நம் அழகின் பிரதிபலிப்பாக இருக்கும் முடி, நமது ஆரோக்கியத்தின் அடையாளமாகவும் திகழ்கிறது. ஆனால், பல்வேறு காரணங்களால் முடி உதிர்வு, முடி வளர்ச்சி குறைதல் போன்ற பிரச்சனைகள் நம்மை அடிக்கடி மோசமாக உணர வைக்கும். இத்தகைய சூழலில் இயற்கை வழங்கும் அருமையான எண்ணெய்கள் நமக்கு ஒரு சிறந்த தீர்வை அளிக்கின்றன. இந்தப் பதிவில் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் 7 சிறந்த எண்ணெகள் பற்றி பார்க்கலாம்.
தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெய் முடிக்கு மிகவும் சிறந்த ஒரு இயற்கை ஊட்டச்சத்து ஆகும். இதில் உள்ள லாரிக் அமிலம் முடியின் புரதத்தை வலுப்படுத்தி முடி உதிர்வைத் தடுக்கிறது. மேலும், தேங்காய் எண்ணெய் முடியில் உள்ள ஈரப்பதத்தை தக்க வைத்து முடி உலர்ந்து போவதைத் தடுக்கும்.
ஆமணக்கு எண்ணெய்: ஆமணக்கு எண்ணெய் முடி வேர்களை வலுப்படுத்தி, புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதில் உள்ள ரிசினோலிக் அமிலம், முடியின் வளர்ச்சியை அதிகரித்து முடியை அடர்த்தியாக மாற்றுகிறது. மேலும், ஆமணக்கு எண்ணெய் உச்சந்தலையில் உள்ள தொற்றுக்களை எதிர்த்துப் போராடி, உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
ஆலிவ் எண்ணெய்: ஆலிவ் எண்ணெயில் விட்டமின் ஈ மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளன. இவை, முடியை சேதத்தில் இருந்து பாதுகாத்து மென்மையாகவும் மினுமினுப்பாகவும் மாற்றுகிறது.
பாதாம் எண்ணெய்: பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ விட்டமின் டி மற்றும் புரதம் நிறைந்துள்ளது. இவை முடியை வலுப்படுத்தி முடி உதிர்வைத் தடுக்கிறது. மேலும், இது உச்சந்தலையை ஈரப்பதமாக வைத்து முடி உளர்ந்து போவதைத் தடுக்கிறது.
அவரை எண்ணெய்: அவரை எண்ணெய் முடி வளர்ச்சியை ஊக்குவித்து, முடியின் வேர்க்கால்களை திடப்படுத்துகிறது. இதில் உள்ள புரதம் மற்றும் விட்டமின்கள் முடியை வலுப்படுத்தி முடி உதிர்வை தடுக்க உதவும்.
ரோஸ்மேரி எண்ணெய்: ரோஸ்மேரி எண்ணெய் முடி வளர்ச்சியை ஊக்குவித்து முடியை அடர்த்தியாக மாற்றுகிறது. இது உச்சந்தலையில் உள்ள ரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வேர்களை வலுப்படுத்தும்.
லாவண்டர் எண்ணெய்: லாவண்டர் எண்ணெய் மன அழுத்தத்தைக் குறைத்து, தூக்கத்தை மேம்படுத்துகிறது. இது உச்சந்தலையை அமைதிப்படுத்தி முடி உதிர்வைத் தடுக்கிறது. மேலும், இது உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்து பொடுகுப் பிரச்சனையைத் தீர்க்கிறது.
இந்த ஏழு எண்ணெய்களையும் தனித்தனியாகவோ அல்லது இணைத்தோ பயன்படுத்தலாம். ஆனால், எந்த எண்ணெயை பயன்படுத்துவதற்கு முன்பும் உங்கள் தலைமுடி வகை மற்றும் உச்சந்தலையின் நிலையை கருத்தில்கொள்ள வேண்டும். மேலும், இதுபோன்ற தயாரிப்புகளை புதிதாக பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.