‘அழகு’ என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. அழகாக இருக்க வேண்டும், நம்மை அழகாக காட்டிக்கொள்ள வேண்டும் என்று எல்லோருமே நினைப்போம். அதிலும் பெண்களுக்கு இந்த எண்ணம் சற்று அதிகமாகவே இருக்கும். அத்தகைய எண்ணம் உடையவர்களுக்குத் தான் இந்தப் பதிவு.
தற்போது சினிமா நடிகைகளாகட்டும் அல்லது இளம் பெண்களாகட்டும் முகத்தை ஐஸ் வாட்டர் கொண்டு கழுவும் பழக்கத்தை கடைப்பிடித்து வருவதை பார்த்திருப்போம். ஆனால் ஏன் இப்படி செய்கிறார்கள்? இப்படி செய்வதால் என்ன நன்மைகள் கிடைத்து விட போகிறது போன்ற எண்ணங்கள் தோன்றியிருக்கும். ஆனால் முகத்தை ஐஸ் வாட்டர் கொண்டு கழுவுவதால் பல நன்மைகள் இருக்கிறது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
முதலில் காலையில் எழுந்த உடனேயே முகத்தை ஐஸ் வாட்டர் கொண்டு கழுவுவதால் சுருக்கமாக இருக்கும் முகத்தோல்கள் இருக்கமாகும். இதனால் உற்சாகமும், புத்துணர்ச்சியும் கிடைக்கும். இதை செய்யும்போது ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி சருமத்தை ஆரோக்கியமாக ஆக்கும். முகப்பொலிவு உடனடியாகவே கிடைக்கும். கண்களுக்கு கீழே இருக்கும் கருவளையம் மற்றும் முகவீக்கம் (Puffiness) போன்றவை குறையும்.
காலையிலேயே ஐஸ் வாட்டரில் முகத்தை கழுவுவது மனதிற்கு பெரிய ஸ்ட்ரெஸ் ரிலீஃப் (Stress relief) ஆக இருக்கும். நம்முடைய முகத்திலே மெல்லிய துளைகள் இருக்கும் இதை Pores என்று சொல்வோம். அதை சிறிதாக்குவதன் மூலம் சருமம் மென்மையாக காணப்படும். இது சருமத்தின் நெகிழ்வுத்தன்மையையும் அதிகரிக்கும்.
சிலர் காலையில் எழும்போதே சோம்பேறித்தனத்துடன் இருப்பார்கள். இன்னும் சற்று நேரம் தூங்கினால் நன்றாக இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இந்த ஐஸ் வாட்டர் தெரப்பி சரியானதாகும். காலையில் முகத்தை ஐஸ் வாட்டர் வைத்து கழுவும் பொழுது அது ஒரு புத்துணர்ச்சியையும், விழிப்பையும் தருகிறது.
Lymphatic drainage என்பது நம் உடலில் உள்ள கழிவுகளையும் நச்சுக்களையும் நீங்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது. காலையிலே குளிர்ந்த தண்ணீரை முகத்தில் பயன்படுத்தும்போது இது தூண்டப்பட்டு முகத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கி முகத்தை நன்றாக பளபளப்பாக்குகிறது.
காலையிலேயே ஒரு பவுலில் குளிர்ந்த நீரை நிரப்பி அதில் சில ஐஸ் கட்டிகளைப் போட்டு முகத்தை அதில் முக்கி எடுக்க வேண்டும். இதை 20 முதல் 30 வினாடிகள் செய்தால் போதுமானதாகும். இப்படி செய்ய நேரமில்லாதவர்கள் ஒரேயொரு ஐஸ் கட்டியையாவது எடுத்து முகத்தில் பயன்படுத்தலாம். சாதாரண ஐஸ் கட்டிகளை காட்டிலும் வெள்ளரிக்காய், தக்காளி, ஆரஞ்ச் போன்றவற்றின் சாறை ஐஸ் கட்டிகளாக மாற்றி பயன்படுத்துவது இன்னும் சிறப்பாகும். ஐஸ் கட்டிகளை முகத்தில் ஒரு நாளைக்கு ஒரு தடவை பயன்படுத்துவதே போதுமானதாகும்.