
அதிகம் நேரம் எடுத்து அழகை மேம்படுத்தினால் வீட்டில் திட்டு விழும். அதைத் தவிர்த்து சிறிது நேரத்திற்குள்ளே அழகுபடுத்தும் எளிமையான குறிப்புகள்:
வெள்ளரி, உருளைக்கிழங்கு இரண்டையும் நன்றாக அரைத்து, அந்த கலவையை துணியில் முடிந்து, அந்த முடிச்சை பன்னீரில் நனைத்து கண்ணின் மீது வைத்து படுத்து உறங்கி ஒரு வாரம் செய்தாலே போதும். கருவளையம் காணாமல் போகும்.
பப்பாளி, வெள்ளரி, கொய்யா மூன்றையும் சமஅளவு எடுத்து சாறெடுத்து குடித்தால் சருமம் வறண்டு போகாமல் இருக்கும்.
முல்தானி மட்டியுடன் பன்னீர் கலந்து வியர்க்குருவின் மேல் பூசி இரவு முழுவதும் விட்டு, காலையில் குளித்து வந்தால் வியர்க்குரு மறைந்து தோலும் பளபளப்பாகும்.
களிமண்ணுடன், பாலை சேர்த்து பிசைந்து இரண்டு துளி கிளிசரினையும் கலந்து முகத்திலும் உடலிலும் தேய்த்து ஊற வைத்து குளிக்கலாம். சருமம் பளபளப்பாகும்.
தோல் சீவிய ஆப்பிளை கரைத்து 15 நிமிடம் குளிரவிட்டு அதை முகத்தில் தடவவேண்டும். பின்னர் 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி, பிறகு ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டருடன் தேன் சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடத்திற்கு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகம் அழகாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
காய்ச்சாத பாலை பஞ்சில் தொட்டு முகத்தில் ஒற்றி எடுக்க வேண்டும். அதன் பிறகு கஸ்தூரி மஞ்சள் ,பச்சைப்பயிறு கொண்டு முகத்தை கழுவினால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி முகம் பார்க்க பளிச்சென்று பேஷியல் செய்தது போல் இருக்கும்.
ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை பழத்தோல்களை காயவைத்து பொடி செய்து அதனுடன் கடலை மாவு, தயிர் சேர்த்து பேஸ் பேக்காக உபயோகித்து முகம் கழுவி வந்தால் முகம் பளிச்சென்று இருக்கும்.
ஸ்ட்ராபெரி பழச்சாற்றுடன் எலுமிச்சை பழச்சாற்றை சமஅளவில் கலந்து, தினசரி குளிப்பதற்கு முன் முகம், கழுத்து, கை, கால்களில் தடவி ஊறவைத்து, அரை மணிநேரம் கழித்து குளித்து வந்தால் சருமம் பளபளப்பாகவும் நல்ல பொலிவாகவும் காணப்படும்.
சில நேரங்களில் முகத்தை இறுக்கி பிடிப்பது போன்ற உணர்வுகள் வரும்பொழுது நன்றாக முகம் கழுவினால் இறுக்கி பிடிப்பது போன்ற உணர்வு நின்றுவிடும். முகமும் பளபளப்பாக இருக்கும். அதிக அளவு சோப்பு உபயோகிப்பதை தவிர்த்து விடவேண்டும்.
எண்ணெய் சருமம் உள்ளவர்கள் சுடுநீரில் சுத்தமான வேப்பிலையை ஒரு கைப்பிடி அளவு போட்டு ஆவிபிடித்தால் சரும துவரங்கள் திறந்து உள்ளே உள்ள அழுக்குகள் வெளியேறிவிடும். திறந்த துவாரங்கள் மறுபடியும் மூட குளிர்ந்த நீரால் முகத்தில் பளீரென்று அடித்து முகம் கழுவவேண்டும்.