தலைமுடி அடர்த்தியாக கருமையாக நீண்டும் வளர்வதற்கு நாமும் சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். தலையையும் பேன் பொடுகு இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதற்கான வழிமுறைகளை இப்பதிவில் காண்போம்.
சூட்டை தணிக்கும் பஞ்சகற்பம்:
கஸ்தூரி மஞ்சள், மிளகு, வேப்ப விதை, கடுக்காய்த்தோல், நெல்லிப்பருப்பு இவைகளை சமஅளவு எடுத்து பொடி செய்து பசும்பால் விட்டு கொதிக்க வைத்தால் தைலம் போல் பக்குவமாகும். இதை 'பஞ்ச கற்பம்' என்பார்கள். இதை தேய்த்து குளித்து வந்தால் உடல் சூடு தணிந்து கேசத்திற்கும் நல்ல மெருகூட்டும்.
முடிக்கு எண்ணெய்ப் பசையை உண்டாக்க:
உணவில் மிதமான கொழுப்பு சத்து சேர்த்தால் பொடுகுகள் ஏற்படாது. அதனால் உணவில் நெய், நல்லெண்ணெய், வெண்ணெய் போன்றவற்றை அவ்வப்போது சேர்த்துக் கொள்வது நல்லது. இது உடலின் சரும பகுதியில் முக்கியமாக தலைமுடி பகுதியில் எண்ணெய் பசையை உண்டாக்குகின்றது.
பொடுகு நீங்க:
சாதாரணமாக தலைக்கு தடவிக் கொள்ளும் தேங்காய் எண்ணெயில் சிறிது வசம்பை தட்டி போட்டு வைத்தால் அது அப்படியே ஊறிக்கொண்டிருக்கும். அந்த எண்ணையை நாள்தோறும் தலைக்கு தடவி வந்தால் பொடுகு ஏற்படாது.
நீண்ட வளர்ச்சிக்கு சந்தனத் தைலம்:
சேனாக்கிழங்கு, ஏலரிசி, சந்தனத்தூள், தேவாரம், வெட்டிவேர், அதிமதுரம், லவங்கப் பத்திரி, நெல்லிவிதை, நன்னாரிவேர், தாமரைப் பூ இவைகளை வகைக்கு ஒரு கைப்பிடி எடுத்து வெயிலில் உலர்த்தி பொடித்து தூளாக வைத்துக் கொள்ளவும்.
சுத்தமான தண்ணீர், பசும்பால், நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் இவைகளை சமஅளவு எடுத்து கலந்து அடுப்பில் ஏற்றி காய்ச்சி வெடிப்பு சத்தம் அடங்கியதும், முன்பு தயாரித்த தூளை அதில் போட்டு நன்கு காய்ச்சி அடிக்கடி கரண்டியால் துழாவி அடி பிடிக்காமல் பார்த்துக் கொள்ளவும். பிறகு பதமானதும் இறக்கி, மெல்லிய துணியில் வடிகட்டி ஆறவைத்து ஒரு பாட்டிலில் ஊற்றி கெட்டியாக மூடிவைக்கவும். இதற்கு சந்தனத் தைலம் என்று பெயர். இதை நாள்தோறும் தலைக்கு தடவி வந்தால் முடி கொட்டாது. கூந்தல் நீளமாகவும் வளரத் தொடங்கும்.
பேன் ஒழிய:
வில்வ காயை உடைத்து காயவைத்து, பொடி செய்து அதனை சீயக்காய் பொடியுடன் சம அளவு கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வர பேன்கள் ஒழியும். பொடுகும் இருந்தால் கீழே கொட்டி போகும்.
இதர குறிப்புகள்:
"பெண்களின் கரிய நீண்ட கூந்தலில்தான் மன்மதன் குடி கொண்டிருக்கின்றான் என்பது ஒரு சமஸ்கிருத பழமொழி" ஆகும்.
ஆழ்ந்த உறக்கம், கவலை இல்லாத மனது, உடல் ஆரோக்கியம், எடுத்துக்கொள்ளும் உணவு வகைகள் போன்றவையும் தலைமுடி வளர்வதை உறுதி செய்யும் காரணிகள் ஆகும்.
ஆசனம்:
ரத்த ஓட்டம் நன்றாக அமைய சிரசாசனம், சர்வாங்காசனம் பழகி வரலாம். இரு கட்டை விரல்களையும் இரண்டு நெற்றி பொட்டுகளில் அழுத்தி வைத்து மசாஜ் செய்யலாம். இதனால் அங்குள்ள ரத்த ஓட்டம் விழிப்படைந்து அது முடியின் வேர்பகுதியை நன்கு பலப்படுத்துகின்றது. அதனால் தலைமுடி உதிர்வதில்லை. அதே சமயத்தில் தலைமுடி நீளமாகவும் வளர்ந்து வரும்.