பளபளக்கும் நீலக் கண்கள், ஓநாயை ஒத்த தோற்றம் என சைபீரியன் ஹஸ்கி நாய்கள் உலகெங்கிலும் உள்ள நாய்ப் பிரியர்களைக் கவர்ந்துள்ளன. ஆனால், அவற்றின் அழகுக்குப் பின்னால் பல சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன. ஹஸ்கி நாய்கள் வளர்க்க விரும்பினாலும் சரி, அல்லது அதைப் பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் இருந்தாலும் சரி, இந்த 5 உண்மைகள் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.
1. அதீத சவால்களைத் தாங்கும் சக்தி படைத்தவை:
வடகிழக்கு ஆசியாவில் உள்ள சுக்கி (Chukchi) இன மக்களால் வளர்க்கப்பட்ட ஹஸ்கி நாய்கள், உலகின் மிகக் கடுமையான காலநிலைகளில் உயிர்வாழ்வதற்கு அத்தியாவசியமானவையாக இருந்தன. பனிக்கட்டிகள் நிறைந்த நிலப்பரப்புகளில் உணவு மற்றும் பொருட்களைச் சுமந்து சென்ற இந்த நாய்கள், சில நேரங்களில் மிகக் குறைந்த உணவோடு ஒரு நாளில் நூறு மைல்களுக்கு மேல் பயணிக்கும். 1925-ல் நடந்த ஒரு புகழ்வாய்ந்த நிகழ்வில், டிப்தீரியா நோய்க்கான மருந்தைக் கொண்டு செல்ல, ஹஸ்கிகளின் குழு ஒன்று சுமார் 600 மைல் தூரத்தை ஆறு நாட்களுக்குள் கடந்து உயிர்களைக் காப்பாற்றியதாம்.
2. தப்பிப்பதில் கில்லாடிகள்:
புத்திசாலித்தனம், ஆர்வம் மற்றும் அளவில்லாத ஆற்றல் கொண்ட இந்த ஹஸ்கிகள், வேலிக்குள் இருந்து எளிதாகத் தப்பிப்பது, கேட் கீழ் சுரங்கம் தோண்டுவது மற்றும் பாதுகாப்பாகப் பூட்டியதாக நினைத்திருக்கும் கதவுகளையும் திறப்பது எனப் பல விஷயங்களில் கைதேர்ந்தவை. ஹஸ்கிகள் ஒரு பணியில் ஈடுபடுத்தப்படும்போது மட்டுமே மகிழ்ச்சியாக இருக்குமாம். எனவே, போதிய பயிற்சி மற்றும் விளையாடாத போது, அவை வீட்டையும் தோட்டத்தையும் ஒரு புதிர் விளையாட்டு போலக் கருதி, அதிலிருந்து வெளியேற முயற்சிக்கும். அதனால்தான், ஹஸ்கிகளை வளர்ப்பவர்கள் அவற்றைப் பரபரப்பாக வைத்துக்கொள்வார்கள்.
3. பல நிறங்கள் கொண்ட கண்கள்:
ஹஸ்கிகளின் கண்கள் மிக கவரக்கூடிய அம்சங்களில் ஒன்று. பெரும்பாலும், அவற்றின் பளபளக்கும் நீலநிறக் கண்கள் பிரபலம் என்றாலும், ஹஸ்கிகளுக்குப் பழுப்பு, அம்பர், பச்சை அல்லது இரண்டு வெவ்வேறு நிறங்களில் கண்கள் (Heterochromia) இருப்பதுண்டு.
சில நாய்களுக்கு, ஒரே கண்ணில் இரண்டு தனித்தனி நிறங்கள் கூட இருக்குமாம். இந்த மரபணுக் குணம் அவற்றின் பார்வைக்கோ அல்லது ஆரோக்கியத்துக்கோ எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.
4. சிறந்த காவலாளிகள் அல்ல:
ஓநாய் போன்ற தோற்றமும் நல்ல உடல் அமைப்பும் இருந்தாலும், சைபீரியன் ஹஸ்கிகள் சிறந்த காவலாளிகளாக இருக்காது. காரணம், அவை மிகவும் நட்பானவை. பெரும்பாலான நாய்கள் அந்நியர்களைக் கண்டால் குரைத்து, ஆக்ரோஷமாக நடந்துகொள்ளும். ஆனால், ஹஸ்கிகள் அந்நியர்களைச் சந்தேகிப்பதைவிட, அவர்களிடம் உற்சாகத்துடன் அணுகுவதற்கே வாய்ப்பு அதிகம் எனக் கருதப்படுகிறது. ஏனெனில், ஹஸ்கிகள் மனிதர்கள் மற்றும் பிற நாய்களுடன் குழுவாக வாழ்ந்தன. எனவே, ஆக்கிரோஷம் அவற்றுக்குத் தேவையில்லாத குணமாக இருந்தது.
5. வெப்பமான காலநிலையிலும் வாழும்:
சைபீரியன் ஹஸ்கிகள் வெப்பமான காலநிலையிலும் வாழும். அவற்றின் இரட்டை அடுக்கு ரோமங்கள், குளிர்ச்சியிலிருந்து பாதுகாப்பது மட்டுமல்லாமல், வெப்பத்திலிருந்தும் அவற்றைப் பாதுகாத்து, உடல் வெப்பநிலையைச் சீராக வைத்திருக்க உதவுகிறது. ஆனால், சில முன்னெச்சரிக்கைகள் அவசியம்.
வெப்பமான காலநிலையில், ஹஸ்கிகளுக்கு நிழல், புதிய தண்ணீர் மற்றும் பகலில் குறைந்த செயல்பாடு ஆகியவை தேவை. காலை அல்லது மாலை நேரங்களில் மட்டுமே நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அவற்றின் ரோமங்களை ஷேவ் செய்யவே கூடாது. அப்படிச் செய்வது, அவற்றின் இயற்கையான வெப்பநிலைச் சீரமைப்புக்குத் தடையாக இருக்கும்.