ஒருவரது அழகை மேம்படுத்திக் காட்டுவதில் முடி முக்கியப் பங்கு வகிக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அதிலும் முக்கியமாக பெண்கள், தங்களது முடியைக் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். தங்கள் வெளித்தோற்றம் மிக அழகாகத் தெரியவேண்டும் என்பதற்காக அவர்கள் முடி பராமரிப்பு மற்றும் ஸ்டைலிங்காக எடுக்கும் முயற்சிகள் ஏராளம்.
பெண்கள் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளும் போதோ, வேறு இடங்களுக்குச் செல்லும்போதோ தங்கள் முடியின் அழகை மேலும் அழகாக்க பல வித முறைகளை மேற்கொள்கின்றனர். முக்கியமாக திருமணத்தன்று பெண்களுக்குப் போடப்படும் மேக்கப்பிற்கு தகுந்தவாறு முடியை மாற்றியமைப்பது பிரபலமான ஒன்றாக இருக்கிறது. இதிலும் சில இளம் பெண்கள் தங்கள் முடியை நிரந்தரமாக மாற்றியமைக்க நேராக இருக்கும் முடியை சுருட்டையாகவும் (Curly), சுருட்டை முடியை நேர் முடியாகவும் மாற்றியமைத்து தங்களுக்கு தேவையானதுபோல் கலர் செய்துகொள்கின்றனர்.
அந்த வகையில், அவர்கள் முடியை அழகாக மாற்றியமைக்க மேற்கொள்ளும் தற்காலிக முறைகள் பற்றி அழகுக்கலை நிபுணர் வசுந்தரா அவர்களிடம் கேட்டபோது, அவர் கூறியது:
பெண்கள் தங்கள் முடியை அழகாக காட்டுவதற்கு ஹேர் ஐயர்னிங் (hair ironing), ஹேர் கிரிம்பிங் (Hair crimping), ஹேர் டாங்கிங்(hair tonging), ப்ளோ ட்ரயிங் (Blow - drying) போன்ற முடியை சூடுபடுத்தி மாற்றியமைக்கும் தற்காலிக முறைகளை அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.
நமது முடியின் உட்புறத்தில் பல பிணைப்புகள் உள்ளன. சால்ட் அயனிக் பிணைப்பு, ஹைட்ரஜன் பிணைப்பு, சல்ஃபர் பிணைப்பு. இதில் சல்பர் பிணைப்பை உடைத்து முடியை மாற்றியமைக்கும்போது அது நிரந்தர தீர்வை தரக்கூடும். ஆனால் அது அம்மோனியம் போன்ற கெமிக்கல்கள் மூலமாகத்தான் இது சாத்தியமாகும்.
அதுபோல் ஹைட்ரஜன் மற்றும் சால்ட் அயனிக் பிணைப்பு தற்காலிகமாக சூடுப்படுத்தும் முறையின் மூலம் முடியை மாற்றியமைக்க முடியும். அதாவது முடியை தேவைக்குத் தகுந்தவாறு மாற்றிமைக்கும் கருவிகளின் உதவியோடு, முடியை தேவைக்குத் தகுந்தாற்போல் திருப்புவது, நேராக மாற்றுவது, முடியை சுருட்டிக் கொள்வது போன்று மாற்றலாம். எடுத்துக்காட்டாக,
ஹேர் ஐயர்னிங்
ஹேர் ஐயர்னிங் என்பது ஸ்டிரைடினர் (straightener) என்ற கருவியைப் பயன்படுத்தி முடியை நேராக மாற்றுவது. இந்தக் கருவியை பயன்படுத்துவதற்கு முன்பு முடியை நன்றாக தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து பின் முடிக்கு ஏற்ற சில தயாரிப்பு கிரீம்களைப் பயன்படுத்தி முடியை நன்றாக உலர்த்த வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் தண்ணீர் அனைத்தும் அதில் வரும் வெப்பத்தில் காணாமல் போய்விடும். பின் ஸ்டிரைடினர் என்ற கருவியை பயன்படுத்தி முடியை நேராக மாற்றியமைக்க முடியும்.
ஆனால் இந்த முறை தற்காலிகமானதே. அடுத்து முடியில் தண்ணீர் படும் வரைதான் மாற்றியமைத்தது அப்படியே நிற்கும். தண்ணீர் பட்டபின்பு நாம் மாற்றியமைத்த முடி மீண்டும் பழைய நிலைமைக்குத் திரும்பிவிடும். எனவே, இதுபோன்ற முடி மாற்றியமைப்பு தற்காலிகமாகவே பயன்படுத்த முடியும்.
