

பனிக்காலத்தில் குளிர்காற்று வீசும். அந்தக் காற்று சருமத்தின் இயற்கை தன்மையை குறைத்து எளிதாக சருமம் வறண்டு போகச் செய்யும். எண்ணெய் தன்மை கொண்ட சருமத்தை உடையவர்களை கூட இந்த வறட்சி மிரளவைக்கும். அதற்கு நாம் செய்யவேண்டியது என்ன என்பதை இப்பதிவில் பார்ப்போம்.
குளிர்காலத்தில் ஆரோக்கியம் உள்ளவர்கள் அனைவருக்கும் விரைவாக பசி எடுக்கும். அதற்கு பனிக்காலத்தில் உடல் சூடானது குறையாத அளவுக்கு பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்காக அதிக உணவு சாப்பிட வேண்டியது வரும். அதற்கு ஒரே அடியாக சாப்பிடாமல் அவ்வப்போது பகுதி பகுதியாக பிரித்து சிறிதளவு சாப்பிட்டால் சுறுசுறுப்புடனும் நல்ல சக்தி உடனும் செயல்பட முடியும்.
உடல் அழகை எளிமையாக பராமரிக்கும் முறைகள்
எண்ணெய்கள்:
குளிப்பதற்கு முன் உடலில் தேங்காய் எண்ணெய் தேய்த்துவிட்டு பின்பு குளிப்பது நல்லது. இதனால் உடல் வறட்சி, வெடிப்பு போன்றவற்றை தடுக்கலாம். தேங்காய் எண்ணெயை விட நல்லெண்ணெய், கடுகு எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும் சிறந்தது. இவை விலையும் குறைவு. நீண்ட நேரம் வறட்சியையும் போக்கும். விரும்பியவர்கள் ஆலிவ் எண்ணெயையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பனிக்காலத்தில் உடலில் சோப்பு தேய்ப்பதை நிறுத்தி, கடலை மாவு பாசிப்பயறு மாவு இரண்டையும் சமஅளவு எடுத்து, அதில் ஆரஞ்சு பழத்தோல் காயவைத்து பொடி ஆக்கி கலந்து தண்ணீர் விட்டு கிரீம் போல் உடலில் பூசி குளித்தால் பனிக்காலத்தில் சருமத்திற்கு அழகு கிடைக்கும். மிருது தன்மையும் உருவாகும். சோப்பு தேய்ப்பது உடல் வறட்சியை உண்டாக்கும். ஆதலால் கூடிய மட்டும் சோப்பை தவிர்ப்பது நல்லது.
குளியல்:
பனிக்காலத்தில் வாரத்திற்கு இரண்டு முறையாவது எண்ணெயை சூடுபடுத்தி அதை தலைக்கு தேய்த்து குளிப்பது நல்லது. அதேபோல் ஷாம்புத் தேய்த்துக் குளிப்பதை தவிர்த்து, குளியல் பொடி அல்லது சிகைக்காய் தூள், செம்பருத்திப்பூ, இலையை தேய்த்துக் குளிக்கலாம். பனிக்காலத்தில் குளிக்கும் நீரில் சிறிதளவு 'யூடிகோலான் சேர்த்தால் உடலுக்கு உற்சாகம் கிட்டும்.
உதடு அழகுற:
குளித்துவிட்டு கிரீம் தடவிக்கொள்வது நல்லது. இரவில் தூங்க செல்வதற்கு முன்னால் உதடுகளில் வெண்ணெய் அல்லது பாலாடையைத் தேய்த்து மெதுவாக வருடிக் கொடுத்தால் உதடுகளில் வெடிப்பு ஏற்படாது.
பாத்திரம் தேய்ப்பது, துணி துவைப்பது, வீடு சுத்தம் செய்வது போன்றவற்றால் கைகளில் ஓர் சொரசொரப்பு தன்மை இருக்கும். அதைப் போக்குவதற்கு இரவில் கைகளில் நன்றாக சோப்பு போட்டு கழுவி விட்டு, இதமான வெந்நீரில் கைகளை நனைத்து துடைத்து விட்டு, ரோஸ் வாட்டர்,கிளிசரின் இரண்டையும் கலந்து தூங்க செல்லும் முன் கால் பாதங்களிலும், கைவிரல்களிலும் தேய்த்துக் கொண்டால் சருமம் மிருதுவாகி அழகு பெறும். வெடிப்புக்கு டாட்டா சொல்லலாம்.
எளிமையான கிரீம்:
கால் பாதங்களில் இருக்கும் முதிர்ந்த செல்களை நீக்கிவிட்டு, தேங்காய் எண்ணெய், பசு நெய், தேன் ,மஞ்சள் பொடி ஆகியவற்றை கலந்து காலில் வெடித்த பகுதிகளில் தேய்த்தால் நல்ல பலன் கிடைக்கும். பனிக்காலத்தில் நகங்களிலும் கால் பாதங்களிலும் மருதோன்றி தேய்ப்பது பித்த வெடிப்பை குறைக்கும். மேலும் சேற்றுப் புண், நமைச்சல் போன்றவற்றையும் சேரவிடாமல் தூர விரட்டும்.
உடற்பயிற்சி:
எல்லாவற்றுக்கும் மேலாக பனிக்காலத்தில் தினமும் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்வது மிகவும் அவசியம். உடற்பயிற்சியின் மூலம் ரத்த ஓட்டம் அதிகமாகும். கூடவே உடலின் தட்பவெப்ப நிலை பாதுகாக்கப்படும். முறையான உடற்பயிற்சிகளை செய்து உடல் நன்றாக வியர்த்துவிட்டால் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி அழகும் மேம்படும். உடற்பயிற்சி செய்வதன் மூலம் சுரப்பிகள் ஓரளவு பணி செய்யும். அதன் மூலம் சருமத்திற்கு ஈரத்தன்மையும், எண்ணெய் தன்மையும் கிடைக்கும். சரும அழகும் பாதுகாக்கப்படும். இதனால் அதிக அளவு கிரீம் வகைகள் பயன்படுத்தப்படுவது குறைக்கப்படும்.
இந்த முறையை மிகவும் வறண்ட சருமம் உள்ளவர்கள் தினசரி பயன்படுத்தி வந்தாலும் நல்ல பயன் பெறலாம். பனிக்காலத்திற்கு அதிகமாக மெனக்கிடுவதும் சற்று குறையும். இதில் குறிப்பிட்டு இருக்கும் எளிமையான கலவைப் பொடி, க்ரீம் போன்றவற்றை சற்று அதிகமாக வீட்டிலேயே தயாரித்து வைத்து பயன்படுத்திக் கொள்வது அதிகப்படியான வேலையைக் குறைக்கும்.