முகப்பொலிவுக்கு...
முகப்பொலிவுக்கு...pixabay.com

மேக்கப் போடாமலே அழகாக இருக்க ஆசையா?

ழகாகத் தெரிய வேண்டும் என்பது ஆண்கள் பெண்கள் என பாகுபாடு இன்றி அனைவருக்குமே  தோன்றும் பொதுவான ஒரு உணர்வு. மற்றவர்களில் இருந்து தாங்கள் வித்தியாசமாக தெரிய வேண்டும் என்பதில் நிறைய பேர் அக்கறையுடன் இருப்பார்கள். தற்போது அழகை குறித்த விழிப்புணர்வு அதிகம் இருப்பதால் அதற்கு ஏற்றார் போல் அழகு நிலையங்களும், உடற்பயிற்சி கூடங்களும்,  அழகு சாதன பொருட்களும் பெருகி வருகின்றன. அதே சமயம் இயற்கையான வழியில் தாங்கள் அழகாக தெரிய வேண்டும் என்று அதற்கான வழிகளை தேடுபவர்களும் உள்ளனர். நீங்கள் அப்படிப்பட்டவர் எனில் மேக்கப் இல்லாமல் அழகாக இருக்கும் இந்த எளிய வழிகள் உங்களுக்கு உதவும்.

1. மகிழ்வான உணர்வு
சுக துக்கங்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. நாம் எப்போதும் துக்கத்திலேயே இருப்பது போன்ற மன உணர்வில் இருந்தால் அது அப்படியே நமது முகத்திலும் பிரதிபலிக்கும். இதனால் முகப்பொலிவு குறையும். அதனுடன் நமது சோர்வானது உடல் இயக்கத்திலும் சோம்பலையே தரும் என்பதால் எப்போதும் மனதை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்வது நமது அழகுக்கு மிக முக்கியமான ஒன்றாகிறது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் அல்லவா?

2. தண்ணீர் குடிப்பது
நமது உடலுக்கு தேவையான சக்தியைத் தந்து உடல் கழிவுகளை அகற்றுவதில் முக்கிய பங்காற்றுகிறது நாம் அருந்தும் தண்ணீர்.  கோடை காலத்தில் இயற்கையாகவே உடலின் நீர்ச்சத்து குறைந்து களைப்பு தரும். இதனால் சரும பாதிப்புகளும் உண்டாகும். நீரேற்றம் குறையாமல் பாதுகாக்க தேவையான நீரை அருந்துவது சருமப் பொலிவு ஊட்டி அழகைப் பாதுகாக்கும்.

3. புருவங்களில் கவனம்
சீரான திருத்தமான புருவங்கள் முக அழகில் முக்கிய பங்கை தருகிறது. ஒரு சிலருக்கு புருவ முடிகள் அடர்த்தியாக ஒழுங்கில்லாமல் இருக்கும். இவர்கள் அழகு நிலையம் சென்று புருவத்தை ஒழுங்குபடுத்திக் கொள்வது அழகை தரும்.  புருவத்தில் குறைவான முடிகள்  உள்ளவர்களும் தற்போது கடைகளில் கிடைக்கும் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட ஐ ப்ரோ பென்சில், காஜல் போன்றவைகளை உபயோகித்து புருவத்தை அழகாக்கி முகத்தின் அழகை கூட்டலாம்.

4. சருமப் பராமரிப்பு
குளிர்காலமோ, வெயில் காலமோ எந்த காலமாக இருந்தாலும் நமது அழகின்  அடையாளமாக இருப்பது நமது சருமமே. வெயிலினால் வறண்டு போகும் சருமத்தை பாதுகாக்க தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ், பாதாம் போன்ற எண்ணெய்களைக்  கொண்டு மசாஜ் செய்து கொள்ளலாம். மேலும் வீட்டிலேயே இருக்கும் பழங்கள், பயத்தமாவு, கடலைமாவு போன்ற இயற்கை வழிகளை கொண்டு முகத்திற்கு பேக் போன்றவைகள் போட்டு சருமத்தை பாதுகாக்கலாம். முக்கியமாக ஃபாஸ்ட் ஃபுட் போன்ற உணவு கலாச்சாரத்தை விடுத்து ஊட்டச்சத்து உள்ள உணவுகளை உட்கொள்வது சரும அழகுக்கு மட்டும் இன்றி   அழகை பேணவும் சிறந்த வழியாகும்.

