
உலகிலுள்ள பறவை இனங்களில், பலவிதமான வண்ணங்கள் மற்றும் உடலமைப்புக் கொண்டவற்றை நாம் பார்த்திருக்கிறோம், ரசித்திருக்கிறோம். ஆனால், உயிர் வாழ்வதற்கும், குறும்புத்தனத்தை வெளிப்படுத்தவும் அவை தங்களின் புத்திசாலித்தனத்தை கையாளும் விதம் கணிக்க முடியாதது. அப்படிப்பட்ட 6 வகையான பறவைகளின் குணங்களை இப்பதிவில் பார்க்கலாம்.
1. ப்ளூ ஜெய்: வட அமெரிக்காவைப் பிறப்பிடமாகக் கொண்ட ப்ளூ ஜெய், தனது குரலை மாற்றி, அப்படியே வேறொரு பறவையின் குரலில் பேசி (mimicking) பிற பறவைகளை பயமுறுத்தும் குணமுடையது. பருந்தின் குரலில் கூட பேசக்கூடிய திறமை கொண்டது ப்ளூ ஜெய். பிரச்னைகளைத் தீர்ப்பதிலும், உணவுப் பொருட்களை அடுத்த வேளை பயன்பாட்டிற்காக ஒளித்து வைப்பதிலும் இது தனது புத்திசாலித்தனத்தை வியக்க வைக்கும் வகையில் வெளிப்படுத்தும்.
2. கியா கிளிகள் (Kea Parrots): இவை நியுசிலாந்தை பிறப்பிடமகக் கொண்டவை. புதிர்களை விடுவிப்பது, குழுவாக இணைந்து செயல்படுவது, சூழ்நிலைக்கேற்றவாறு தனது இயல்புகளை மாற்றியமைத்துக்கொள்வது போன்ற நற்குணங்கள் உடையது. அனைத்திலும் ஆர்வம் கொண்டிருப்பது, குறும்புத்தனம், விளையாட்டுத்தனம் போன்றவை இதன் தனித்துவமான குணங்கள் எனலாம்.
3. யூரோசியன் மக்பீ (Eurasian Magpie): கண்ணாடி சோதனையில் (mirror test) வெற்றி பெறும் சில பறவைகளில் யூரோசியன் மக்பீயும் ஒன்று. அதாவது பறவைகள் கண்ணாடியில் தங்கள் உருவத்தைப் பார்க்கும்போது, அது தாம்தான் என்பதை தாங்களாகவே புரிந்துகொள்ளும் திறனை கொண்டுள்ளதா என்பதைக் கண்டறியும் சோதனை இது. இம்மாதிரியான சோதனை, பறவையின் மேம்பட்ட சுய விழிப்புணர்வையும் அறிவாற்றலையும் கண்டுகொள்ள உதவும் சோதனை.
4. ஆப்பிரிக்கன் கிரே பேரட் (African Grey Parrot): இதன் ஞாபக சக்தி அசாத்தியமானது. தனது குரலை மாற்றி மனிதர்களைப் போல் பேசுவதில் கில்லாடியான கிளி. நூற்றுக்கணக்கான வார்த்தைகளை காதால் கேட்டுத் தெரிந்துகொண்டு அவற்றை எந்த இடத்தில் எப்படிப் பிரயோகிக்க வேண்டுமென்பதையும் அறிந்து வைத்திருக்கும் புத்திசாலி கிளி இது.
5. க்ளார்க்ஸ் நட்கிராக்கர் (Clark's Nutcracker): வட அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் உள்ள மலைப் பிரதேசங்களில் வாழ்ந்து வருகிறது இந்தப் பறவை. பைன் விதைகளை தனது விருப்ப உணவாகக் கொண்டது. கோடைக்காலங்களில் ஆயிரக்கணக்கான பைன் நட்களை எதிர்கால பயன்பாட்டிற்காக வெவ்வேறு இடங்களில் மறைத்து வைத்து பனி பொழியும் காலங்களில், மறைத்து வைத்த விதைகளை தவறாமல் கண்டுபிடித்து எடுத்துத் தின்னும் இதன் ஞாபக சக்தி பாராட்டுக்குரியது.
6. அமேசான் பேரட் (Amazon Parrots): அனுபவம் நிறைந்த பேச்சாளரைப் போல் பேசக்கூடிய திறமை கொண்டது. புதுப்புது விஷயங்களை விரைவில் கற்றுக் கொள்ளவும் செய்யும். இதன் விளையாட்டுத்தனமான செய்கைகளும், அறிவாற்றலும், தன்னை வளர்ப்பவரின் கட்டளைகளைப் புரிந்து செயலாற்றும் திறனும் பலரை இக்கிளியை வளர்ப்புப் பிராணியாக ஏற்றுக்கொள்ளத் தூண்டும். மனிதர்களில் பல வகை இருப்பது போல் பறவைகளிலும் பல வகை இருப்பது இயற்கையே!