
‘மழையே மழையே வருவாயே
வளரும் பயிரைத் தருவாயே!’
என்ற சிம்பிளான பாடல், சிறுவர்கள் மத்தியில் பிரபலம்!
60ஸ் கிட்ஸான நாங்கள் அனுபவித்த மழையும், மழைக் காலமும் வாழ்க்கையில் மறக்க முடியாதவை; என்றும் மனதுக்கு மகிழ்ச்சி தருபவை. ஐப்பசி-கார்த்திகை மாதங்கள் வந்து விட்டாலே, உள்ளுக்குள் ஓர் உற்சாகம் பீறிட ஆரம்பித்து விடும்.
மழையில் நனைந்தபடியே குளத்திற்குச் சென்று, பெரிய துளிகள் விழுகின்றபோது நீருக்குள் லேசாக மூழ்கி, அந்தக் குளத்து நீரின்மீது மழைத்துளி விழும் இதமான ஒலியை எத்தனை பேர் அனுபவித்துக் கேட்டிருக்கிறீர்களோ என்பது எனக்குத் தெரியாது. ஆனால், அந்த இதமான ஒலி இன்னும் காதுகளில் ஒலித்து இதம் தருகிறது என்பதைச் சொல்லித்தானே ஆக வேண்டும்! அடைமழை பிடித்தால், ஐந்தாறு நாட்களுக்குச் சூரியனே தெரியாது. எப்போ வரும் சூரியனென்று காத்துக் கிடந்த களிப்பான நாட்கள் அவை!
அந்த நாட்களில் இன்டோர் கேம்ஸ்களாகிய பல்லாங்குழியும், ஆடு புலி ஆட்டமும் அனல் பறக்க நடக்கும்.
வெயில் வராவிட்டாலும், மழை சற்று நின்றால் ஏரோப்ளோன் சில்லுக் கோடு ஏகமாய் தடதடக்கும்.
கால் சட்டைப் பையில் அவலும் வெல்லமுமோ அல்லது பொட்டுக் கடலையும் வெல்லமுமோ ஃபாஸ்ட்புட்டாக (fast food) இருந்து கொண்டே இருக்கும். ம்! அவையெல்லாம் ஆனந்தமான நாட்கள்!
நமது தமிழ் நாடு, தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவ காலங்களில் மழையைப் பெறுகிறது. ஆண்டு சராசரி மழையளவு 907 மிமீ அல்லது 37.2 அங்குலம்.
இதில் 48 விழுக்காட்டு மழையினை வடகிழக்குப் பருவமழையே தருகிறது. தென்மேற்குப் பருவமழை 32 சதவீத அளவுக்குப் பெய்கிறது. வடகிழக்குப் பருவத்தில் காற்று நிலத்திலிருந்து கடலை நோக்கியும், தென் மேற்குப் பருவத்தில் அது கடலிலிருந்து நிலத்தை நோக்கியும் வீசுகிறது.
அதிக மழை காரணமாகச் சில சமயங்களில் ஆறு உடைபட்டு வெள்ளம் வருவதும், நடுவே புயல் அடிப்பதும் உண்டு. இப்பொழுது போல அப்பொழுதெல்லாம் புயலுக்குப் பெயரெல்லாம் கிடையாது. வருடங்களையே புயல்களை அடையாளங்காட்டப் பயன்படுத்தினார்கள். உதாரணமாக,1955 ஆம் ஆண்டு புயல்,1958 ஆம் ஆண்டு புயல் என்பார்கள். சமீப காலங்களில்தான் வர்தா, கஜா என்றெல்லாம் புயல்கள் பெயர் சூட்டிக் கொண்டு ஆட்டம் போட ஆரம்பித்து விட்டன.
மழையோடு சில சமயங்களில் கை கோர்த்துக் கொள்ளும் புயல், பேரழிவைத் தந்து விடுவதும் உண்டு. எனவேதான், புயல் காலம் வந்து விட்டாலே, துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டுகளை ஏற்றி, மீனவர்களையும், கடற் பயணியரையும், பொது மக்களையும் எச்சரிக்கிறார்கள்.
பகல் பொழுதில் மூங்கிலாலான கூண்டுகளை ஏற்றுகிறார்கள். இரவென்றால் வண்ண விளக்குகளால் ஆன எச்சரிக்கை முறைகளைக் கடைப் பிடிக்கிறார்கள். இவை 1 லிருந்து 11 வரை வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு எண்ணுக்குமான கூண்டு, புயலின் தன்மையை விளக்குவதாக உள்ளது. விபரம் இதோ:
புயல் உருவாகும் வானிலை
புயல் உருவாகியுள்ளது என்ற எச்சரிக்கை
திடீர் காற்றோடு மழை - துறைமுகத்திற்கு அச்சுறுத்தல்
துறை முகத்தில் நிறுத்தியுள்ள கப்பல்களுக்கு ஆபத்து
புயல் துறைமுகத்தின் இடப் புறமாகச் செல்லும்
துறைமுகப்பகுதியில் கடுமையான வானிலை
புயல், துறைமுகத்திற்கு அருகில் கரையைக் கடக்கும்
அதிக அபாயம்
அதி தீவிரமான புயல்
புயலால் பேரபாயம் விளையலாம்
உச்ச கட்ட பேரிடர் - வானிலை மையத் தொடர்பு துண்டிப்பு
இவ்வாறாக,11 கூண்டுகள் மூலம் அனைத்து வகையான மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உஷார் படுத்தப்படுகிறார்கள்.
என்ன! இந்த எச்சரிக்கைக் கூண்டுகள் விஷயத்தை இன்னும் எளிமையாக்க, உரிய பொறுப்பிலுள்ளவர்கள் முயற்சி மேற்கொள்ளலாம். பாமரனுக்கும் ஈசியாகப் புரியும் விதமாக இது அமைந்தால் பலன் கூடும். ஏனெனில் தற்போதைய நடைமுறை, எல்லோராலும் புரிந்து கொள்ளக் கூடியதாகத் தெரியவில்லை. புயல் அடிக்கும் காலங்களில் மட்டுமே இவற்றின் பயன்பாடு என்றாலும், ஆபத்தான நேரத்தில் விடுக்கப்படும் எச்சரிக்கைகள் சாதாரண மனிதர்களையும் சென்றடைவதாக இருப்பதே நல்லது.
மழையும், புயலும் இயற்கையின் கொடைகள்! எச்சரிக்கையுடன் இருந்தால் இவற்றையும் ரசிக்கலாம்!