ஹேர் கிரிம்பிங்
ஹேர் கிரிம்பிங் செய்ய ஆசைப்படுபவர்களுக்கு கிரிம்பர் கருவியின் உதவியோடு ஹேர் கிரிம்பிங் செய்யப்படும். கிரிம்பிங் என்பது வளைவு வளைவாக முடியை மாற்றியமைத்து அழகுபடுத்துவது. முடி குறைவாக இருக்கும் பெண்களுக்குக் கிரிம்பிங் செய்தால் முடி அதிகமாக இருப்பதுபோன்று தெரியும்.
தற்போது கிரிம்பிங் பிரபலமாக இருக்கிறது. அதுவும் இளம் பெண்களிடையே அதிகமாக பயன் படுத்தப்படுகிறது. இதுவும் ஹேர் ஐயர்னிங் போன்றே செய்யப்படும். ஆனால், இதில் ஹேர் கிரிம்பிங் கருவியைக்கொண்டு முடியில் அழுத்தம் கொடுத்து செய்யும்போது முடியில் அலைஅலையான அழகான ஒரு வடிவம் கிடைக்கும். இதுவும் தற்காலிகமானதே. முடியில் தண்ணீர் படும்வரை மட்டுமே இதன் ஆயுள்!
ஹேர் டாங்கிங்
அதைபோல் ஹேர் டாங்கிங், டாங் என்ற கருவியைப் பயன்படுத்தி செய்யப்படுகிறது. இந்தக் கருவி பல வகைகளில் உள்ளது. அதாவது சிறிய டாங் கருவி முதல் பெரிய டாங் கருவி வரை உள்ளது. இவற்றுள் கோனிகல் மற்றும் பாரலெல் (Conical and Parallel) டாங்ஸ் பிரபலமானவை. பலராலும் பயன்படுத்தப்படுபவை. கோனிகல் டாங் என்பது முடியில் பெரிய சுருளில் இருந்து சின்ன சுருள் வரை மாற்றும். தற்போது பெண்கள் அதிகமாக பெரிய சுருள் செய்யும் டாங் கருவிகளையே விரும்புகின்றனர்.
வெப்பத்தைப் பாதுகாக்கும் தயாரிப்பை முடியில் பயன்படுத்தி பின்பு டாங் கருவிகளின் மீது முடியை தேவைக்கு ஏற்றவாறு இழுத்து, சுற்றி இரண்டு நிமிடங்களுக்கு பின்பு எடுக்க வேண்டும். இதன் மூலம் முடியில் சுருள் சுருளாக ஏற்பட்டு பார்ப்பதற்கு மிகவும் அழகாக தெரியும். இதுவும் தற்காலிகமானதே. சிலர் இதை வீட்டிலே செய்துக்கொள்கின்றனர்.
ப்ளோ ட்ரையிங்
ப்ளோ ட்ரையிங் பார்லர்களில் பயன்படுத்தப்படும். அதாவது முடியில் ஸ்டைலிங்கான தயாரிப்புகளைப் பயன்படுத்தி அதற்குரிய பிரஸ் மூலம் முடியை உலர்த்தும்போது அது அதிக முடி இருப்பது போல் அழகான தோற்றத்தை கொடுக்கும். தேவைப்பட்டால் இதை வீட்டிலும் பயன்படுத்துவார்கள்.
எனவே, இந்த நான்கு முறைகளும் தற்காலிகமாக முடியை மாற்றியமைக்க பயன்படுத்தும் முறைகளே. ஆனால் இதில் முக்கியமாக பார்க்க வேண்டியது, அதற்கு தேவையான ஸ்டைலிங் தயாரிப்புகளை சரியான முறையில் வாங்கி முதலில் பயன்படுத்த வேண்டும். இந்த ஸ்டைலிங் பிராடக்ட்ஸ் போட்ட பிறகுதான் மேற் குறிப்பிட்ட ஸ்டைலிங் முறைகளை மேற்கொள்ள வேண்டும். இறுதியாக இந்த செயல் முறையில் ஹேர் ஸ்ப்ரேயை பயன்படுத்தும் போது நாம் மாற்றியமைத்த முடி ஆறு மணி நேரத்திற்கு கலையாமல் அப்படியே இருக்கும்.
தொகுப்பு: சுடர்லெட்சுமி மாரியப்பன்