கோடை வெயிலிலும் பசுமையாக வளரும் 6 பூச்செடிகள்!
கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில், பாரபட்சமின்றி வெயில் அனைவரையும் வாட்டி வதைக்கிறது. மனிதர்களாகிய நாமே வெயிலைச் சமாளிக்கத் தடுமாறும் போது விவசாயப் பயிர்களும், பூச்செடிகளும் எப்படி சமாளிக்கும். வெயிலில் இருந்து பயிர்களைப் பாதுகாக்க பல்வேறு வழிமுறைகளை விவசாயிகள் செய்து வருகின்றனர். இந்நேரத்தில் கொளுத்தும் வெயிலிலும் செழித்து வளரும் 6 பூச்செடிகளைப் பற்றி தெரிந்து கொள்வோமா!
பெரும்பாலும் பயிர்கள் கோடை வெயிலில் கருகுவதும், வாடுவதும் இயல்பு தான். ஆனால் அளவுக்கதிகமான வெயிலையும் சில பூச்செடிகள் விரும்புகின்றன. இந்தச் செடிகளை உங்கள் தோட்டத்தில் வளர்த்தால் கோடையிலும் வீட்டுத் தோட்டம் செழிப்புடன் பூத்துக் குலுங்கும். வீட்டுத் தோட்டத்தை எப்போதும் பசுமையாக வைத்துக் கொள்ளவே பலரும் நினைப்பார்கள். இவர்களின் எதிர்பார்ப்பை சாமந்தி, லாவெண்டர், சங்குப்பூ, சால்வியா, யாரோ மற்றும் சூரியகாந்தி உள்ளிட்ட 6 பூச்செடிகள் நிறைவேற்றுகின்றன.
1. சாமந்தி:
கிராமங்களில் அதிகமாக சாகுபடி செய்யப்படும் சாமந்தி பல வகைகளில் கிடைக்கிறது. வறட்சியைத் தாங்கி வளர்வது தான் சாமந்தியின் நற்குணம். கோடை காலத்தில் வீட்டுத் தோட்டத்தில் இந்தச் செடியை வளர்த்தால், உங்கள் தோட்டத்தை வண்ணமயமாக மாற்றி விடும். குறைந்த அளவிலான பராமரிப்பில், பல்வேறு வகையான மண்ணிலும் சாமந்தி நன்றாக வளரும் தன்மை கொண்டது. மஞ்சள், சிவப்பு மற்றும் ஆரஞ்சு உள்ளிட்ட பல வண்ணங்களில் சாமந்தி பயிரிடப்படுகிறது.
2. லாவெண்டர்:
நீலம் அல்லது ஊதா நிறத்தில் பூக்களைக் கொடுக்கும் லாவெண்டர் செடி, வறட்சியைத் தாங்கும் தன்மையைக் கொண்டுள்ளது. இதன் பூக்கள் தோட்டத்தை அலங்கரிப்பது மட்டுமின்றி, தனக்கே உரித்தான நறுமண வாசனையால் அனைவரையும் கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டது.
3. சங்குப்பூ:
சங்குப்பூக்கள், கூம்புப்பூக்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவை நீண்ட காலத்திற்கு பூக்கும் தன்மையைக் கொண்டுள்ளன. குறிப்பாக வெயில் காலத்தில் வறட்சியைத் தாங்கி நன்றாக பூக்கும். இளஞ்சிவப்பு, வெள்ளை மற்றும் ஊதா போன்ற துடிப்பான வண்ணங்களில் நமது தோட்டத்தை அலங்கரிக்க சங்குப்பூக்கள் சரியான தேர்வாகும். அதோடு இவை மூலிகையாகவும் பயன்படுவது கூடுதல் சிறப்பு.
4. சால்வியா:
வெப்பமான பகுதிகளில் நன்றாக வளரக் கூடிய சால்வியா செடிகளை, கோடையில் வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கலாம். சிவப்பு, ஊதா மற்றும் நீல நிறங்களில் பூக்களைக் கொடுத்து, உங்கள் தோட்டத்தில் வண்ணங்களை அள்ளித் தெளிக்கும். ஹம்மிங் பறவைகள் மற்றும் மகரந்தச் சேர்க்கைகளுக்காக செடிகளை நாடும் மற்ற பறவைகளையும் சால்வியா ஈர்க்கும். இதனால், உங்கள் தோட்டத்தில் வண்ணங்களுடன், பறவைகளின் வருகையும் அதிகரிக்கும்.
5. யாரோ:
அச்சில்லியோ மில்லிபோலியம் என அழைக்கப்படும் யாரோ பூக்கள், மிகவும் கடினமான செடிகள் என்பதால் வற்றாத நிலையிலேயே இருக்கும். பல்வேறு மண் வகைகளில் இந்தச் செடி வளரும். இளஞ்சிவப்பு, மஞ்சள் மற்றும் வெள்ளை நிறங்களில் சிறிய பூக்களைக் கொடுக்கும். நன்மை செய்யும் பூச்சிகள் மற்றும் வண்ணத்துப்பூச்சிகளை இந்தச் செடிகள் மிக எளிதாக ஈர்க்கும்.
6. சூரியகாந்தி:
கோடை வெயிலை எதிர்த்து வளரக்கூடிய செடிகளில் சூரியகாந்தியும் ஒன்று. மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் பெரிய அளவிலான பூக்களைக் கொண்டு, உங்கள் தோட்டத்தை அலங்கரிக்க சூரியகாந்தி சரியான தேர்வாக இருக்கும். அதோடு பட்டாம்பூச்சி மற்றும் தேனீக்களை மகரந்தச் சேர்க்கைக்காக சூரியகாந்தி ஈர்க்கிறது.