

ஆர்க்டிக் (Arctic) பகுதியின் உச்சபட்ச குளிரிலும் உறை பனியிலும் உயிர் வாழும் திறமையுடைய சில விலங்குகள் உள்ளன. இவற்றின், குளிரைத் தாங்க உதவும் தடிமனான உரோமம் கொண்ட மேல் தோல் மற்றும் புத்திசாலித்தனத்துடன் தனக்கான உணவை வேட்டையாடிப் பெற்றுக்கொள்ளும் வலிமை ஆகியவற்றிலிருந்து இந்த வகை மிருகங்கள் எவ்வாறு தங்களை உறையச் செய்யும் சீதோஷ்ண நிலையிலும் உயிர் வாழப் பழக்கிக்கொண்டன என்பதை உணர முடிகிறது. அப்படிப்பட்ட 6 வகை விலங்குகள் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
1. போலார் பேர் (Polar Bear): ஆர்க்டிக் பகுதியில் உச்சபட்ச வேட்டையாடும் திறன் கொண்டது போலார் பேர். இதன் வலிமையான உரோமங்கள், தோலுக்கு அடியில் உள்ள அடுக்கடுக்கான கொழுப்புகள் மற்றும் அதிகளவு வாசனை உணரும் திறன் ஆகியவை இதை ஸீல் போன்ற விலங்குகளை வேட்டையாடி உண்ணவும், மைனஸ் டிகிரி சீதோஷ்ண நிலையில் உயிர் வாழவும் உதவி புரிகின்றன.
2. ஆர்க்டிக் ஃபாக்ஸ்: சீசனுக்கு ஏற்றவாறு ஆர்க்டிக் ஃபாக்ஸ் தனது உரோம நிறத்தை மாற்றி அமைத்துக்கொள்ளக் கூடியது. குளிர் காலத்தில் படர்ந்திருக்கும் பனிக்கட்டிகளுடன் ஒத்துப்போகும் வகையில், உரோம நிறத்தை தூய வெண்மையாகவும், வெயில் காலத்தில் பனி உருகி மறைந்ததும் மலைகளின் நிறமான பிரவுன் கலராகவும் மாற்றிக் கொள்ளும் திறமை கொண்டது. இதன் உடலமைப்பும், உஷ்ணத்தை உற்பத்தி செய்யும் உரோமங்களும் பனிப் புயலையும் சமாளிக்க இதற்கு உதவுகின்றன.
3. பனி ஆந்தை (Snowy Owl): கால்கள் மற்றும் பாதங்கள் உட்பட இதன் உடல் முழுவதும் அடர்த்தியான இறகுகள் உண்டு. குளிர் காலங்களில் வீசும் பனிப் புயலின் ஊடேயும் சுறுசுறுப்பாக பறந்து, லெம்மிங்ஸ் போன்ற சிறிய வகை மிருகங்களை வேட்டையாடி உட்கொள்ளும் திறமைசாலி ஆந்தை இது.
4. வால்ரஸ்: இதன் தோலுக்கு அடியில் பல அடுக்குகளால் அமைந்த கொழுப்புகள் உடல் உஷ்ணத்தை தக்க வைத்து, வால்ரஸ் உறை பனி மூடிய கடலுக்குள் குளிர்ந்த நீரில் நீந்திச் செல்ல, உதவிபுரிகின்றன. இது தனது தந்தங்களின் உதவியால், கடலின் மேற்பரப்பில் படர்ந்திருக்கும் ஐஸ் கட்டிகள் மீது ஏறி, அதன் எதிரிகளிடமிருந்து தப்பித்துக் கொள்ளும்.
5. நார்வால் (Narwhal): ஆர்க்டிக் பகுதியின் யூனிகார்ன் என அழைக்கப்படும் நார்வால் ஆண்டு முழுவதும் குளிர்ந்த நீருக்குள்ளேயே வாழ்ந்து வரும் விலங்கு. இதன் தலை மீது காணப்படும் நீண்ட சுருள் சுருளான, அமைப்புடன் காணப்படும் தந்தம் இதன் பல்லின் வெளிப்பாடாகும். பனி படர்ந்த சூழ்நிலையில், ஒலிகளை எழுப்பி அவற்றின் எதிரொலி மூலம் தனக்கு உணவாகக்கூடிய சிறு விலங்குகளின் இருப்பிடத்தை கண்டுபிடித்து தேடிச் செல்லும் தனித்துவமான திறமை கொண்டது நார்வால்.
6. மஸ்க் ஆக்ஸ் (Musk Ox): நீண்ட அடர்த்தியான உரோமங்கள் கொண்டது. உரோமங்களுக்கு அடியில் குய்வியட் (Qiviut) எனப்படும் மிருதுவான, உஷ்ணம் தரக்கூடிய இயற்கை முறையிலான நார் போன்ற உள் அடுக்கு ஒன்று உள்ளது. மஸ்க் ஆக்ஸ்கள் ஆர்க்டிக் பகுதிகளில் வீசும் குளிர் காற்றிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள ஒன்றின் மீது ஒன்று சாய்ந்து, சரிந்து, உரசிக்கொண்டு உடலை உஷ்ணப்படுத்திக் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன.