ஸ்ரீதேவியின் பியூட்டி சீக்ரெட்ஸ்! தெரிந்துகொள்ளலாம் வாங்க...!

ஸ்ரீதேவியின் பியூட்டி சீக்ரெட்ஸ்! தெரிந்துகொள்ளலாம் வாங்க...!
Published on

ஸ்ரீதேவி இருந்தாலும், இறந்தாலும் இன்றும் கூட பலரால் கனவுக்கன்னியாகத்தான் கருதப்படுகிறார். தமிழ் சினிமாவில் மட்டுமல்ல பாலிவுட் சென்ற பிறகும் பெர்ஃபெக்ட் அழகு என்றால் அது ஸ்ரீதேவி மட்டுமே! அழகான நடிகைகள் பலர் இருக்கலாம். ஆனால், அப்பழுக்கே இல்லாத பேரழகு கொண்டவர் ஸ்ரீதேவி. ஸ்ரீதேவியின் அழகு குறித்து இயக்குநர் ராம்கோபால் வர்மா சொல்லக் கேட்க வேண்டும். அவருக்கு மட்டுமல்ல இன்னும் லட்சோப லட்சம் ரசிகர்களுக்கு ஸ்ரீதேவி ஒரு கனவு தேவதையே!

எதற்காக இத்தனை முஸ்தீபுகள் என்றால், ஸ்ரீதேவியின் அழகு ஊரறிந்த சங்கதி தான். ஆனால், அதை நிலைநிறுத்த அவர் மேற்கண்ட வழிமுறைகள் அனைத்தும் ஹெர்பல் முறைகளே என்கிறார் அவரது மகளும் இளம் நடிகையுமான ஜான்வி கபூர்.

ஸ்ரீதேவிக்கு கெமிக்கல் கலந்த அழகு சாதனப் பொருட்கள் அறவே பிடிக்காது என்கிறார் அவரது மகள். அவரது பள பளப்பான மென்மையான சருமத்துக்குக் காரணம் வாரம் இருமுறை வீட்டில் காய்ச்சிய எண்ணெய் கொண்டு நன்கு மசாஜ் செய்து எடுத்துக் கொள்ளும் தலைக்குளியலே காரணம் என்கிறார் ஜான்வி.

ஸ்ரீதேவியின் ஹேர் கேர் சீக்ரெட்ஸ்…

எத்தனை பிஸியாக இருந்தாலும் அம்மா குறைந்த பட்சம் வாரம் இருமுறை என்னையும், என் தங்கை குஷியையும் உட்கார வைத்து அவரே தன் கையால் வீட்டில் காய்ச்சி வைத்திருக்கும் உலர் பூக்களை ஊற வைத்துத் தயாரித்த எண்ணெய் கொண்டு உச்சி குளிரக் குளிர மசாஜ் செய்து சில நிமிடங்கள் ஊறிய பின் எண்ணெய் முழுக்கு செய்ய வைப்பார். இதனால் உச்சி முதல் பாதம் வரை உடலின் உஷ்ணம் தணிந்து ரிலாக்ஸாக உணர்வோம் நாங்கள். இதே ட்ரீட்மெண்டை அம்மா தனக்கும் செய்து கொள்வார். வாரம் தவறாது இது எங்கள் வீட்டில் நடக்கும்.

அதுமட்டுமல்ல அம்மா… முட்டையின் வெள்ளைக்கரு, பீர், வெந்தயம் என பல உண்ணக் கூடிய பொருட்களை எல்லாமும் கூட தலையில் தேய்த்து ஊற வைப்பார். அவையெல்லாம் தலைமுடியின் மென்மையைக் காப்பதோடு அவற்றை உறுதியாக வைத்துக் கொள்ளவும் உதவும் என்பார்.

இவை தான் அம்மாவின் பட்டுக் கருங்கூந்தல் சீக்ரெட்.

ஸ்ரீதேவியின் ஸ்கின் கேர் சீக்ரெட்ஸ்…

எங்கள் வீட்டில் காலை உணவில் பழங்கள் தவறாமல் இடம்பெறும். அவற்றில் உண்ணாமல் மிகுந்து விடும் பழங்களை எல்லாம் கூழாக்கி முகத்தில் தேய்த்துக்கொள்வது அம்மாவின் பழக்கங்களில் ஒன்று. பழங்களை கூழாக்கி முகத்தில் தேய்த்து சில நிமிடங்கள் ஊற வைத்துப் பின் கழுவும் போது முகம் பளிச்சென்று ஆகி விடும். பழக்கூழ் முகத்தின் செல்களுக்குப் புத்துணர்வு அளிப்பதோடு இறந்த செல்களை ஸ்கிரப் செய்து உதிர்க்க வைக்கவும் உதவுகிறது அதனால் தான் முகம் முன்னை விடப் பளிச்செனத் தோன்றுகிறது.

இவற்றை எல்லாம் அம்மா தொடர்ந்து பின்பற்றி வந்தார். அவரது பழக்கம் எனக்கும் தொற்றிக் கொண்டது. இவை தான் என் அம்மாவின் ஸ்கின் கேர் சீக்ரெட்ஸ் என்கிறார் ஜான்வி கபூர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com