5. சிகை அலங்காரம்
அழகான தோற்றத்திற்கு சிகை அலங்காரம் கை தருகிறது. அடர்த்தியான கூந்தல் என்றாலும் குட்டையான கூந்தல் என்றாலும் அதற்கு தகுந்தாற் போன்ற சிகை அலங்காரங்கள் உண்டு. நீளமான முடி கொண்டவர்கள் தளர பின்னி அதில் பிடித்த மலர்களை சூடினால் அழகு கொள்ளை கொள்ளும். அதேபோல் குட்டை முடி கொண்டவர்கள் குதிரைவால் கொண்டை போட்டு ஹேர் கிளிப் குத்தினால் தனி அழகாக தெரிவார்கள். இது ஒரு உதாரணம்தான். இதேபோல் பல வகையான சிகை அலங்காரங்கள் தோற்றத்திற்கு மேலும் அழகைத் தந்து மற்றவர்களில் இருந்து நம்மை வித்தியாசப்படுத்தி காட்டும் என்பதால் வீட்டிலேயே செய்யக்கூடிய சிகை அலங்காரங்களை முயற்சி செய்வது சிறப்பு.

திருத்தமான புருவங்கள்
திருத்தமான புருவங்கள்pixabay.com

6. ஆடைத் தேர்வு
ஆள் பாதி ஆடை பாதி என்று தெரியாமலா சொன்னார்கள்? நம் தோற்றப் பொலிவிற்கு நமக்கு பொருத்தமான உடைகளை தேர்ந்தெடுத்து  அணிவது உதவும். திருமணம், பிறந்தநாள்  மற்றும் பிற விழாக்கள் பொறுத்து அதற்கு தகுந்தாற் போன்ற உடைகளில் செல்வது நமது  மதிப்பை கூட்டுவதுடன் அழகையும் மேம்படுத்தும். ஆடம்பரமான உடையோ அல்லது எளிமையான ஆடையோ அதை நேர்த்தியாக அணிவதே அழகின் சிறப்பு. ஆகவே நமக்கு ஏற்றார் போன்ற உடைகளை தேர்ந்தெடுத்து அணிவதும் அழகை தரும் விஷயங்களில் ஒன்று.

7. நல்ல தூக்கம்
அழகுக்காக  கடும் முயற்சிகள் எடுத்தாலும் சரியான தூக்கம் இல்லை என்றால் கண்களின் கீழே கருவளையம் வந்து முகத்தின் அழகையே கெடுத்து விடும் வாய்ப்பு உண்டு.  கட்டாயம் ஏழு மணி முதல் எட்டு மணி நேரம் வரை தூங்குவது உடல் நலத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் நல்லது. தூக்கமின்மை அசதி தரும். அந்த அசதி  அழகை பாதிக்கும் என்பதால் கட்டாயமாக உடலுக்கு தேவையான ஓய்வு  மற்றும் தூக்கத்தை தருவது அழகை பாதுகாக்கும்.

இதையும் படியுங்கள்:
நீங்கள் வெற்றி வாகை சூடும் புலியா? தோல்வியைத் தழுவும் எலியா?
முகப்பொலிவுக்கு...

8. தன்னம்பிக்கை
எவ்வளவு அழகு நிலையங்களுக்குச் சென்றாலும் பார்த்து பார்த்து அழகுப்படுத்திக் கொண்டாலும் நமது மனதில் உள்ள எண்ணம்தான் வெளியிலும் பிரதிபலிக்கும். நமது தன்னம்பிக்கை தோற்றத்திற்கு மேலும் மெருகூட்டி அழகு தரும் ஒன்றாகும. உயர்ந்த பதவியில் உள்ளவர்கள் மிகவும் எளிமையாக இருப்பார்கள் ஆனால் அழகாக தெரிவார்கள். காரணம் அவர்களின் தன்னம்பிக்கை.

தன்னம்பிக்கையுடன் இருக்கும்போது உடலில் உள்ள செல்கள் சுறுசுறுப்புடன் இயங்குகிறது. இதனால் நமது தோற்றம் பொலிவை பெறுகிறது ஆகவே தன்னம்பிக்கை என்பது அழகுக்கு அழகு சேர்க்கிறது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com