
மும்பை பெஸ்ட் (BEST) பஸ்களில் பயணிக்கும் பயணிகள் மொபைல் போனில் உரத்தக் குரலில் பேசுவது குறித்தும், ஹெட்போன் அணியாமல் மொபைல் சாதனங்களில் பாட்டுகள் கேட்பதும், வீடியோக்கள் பார்ப்பது குறித்தும் புகார்கள் வருவதைத் தொடர்ந்து, தடை உத்தரவினை பெஸ்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி பேருந்துகளில் மொபைல் போனை பயன் படுத்துபவர்கள் ஹெட்போன்களை அணிய வேண்டும். புதிய விதிமுறைகளின்படி மும்பை மற்றும் அருகிலுள்ள நகரங்களுக்குப் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும் அனைத்து பயணிகளும் தங்களுடைய மொபைல் சாதனங்களில் ஆடியோவைக் கேட்கும்போதும், வீடியோக்களைப் பார்க்கும்போதும், சத்தமாகப் பேசும்போதும் ஹெட்போன்களைக் கண்டிப்பாக அணிய வேண்டும். மீறுபவர்கள் மீது மும்பை காவல் சட்டத்தின் பிரிவு 38/112இன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
(தேவையானதுதான்)
மாம்பழங்கள் பறிமுதல்! காரணம்…?
வாஷி ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டில் FDA அதிகாரிகள் ஐந்து பேர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது செயற்கை முறையில் மாம்பழங்களைப் பழுக்க வைத்திருப்பது தெரிய வந்தது.

கால்சியம் கார்பைடு அல்லது அசிட்டிலீன் வாயுவின் பயன்பாடு முற்றிலும் தடைசெய்யப்பட்டாலும், மாம்பழங்களைப் பழுக்க வைக்க குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் வாயு வடிவில் எத்திலீன் அனுமதிக்கப்படுகிறது. இந்த செயல்முறை பிரத்தியேக அறைக்குள் செய்யப்பட வேண்டும். எனவே, மாம்பழங்களை செயற்கையாக பழுக்க வைப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
ஆனால், சமீப காலங்களில் மார்க்கெட்டில் இருக்கும் சில வியாபாரிகள், பாட்டில்களிலிருந்து திரவத்தை நேரடியாக பழங்களில் தெளிப்பதற்குப் பயன்படுத்தப்படும் எத்திலீன் போன்ற பொருட்கள் என ஆய்வில் தெரிய வந்தன. எத்திலீனைப் பயன்படுத்துவதற்கும் கடுமையான வழிகாட்டுதல்கள் உள்ளன. ரசாயனம் மூலம் பழுக்க வைத்த 146 டஜன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மாம்பழ வரத்து தொடங்கியதும், வியாபாரிகள் இதுபோன்று முறைகேடுகளில் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய இவ்வாறு ஆய்வுகள் நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(பாத்து வாங்குங்கப்பா மாம்பழத்தை!)
*****************************
பாலிவூட் பூமராங்!
“தந்தையும் தனயனும்!”
பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் செய்யும் செயல்களெல்லாம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அமெரிக்கா சென்று மேற்படிப்பை முடித்த ஆர்யன்கான், தந்தையைப் போலவே திரைத்துறையில் நுழைந்து வெப் தொடர் இயக்குவதற்கான ஒரு கதையை பிலால் சித்தியுடன் இணைந்து எழுதி வருகிறார்.

தனக்கு நடிப்பில் ஆர்வமில்லையென தெரிவித்த ஆரியன்கான் தற்சமயம் இயக்குனராகியிருக்கிறார். பிரபல ஆடை நிறுவனத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள விளம்பரப் படத்தில் முதன்முறையாக தனது தந்தை ஷாருக்கானை பிரதான வேடத்தில் நடிக்கவைத்து இயக்கியுள்ள ஆர்யன்கான், இந்த ஆடை நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார்.
(தந்தை 16 அடி; மகன் 32 அடி! உண்மை!)
“பூமிகாவின் புலம்பல்!”
கடந்த சில தினங்களுக்கு முன்பாக ரிலீஸான பாலிவூட் நடிகர் சல்மான்கான் நடித்த “கிஸி கா பாய் கிஸி கி ஜான்” படத்தில் நடித்த நடிகை பூமிகா தமிழிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இப்படத்தின் பிரமோஷன் நிகழ்வுகளில் கலந்துகொண்டு வரும் பூமிகா, மூத்த நடிகர்கள் இளம் நடிகைகளுடன் ஜோடியாக நடிப்பது பற்றி கூறியிருப்பதாவது:-

“இப்போதும் ஹீரோக்களின் ஆதிக்கம்தான் கமர்ஷியல் படங்களில் இருக்கின்றன. ஆண்களைப்போல பெண் நடிகைகளால் முன்னணி கதாபாத்திரங்களில் நடிப்பதென்பது மிக அரிது. வெப் சீரிஸ்களிலும், ஓடிடியிலும் இந்நிலை மாறிக்கொண்டு வருகிறது. இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் இதை மாற்ற முயற்சிக்க வேண்டும். மூத்த நடிகர்கள் மிகவும் வயது குறைந்த பெண்களுடன் ரொமான்ஸ் செய்து நடிப்பது நியாயமில்லை. என் மகன் வயதில் இருப்பவரிடம், நான் ரொமான்ஸ் செய்து நடித்தால் மக்கள் ஏற்பார்களா? நடிகர்கள் உணர வேண்டும்.
சினிமா என்று இல்லை. பொதுவாக வயதில் மிக குறைந்த பெண்ணை, ஆண்கள் திருமணம் செய்கின்றனர். பெண் செய்தால் எக்கச்சக்க கமெண்ட்ஸ் என வருத்தப்பட்டு கூறுகிறார்.
(பலன் ஏற்படுமா?)