
விவசாயப் பயிர்கள் நன்றாக வளர்ச்சியடைந்து, கூடுதல் மகசூலை அளிப்பதற்கு உரங்களும் ஒரு முக்கிய காரணமாகும். இன்றைய காலகட்டத்தில் செயற்கை உரங்களின் ஆதிக்கம் தலைதூக்கியுள்ளது. இதனைத் தவிர்க்க விவசாயிகள் இயற்கை உரங்களுக்கு மாற வேண்டியது அவசியமாகும். மண் பரிசோதனை செய்து அதற்கேற்ப உரமளித்தால், மண்வளமும், பயிர் வளமும் மேம்படும். அவ்வகையில், இயற்கை உரங்களின் 4 வகைகளை இப்போது காண்போம்.
ஒவ்வொரு விவசாயியும் மண் பரிசோதனை செய்து, மண்ணுக்கு ஏற்ற பயிர்களை விளைவித்தால் நல்ல பலன் கிடைக்கும். மண் பரிசோதனை முடிவுகள், பயிர் தேர்வு முதல் உரத்தேர்வு வரை அனைத்தையும் நமக்குப் பரிந்துரைக்கும். மண் பரிசோதனை செய்யாத விவசாயிகள் வேளாண் துறை பரிந்துரையின் படி, பொதுவான உரங்களைப் பயன்படுத்தலாம். உரங்களைப் பயிர்களுக்குத் தெளிக்கும் போது, முறையாக கையாள வேண்டியது அவசியமாகும்.
இயற்கையாக தயாரிக்கப்படும் உரங்கள், பயிர்களுக்கு மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கும் நன்மை பயக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு விவசாயிகள் செயல்பட வேண்டும். தாவரக் கழிவுகள், பண்ணை உரம், மண்புழு உரம் மற்றும் பசுந்தாள் உரம் என இயற்கை உரங்களை 4 வகைகளாக பிரிக்கலாம்.
1. தாவரக் கழிவு உரம்:
செடி கொடிகளின் இலைகள், தாவரத் துண்டுகள் மற்றும் சமையல் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படுபவை தாவரக் கழிவு உரங்களாகும். மிகவும் செலவு குறைந்த மற்றும் அதிக பலன் தரக்கூடிய உரங்களாக இவை இருக்கின்றன. இது தவிர்த்து மீன் கழிவுகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் மீன் அமிலமும் சிறந்த உரமாகப் பயன்படுகிறது. மீன் அமிலம் பூச்சிகளை விரட்டும் என்பதால், பல விவசாயிகள் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர்.
2. பண்ணை உரம்:
ஆடு, மாடு, குதிரை மற்றும் பிற விலங்குகளின் சாணம் மிகச் சிறந்த பண்ணை உரமாக கருதப்படுகிறது. ஒருங்கிணைந்த பண்ணை விவசாயத்தில் ஈடுபடும் போது, உரச்செலவே இல்லாமல் போகிறது. பண்ணை உரத்தை விலைக்கு வாங்கினால் கூட குறைந்த செலவே ஆகும். கோமியத்தில் இருந்து தயாரிக்கப்படும் பஞ்சகவ்யம் மிகச்சிறந்த உரமாகவும், பூச்சி விரட்டியாகவும் செயல்படுகிறது. இவை பயிர்களின் வளர்ச்சிக்கு உதவும் என்றாலும், அதிகளவில் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் சில விலங்குகளின் சாணம் அதிக சக்தி கொண்டவை என்பதால், அதிகளவில் பயன்படுத்தினால் பயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கலாம்.
3. மண்புழு உரம்:
விவசாயிகளின் நண்பன் என அறியப்படும் மண்புழுக்கள், மண்ணின் வளத்தை மேம்படுத்துவதில் சிறப்பாக செயலாற்றக் கூடியவை. தாவரங்கள் விரைவில் முளைப்பதையும், மண்ணின் தண்ணீரைத் தேக்கி வைக்கும் திறனையும் அதிகப்படுத்துகின்றன. அனைத்துப் பயிர்களுக்கும் ஏற்ற உரமாக மண்புழுக்கள் இருப்பதால், உங்கள் தோட்டத்தை வெகு விரைவிலேயே இவை பசுமையாக்கி விடும்.
4. பசுந்தாள் உரம்:
மண்ணில் நைட்ரஜனை அதிகப்படுத்தும் வேலையை பசுந்தாள் உரங்கள் செய்கின்றன. தக்கைப் பூண்டு உள்ளிட்ட பசுந்தாள் உரச் செடிகளை நிலத்தில் வளர்த்து, 30 முதல் 40 நாட்களுக்குள் மடக்கி உழ வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மண்ணிற்குத் தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும். நெல், கோதுமை, பருத்தி, மக்காச்சோளம் மற்றும் கரும்பு உள்ளிட்ட பல பயிர்கள் பசுந்தாள் உரத்தால் பயனடைகின்றன.