை. அது ஆரம்ப கால முடி உதிர்தலுக்கு மட்டுமே தீர்வாக இருக்கிறது, ஆயினும் இதில் நிறைய பக்க விளைவுகளும் உள்ளன.
தற்போது விஞ்ஞானிகள் வழுக்கை தலைக்கு முகப்பரு மருந்தை வைத்து ஒரு தீர்வினை கண்டுபிடித்துள்ளனர். இதன் சிறப்பு என்னவென்றால் இது மினாக்சிடில்லை விட அதிக திறன் கொண்டதாக உள்ளது. இதன் திறன் வழுக்கை தலையில் கூட முடியை வளரவைக்கும் அளவிற்கு சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. இதனால் இனி வரும் காலங்களில் வழுக்கை தலைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கையை மருத்துவ நிபுணர்கள் ஊட்டுகின்றனர்.
அயர்லாந்தை சேர்ந்த காஸ்மோ பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம், முகப்பருவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பயன்படுத்தப்படும் கிளாஸ்கோடெரோன் மருந்தை பயன்படுத்தி முடி வளர்ச்சிக்கான சோதனையை செய்தது. இந்த சோதனையில் 1500 ஆண்கள் பங்கு பெற்றனர். சோதனை இரண்டு கட்டமாக நடத்தப்பட்டது. இதில் முதல் கட்டத்தில் கிளாஸ்கோடெரோன் மருந்து ஆச்சரியப்படும் அளவிற்கு 539% வரை முடி வளர்ச்சியை அதிகரித்துள்ளது. இரண்டாவது கட்டத்தில் 168% முடி வளர்ச்சியை ஊக்குவித்தது.
இது கடந்த 30 ஆண்டுகளில் நடைபெற்ற வழுக்கை தலைக்கான சிகிச்சை முறையில், இது மிகவும் நம்பகமான முறையாக உள்ளது. அடுத்த ஆண்டு FDA இதை அங்கீகரித்தால், வழுக்கை தலைக்காக லட்சக்கணக்கில் செலவு செய்யும் ஆண்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக இருக்கும். இந்த மருந்து பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை கொண்டதாக இருந்தது என்று ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு காரணம் சோதனைக்கு ஆளாக்கப்பட்டவர்கள் குறைவான பக்க விளைவுகளையே அனுபவித்தனர், பலருக்கும் பக்க விளைவுகள் எதுவும் இல்லை.
கிளாஸ்கோடெரோன் செயல்முறை சற்று வித்தியாசமனது, இது முடியின் வேர்களில் ஆண்ட்ரோஜன் ஹார்மோன் உற்பத்தியை தடுத்து, வேர்கள் சுருங்குதலை நிறுத்துகிறது. இதனால் வேர்கால்கள் தூண்டப்பட்டு மீண்டும் முடி வளர்ச்சி தலையில் தொடங்க ஆரம்பிக்கிறது.