‘லீடர்கள்’ – தனக்குக் கீழ் இருக்கும் பிரஜைகளை வழிநடத்தி செல்பவர்கள். நாட்டையோ மாநிலத்தையோ வழிநடத்த பொலிடிகல் லீடர்கள், வகுப்பறைக்கு கிளாஸ் லீடர்கள், ஒரு குழுவை வழிநடத்த டீம் லீடர்கள் என லீடர்களின் வகைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். சில தலைவர்கள் நம்முடைய அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாதவர்களாவர். அவர்களில், அலுங்காமல் நம்மை அறியாமல் நம் வாழ்வில் நுழைபவர்கள் தான் ஃபேஷன் லீடர்கள்.
ஒவ்வொருவரின் ‘ஃபேஷன் சென்ஸை’ [Fashion Sense] பார்த்தே அவர் பின்பற்றும் ஃபேஷன் லீடர் யார் என்று தீர்மானித்து விட முடியும். உதாரணத்திற்கு, ‘ரெமோ’ படத்தில், கீர்த்தி சுரேஷின் மஞ்சள் கலர் சுடிதார் மிகவும் பிரபலமானது. அந்தப் படம் வெளியானதிலிருந்து, இன்றும் ஆறேழு வருடங்கள் கழித்தும் பலர் அதை உடுத்துவதை கவனித்திருப்போம். அந்த சுடிதார் அணிபவர்களின் ஃபேஷன் லீடர் கீர்த்தி சுரேஷ் ஆகிறார். இன்னும் பல தமிழ் திரைப்படங்களில் வரும் கதாநாயகி களின் முழு ஸ்லீவ் மற்றும் மாண்டரின் காலர் வைத்த குர்த்திகள் இப்பொழுது மிகச் சாதாரணமாக தென்படுகின்றன.
உடை மட்டுமல்ல, நாம் அணியும் மேக்கப், அணி கலன்கள், ஹேர் ஸ்டைல், காலணிகள் உள்ளிட்ட நமது தோற்றத்தை வரையறுப்பது ஃபேஷன் சென்ஸ் [Fashion Sense] எனப்படும். திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள், சீரியல் நடிகர்கள், யூ- ட்யூபர்கள் என பலவிதமான துறையினரும் ஃபேஷன் லீடர்களாக உருவாக முடியும். பொது வெளியில் இருக்கும் பிரபலத்தின் ஃபேஷன் சென்ஸ் முற்றிலும் மாறுபட்ட தாகவும் புதிதாகவும் தனித்துவமாகவும் இருக்கும் பட்சத்தில் அவரும் ஒரு ஃபேஷன் லீடராகிறார். அரசியலில் தனக்கென தனி ஃபேஷன் சென்ஸை உருவாக்கியவர்கள், மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா அவர்கள். மகாத்மா காந்தி அவர்களின் ஃபேஷன் சென்ஸும் இதில் அடங்கும்.
ஃபேஷன் லீடர்களை பின்பற்றுபவர்கள் ஃபேஷன் ஃபாலோவர்கள் [Fashion Followers] என்றழைக்கப் படுகின்றனர். தன்னுடைய ஆஸ்தான ஃபேஷன் லீடரிடம் இருக்கும் காலணியைப் போலவே தானும் வைத்துள்ளார் என்றால் அவரும் ஃபேஷன் ஃபாலோவராவார். இந்த ஃபேஷன் லீடர்– ஃபேஷன் ஃபாலோவர் கலாச்சாரம் புதிதாகத் தோன்றிய ஒன்று இல்லை. பல வருடங்களாகப் பின்பற்றப்பட்டு வரும் இயல்பான விஷயம் தான். நம் பெற்றோர்களின் பழைய ஆல்பத்தை எடுத்துப் பார்த்தால், அவர்களின் ஃபேஷன் லீடரைக் கண்டுபிடித்து விடலாம். பெரும்பாலும் அந்தந்த வருடத்தில் வெளியான மிகவும் ‘ஹிட்’ கொடுத்த படங்களின் கதாநாயகன் – நாயகியின் உடைகள் போலவே உடுத்தியிருப்பர். என் பெற்றோர் களின் ஃபேஷன் லீடர்கள் மாதவன், விஜய், நதியா மற்றும் சினேகா என்பதை அவர்களின் ஆல்பத்தைப் பார்த்து தெரிந்து கொண்டேன்.
இந்த ஃபேஷன் லீடர் –ஃபேஷன் ஃபாலோவர் அமைப்பு ஒன்றும் கெடுபிடியானது இல்லை. நமக்கான ஃபேஷன் லீடரைத் தேர்ந்தெடுக்கும் முழு சுதந்திரம் நம்மிடமே உள்ளது. அவர்கள் சம காலத்தில் இருக்க வேண்டும் என்று எந்தவொரு கட்டாயமும் இல்லை. அறுபதுகளின் படங்களிலிருந்து ஏதேனும் நடிகரின் ஃபேஷன் சென்ஸ் பிடித்திருந்தால், அவரையும் கூட பின்பற்றலாம். ஏனெனில், சம்பந்தப்பட்ட உடைகள் மற்றும் இதர பொருட்களை வாங்குபவர் நீங்களே. அதுமட்டுமின்றி, ‘ஃபேஷன்’ என்றால் மிகவும் ஆடம்பரமான, விலையுயர்ந்த பொருட்களை மட்டும் அணிய வேண்டும் என்பதில்லை. நீங்கள் அணியும் உடை வாங்குவதற்கும் உடுத்துவதற்கும் உங்களுக்கு வசதியாக இருக்கிறதா என்று மட்டும் பார்த்தால் போதும்.
ஒருவர் இத்தனை ஃபேஷன் லீடர்களைத் தான் பின்பற்ற வேண்டும் என்று எந்தவொரு விதியும் இல்லை. திருமண நிகழ்வின்போது நயன்தாரா, நண்பர்களுடன் வெளியே செல்லும்போது ராஷ்மிகா, கோவிலுக்கு செல்லும்போது சாய்பல்லவி என நமது ஃபேஷன் லீடர்கள் எத்தனை நபர்களாகவும் இருக்கலாம். ஒருவேளை எந்தவொரு ஃபேஷன் லீடரையும் பின்பற்ற மனமில்லையா? ஒன்றும் பிரச்சனை இல்லை. உங்களுக்கு என்று ஒரு தனித்துவமான தோற்றத்தை உருவாக்கி உங்கள் வட்டத்திற்குள் நீங்களும் ஒரு ஃபேஷன் லீடராவதற்கு வாய்ப்புள்ளது.