
வெயில் ஆரம்பித்தாலே வியர்வை நாற்றமும் ஆரம்பித்துவிடும்.
துர்நாற்றம் ஏற்படுவதற்கான காரணங்கள்:
காற்றோட்டம் இல்லாத இடங்களில் இருந்தாலோ, அசுத்தமான இடங்களில் இருக்க நேர்ந்தாலோ உடல் துர்நாற்றம் ஏற்படும். பாக்டீரியா நோய்க் கிருமிகளின் தாக்கம் காரணமாகவும், வியர்வையால் ஏற்படும் தலை பொடுகின் காரணமாகவும், எடுத்துக்கொள்ளும் சில மருந்துகளின் பக்க விளைவின் காரணமாகவும் உடலில் துர்நாற்றம் ஏற்படும்.
வியர்வை நாற்றத்தை போக்கி புத்துணர்ச்சி பெற:
1) நம் சமையலறையில் இருக்கும் பொருட்களைக் கொண்டே தீர்வு காணலாம். பழுத்த தக்காளி ஒன்றை எடுத்து மிக்ஸியில் அடித்து வியர்வை பெருகும் பகுதிகளில் குறிப்பாக அக்குள், கால் இடுக்குகள், உள்ளங்கை போன்ற பகுதிகளில் தடவி சிறிது நேரம் கழித்து குளிக்கலாம்.
2) உடலில் இருக்கும் தேவையற்ற முடிகளை அகற்றிவிட துர்நாற்றம் ஏற்படுவதை கட்டுப்படுத்தலாம்.
3) சந்தனப் பொடியுடன் சிறிது ரோஸ் வாட்டரை கலந்து உடலில் தேய்த்து குளிக்க நல்ல பலன் கிடைக்கும்.
4) வெட்டிவேர் பொடியுடன் சிறிது கடலை மாவு அல்லது பாசிப்பருப்பு மாவை கலந்து நீர்விட்டு குழைத்து வியர்வை அதிகம் பெருகும் பகுதிகளில் தடவி சிறிது காய்ந்ததும் குளிர்ந்த நீரில் குளிக்கலாம்.
5) தயிர் நான்கு ஸ்பூன் அளவில் எடுத்து உடலில் தேய்த்து குளிக்க வியர்வை நாற்றம் போய்விடும்.
6) குளிக்கும் நேரில் சிறிது எலுமிச்சைசாறு கலந்து குளிக்கலாம் அல்லது யூக்கலிப்டஸ் ஆயில் சிறிது கலந்து குளிக்க உடல் துர்நாற்றம் நீங்கி வாசனையாக இருக்கும்.
7) தலையில் சிறிது தயிருடன் பயத்தமாவு சேர்த்து நீர் விட்டு குழைத்து தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து குளிக்க பொடுகுத் தொல்லை போவதுடன் வியர்வை நாற்றமும் வீசாது.
8) சாதம் வடித்த கஞ்சியை சிறிது வெந்தயப்பொடி மற்றும் தயிர் கலந்து தலையில் தேய்த்து குளிக்க வெயில் காலத்தில் ஏற்படும் முடி வறட்சியும், முடி உதிர்வும் நீங்குவதுடன் வியர்வை நாற்றமும் வராது.
9) காய்ந்த ரோஜா இதழ்கள் 1 கைப்பிடி, ஆவாரம் பூ ஒரு கைப்பிடி அளவில் எடுத்துக்கொண்டு பச்சைப் பயறுடன் வெந்தயமும் சேர்த்து மிஷினில் அரைத்து வைத்துக் கொள்ளவும். தினமும் குளிக்கும் பொழுது சிறிது எடுத்து உடலில் பூசி குளிக்க வியர்வை நாற்றம் நீங்குவதுடன் வாசனையாகவும் இருக்கும்.
10) வியர்வை நாற்றத்தைத் தூண்டும் உணவுகளான வெங்காயம், பூண்டு, அதிக காரம், மசாலாக்கள் நிறைந்த உணவுகளை தவிர்ப்பதும் நல்லது.
11) நிறைய தண்ணீர் குடிக்கலாம். தயிராக குடிக்காமல் மோராக்கி நிறைய தண்ணீர்விட்டு உப்பு, பெருங்காயத்தூள், சுக்குப்பொடி சேர்த்து நீர்க்க கரைத்துக் குடிக்க உடல் குளிர்ச்சி அடையும்.
12) உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள நாட்டு சக்கரை அல்லது தேன் கலந்து பழச்சாறுகள், இளநீர் போன்றவற்றை பருக வியர்வை நாற்றம் வராது.
13) தளர்வான பருத்தி ஆடைகளை அணிவது சிறப்பு.
14) மஞ்சள் சிறந்த கிருமி நாசினிதான். ஆனாலும் இதனை வெயில் காலங்களில் அதிகம் பயன்படுத்த தோல் வறண்டு போகும். எனவே, மஞ்சள் தூளை சிறிது மோர் கலந்து குழைத்து உடலில் தேய்த்து குளிக்கலாம். ஆண்கள் நிறம் வராத கஸ்தூரி மஞ்சளை மோரில் கலந்து தேய்த்துக் குளிக்கலாம்.