

எந்த வித சீதோஷ்ண நிலையிலும் முதலில் பாதிக்கப்படுவது நம் சருமம்தான். நம் சருமத்தின் முதல் எதிரி இந்த சீசனில் சூரியன்தான். சூரியனிலிருந்து வெளிவரும் கதிர்கள் சருமத்தை பாதித்து, கருமையாக்கி விடுகிறது. அதோடு பலவித அலர்ஜி நோய்களையும் உண்டாக்கி விடுகிறது.
இந்த கோடையில் நம் சருமத்தை பாதுகாக்க தவறினால் சரும சுருக்கங்கள், கரும்புள்ளிகள் மற்றும் தோல் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
இதை தவிர்க்க இந்த கோடையில் வெளியே செல்லும் முன் சன்ஸ்கிரீன் லோஷனை (30எஸ் பி எஃப்) பயன்படுத்த வேண்டும். காலை பத்து மணி முதல் மாலை நான்கு மணி வரை வெயிலில் வெளியில் செல்லாமல் இருத்தல் வேண்டும். வெளியே செல்லும் போது பருத்தி ஆடைகளை அணியவேண்டும். இறுக்கமான ஆடைகளை தவிர்த்து கைகளை கவர் பண்ணுகிற ஆடை அணிந்து வெளியில் செல்ல வெயிலின் நேரடித் தாக்குதலிலிருந்து தப்பிக்கலாம்.
இந்த சீசனில் வெந்நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். மிருதுவான சருமத்தை பாதுகாக்கும் எண்ணெய், பாசிப்பயறு மாவு குளியல் போன்றவை சருமத்தை அதன் ஈரப்பசை மாறாமல் பாதுகாக்கும். சோப்பின் உபயோகம் எண்ணெய் பசையை நீக்கி சருமத்தை பொலிவிழக்க செய்யும். வறண்ட சருமம் கொண்டவர்கள் மாய்ச்சரை சர் உபயோகிக்கலாம். ஆரோக்கியமான குளிர்ச்சி தரும் உணவுகள் நம் சருமத்தை மென்மையாக பளபளப்பாக இருக்க உதவும். காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் புரதங்கள் சருமத்திற்கு போஷாக்கு தந்து சரும பொலிவை தக்க வைத்து பாதுகாக்கும்.
மீன் எண்ணெய்,கொழுப்புள்ள உணவுகள், பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட் டுகள் போன்றவை சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இளமையான தோற்றத்தை தக்க வைக்கும். அதிகளவு தண்ணீர் குடிப்பது சருமத்தை நீரேற்றம் ஆக வைத்திருக்க உதவும்.
சருமத்தின் முதல் எதிரி மன அழுத்தம். இதனால் முகப்பரு, கரும்புள்ளிகள் என சருமத்தில் பாதிப்பினை ஏற்படுத்தும். மன அழுத்தத்தை நிர்வகிக்க உடல் ஆரோக்கியம் மேம்படும். தூக்கம், உடற்பயிற்சி, சமச்சீரான உணவு, மகிழ்ச்சியான மனநிலை இவையே நம் சருமத்தை எந்த சீசனிலும் பாதுகாக்க கூடியது. இவற்றை கடைபிடித்து சரும பாதுகாப்பை பெறுவோம்.