

பொதுவாகவே 50 - 60 வயதுக்கு மேல் தான் தலை முடி நரைக்கத் தொடங்கும். ஆனால் இப்போது 30 வயது தாண்டு முன்னரே நரைத்து தொடங்கி விடுகிறது. பொதுவாக தலைமுடியானது சருமத்தில் இருக்கும் மயிர்க்கால்களில் இருந்து தான் வளர்கிறது. தலைமுடியை கருமையாக வைத்திருக்க உதவும் அணுக்கள் மெலனோசைட்ஸ் என அழைக்கப்படுகின்றன. இந்த மெலனோசைட்ஸ் அணுவானது ஸ்டெம் செல்களில் இருந்து தான் தோன்றும். அவ்வாறு தோன்றும் போது ஏதாவது தடை ஏற்பட்டால் தலைமுடி நரைக்கத் தொடங்குகிறது.
பொதுவாகவே முடியானது கொட்டுவதும், வளர்வதுமாக சுழற்சி முறையில் இருக்கும். அந்த சுழற்சி முறையில் தொய்வு ஏற்பட்டால் தலைமுடி நரைக்க தொடங்குகிறது என ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். இதையும் தாண்டி தலைமுடி நரைப்பதற்கு மரபணு ரீதியான தொடர்பும் உண்டு. மெலனின் எனும் நிறமி குறைபாட்டின் காரணமாகவும் முடி நரைக்கத் தொடங்கும்.
தடுப்பதற்கு என்ன செய்யலாம்:
வெள்ளை கரிசலாங்கண்ணி செடியின் இலை மற்றும் பூக்களை எடுத்து அரைத்தால் கடுமையான சாறு கிடைக்கும். அந்தச் சாறினை தேங்காய் எண்ணையுடன் கலந்து காய்ச்சி ஆற வைத்து தேய்ப்பதன் மூலம் நரை முடி கருமையாக மாறத் தொடங்கும்.
தலைமுடியை எப்பொழுதும் பொடுகு, அழுக்கு இல்லாமல் வைத்துக் கொள்வதும் நரைப்பதில் இருந்து தடுக்க உதவும் .
தலைக்கு குளிக்கும் முன்பு எலுமிச்சம் பழச்சாறை தலையில் நன்கு தேய்ப்பது நரை முடி வராமல் தவிர்க்கும்.
நரைமுடியை தடுப்பதில் காப்பர் மிகுந்த பங்காற்றுவதால் காப்பர் சத்து நிறைந்த கடல் உணவு வகைகளான நண்டு, சைவ உணவு வகைகளில் எலுமிச்சம் பழம் மற்றும் காளான் இவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது நல்ல பலன்களைத் தரும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, தலைமுடி நரைக்க மன அழுத்தமும் மிகப்பெரிய காரணமாகும். மன அழுத்தத்தை குறைப்பதன் மூலமும் நரைமுடி பிரச்சினைகளில் இருந்து விடுபட முடியும்.