இந்தக் காலத்தில் ஆண்களோ பெண்களோ யாராக இருந்தாலும் பெரிதும் அவர்கள் கவனிக்காமலும், பராமரிக்காமலும் விடக்கூடிய உடல் பாகம் என்றால் அது பாதம்தான். ஆனால் மற்றவர்கள் நம்மிடம் முதலில் கவனிக்கும் விஷயமும் பாதங்களேயாகும். எனவே பாதங்களை பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
கைகளை பராமரிப்பதை எப்படி மெனிக்கூர் என்று கூறுவார்களோ அதேபோல பாதங்களை பராமரித்து வைத்து கொள்ள பெடிக்யூர் முறை இருக்கிறது. கால் விரல் முதல் முட்டி வரை இந்த பராமரிப்பு செய்யப்படும்.
பாதங்களில் இருக்கும் இறந்த செல்களை அகற்றுவதும், பாதங்களுக்கு எக்ஸ்பாலியேட், மாய்ஸ்டரைஷ், மசாஜ் போன்றவை செய்யப்படும்.
‘பெடிக்யூர்’ என்ற வார்த்தை லத்தீன் மொழியிலிருந்து வந்தது ‘பெடிஸ்’ என்றால் பாதம் ‘க்யூரா’ என்றால் பராமரித்தல் என்று பொருள் தரும்.
பெடிக்யூர் முறை 4000 வருடங்களுக்கு முன்பிலிருந்தே இருக்கிறது. பாபிலோனாவில் இருக்கும் ஆண்கள் தங்கத்தால் ஆன கருவிகளை வைத்து பெடிக்யூர் செய்து கொண்டனர். சீனாவில் கி.மு 3000 ஆண்டுகளுக்கு முன்பு மிங்க் பரம்பரையில் கைகளில் நகப்பூச்சு (Nail Polish) வைத்துக்கொள்வது ஒருவரின் மதிப்பை காட்டுவதாக கருதப்பட்டது. எகிப்தியர்களும் கி.மு 2300 ஆண்டுகளுக்கு முன்பு கை களையும், கால்களையும் பராமரிப்பதில் அதிகம் ஆர்வம் காட்டியுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
பெடிக்யூரில் நிறைய வகைகள் உண்டு...
ரெகுலர் பெடிக்யூர் (Regular pedicure)
பாதத்தை தண்ணீரில் முக்கி ஸ்க்ரப் செய்வது, நகத்தை வெட்டி சரி செய்வது, மசாஜ், மாய்ஸ்டரைசர், நகப்பூச்சு செய்து முடிப்பதாகும்.
ஷாங்காய் பெடிக்கூர்(Shangai pedicure)
சீனர்களின் பாரம்பரியமான மூலிகைகள் இருக்கும் சுடுநீரில் கால்களை முக்கி கால்களை சுத்தப்படுத்த எண்ணெய் மசாஜ் செய்யப்படும் முறையாகும்.
ஸ்பா பெடிக்கூர் (Spa pedicure)
இது வழக்கம்போல செய்யப்படும் பெடிக்யூருடன் சேர்த்து பேராபின் டிப் (Paraffin dip),மாஸ்க் போன்ற பராமரிப்புகளையும் சேர்த்து செய்வதாகும்.
டிரை பெடிக்யூர் (Dry pedicure)
இதில் நகத்தை அழகுப்படுத்துதல், பாதங்களை மென்மையாக்குதல், மாய்ஸ்டரைஷர், நகப்பூச்சு ஆகியவற்றை செய்வார்கள். பாதங்களை தண்ணீரிலே நனைக்க மாட்டார்கள்.
பெடிக்யூர் செய்வதால் பாதங்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இது பாதங்களை சுத்தமாக வைத்து கொள்ள உதவுகிறது. பாதங்களை சரியாக பராமரிக்காமல் இருப்பதால் வரும் இன்பெக்ஷன் ஏற்படாமல் பாதுகாக்கிறது. இது பாதங்களில் உள்ள இறந்த செல்கள் மற்றும் டேனை (Tan) நீக்குகிறது. பாதங்களுக்கு இளமையான தோற்றத்தை தரும். இதை செய்து கொள்ளும் நேரம் ரிலாக்ஸாக இருக்கலாம். அதனால் மனதில் உள்ள ஸ்ட்ரெஸ் குறையும். இதை மாதத்திற்கு இரண்டு முறை செய்வது சிறப்பாகும். பாதத்தை அழகாக பராமரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக பெடிக்யூர் செய்து கொள்ளலாம்.