குள்ள நீர்யானைக் குட்டியும், அரிய வகை டைனோசர் இனமும்! 

Hippo Dino
Hippo Dino
Published on

ஸ்காட்லாந்தின் Edinburgh மிருகக்காட்சிசாலையில் பிறந்த Haggis என்ற குட்டி நீர்யானை, தனது அழகான தோற்றத்தால் சமூக ஊடகங்களில் வைரலாகி, உலகெங்கிலும் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஹாகிஸ் பிறப்பதற்கு முன், தாய்லாந்தில் பிறந்த Moo Deng என்ற மற்றொரு குட்டி நீர்யானையும் இணையத்தில் வைரலாக இருந்தது.

குள்ள நீர்யானை இனத்தைச் சேர்ந்த இந்த இரண்டு குட்டிகளும் அழகாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அரிதானவையும் கூட. உலக இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் கூற்றுப்படி, குள்ள நீர்யானைகள் அழிந்து வரும் நிலையில் உள்ளன. மேற்கு ஆப்பிரிக்காவில் காணப்படும் இந்த அரிய உயிரினங்கள், வேட்டையாடுதல் மற்றும் வாழ்விட இழப்பு போன்ற பல அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன.

குள்ள நீர்யானை (Choeropsis liberiensis) என்பது பொதுவான நீர்யானையை (Hippopotamus amphibius) விட அரிதானது மற்றும் சிறியது. அவை பார்ப்பதற்கு ஒரே மாதிரி தோன்றினாலும், இரண்டு இனங்களுக்கும் சில தனித்துவமான வேறுபாடுகள் உள்ளன. அதில் மிகவும் தெளிவானது அவற்றின் அளவு. குள்ள நீர்யானைகள் மிகவும் சிறியவை, 350 முதல் 600 பவுண்டு வரை எடையுள்ளதாகவும் 30 முதல் 39 அங்குல உயரமும் கொண்டவை. அதேசமயம், பொதுவான நீர்யானையின் எடை குறைந்தபட்சம் 2,800 முதல் 10,000 பவுண்டுகள் எடையும், 5.5 அடி உயரம் கொண்டவையாக இருக்கும்.

குள்ள நீர்யானைகள் பொதுவாக ஒதுக்கியிருப்பவர்களாகவும் மறைவாகவும் இருக்கின்றன. ஆனால் சராசரி நீர்யானைகள் குழுக்களாக வாழும் சமூக உயிரினங்கள். இரண்டு இனங்களும் அரை நீர்வாழ் உயிரினங்களாக இருந்தாலும், குள்ள நீர்யானைகள் அவற்றின் அளவு காரணமாக நிலத்தில் நேரத்தை செலவிடுகின்றன. 

பிரேசிலில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய வகை டைனோசர்களின் படிமம்: 

பிரேசிலின் தெற்குப் பகுதியில் உள்ள Paraíso do Sul என்ற இடத்தில், விஞ்ஞானிகள் ஒரு அதிசய புதைப்படிமத்தை கண்டுபிடித்துள்ளனர். அது சுமார் 237 மில்லியன் ஆண்டுகள் பழமையான ஒரு நாய் அளவிலான ஊர்வன உயிரினத்தில் படிமம். அதற்கு Gondwanax paraisensis என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புதிய இனத்தின் கண்டுபிடிப்பு, பழமையான டைனோசர்களின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்த நமது புரிதலை முற்றிலும் மாற்றி அமைக்கக்கூடும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். 

Gondwanax paraisensis சைலெசவுரிடுகள் எனப்படும் அழிந்துபோன ஊர்வன இனத்தை சேர்ந்தது. இவை ட்ரயாசிக் காலத்தில் வாழ்ந்தன. பொதுவாக இவை டைனோசர்கள் என்று கருதப்படுவதில்லை. மாறாக, அவற்றின் நெருங்கிய உறவினர்கள் என்று கருதப்படுகின்றன. 

இதையும் படியுங்கள்:
மாரடைப்புக்கும் கால் வலிக்கும் என்ன சம்பந்தம்? அட இது தெரியாம போச்சே!
Hippo Dino

இந்த உயிரினம் நான்கு கால்களைக் கொண்டிருந்தது. 39 அங்குல நீளமும் நீண்ட வாலும் கொண்டிருந்தது. இது சைலெசவுரிடுகளுக்கு பொதுவான சில பண்புகளைக் கொண்டிருந்தாலும், அதன் இடுப்பில் மூன்று முதுகெலும்புகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. டைனோசர்களின் பிற ஆரம்பகால உறவினர்களுக்கு இரண்டு மட்டுமே இருந்தன. இது Gondwanax ஐ டைனோசர் போன்றதாகக் காட்டியது, இது உண்மையான டைனோசராகவோ அல்லது அந்த குழுவின் நேரடி மூதாதையாகவோ இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இந்த படிமம் 2014 இல் மருத்துவர் பெட்ரோ லுகாஸ் போர்செலா அவுரேலியோவால் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் 2021 இல் இந்த படிமத்தை ஒரு பல்கலைக்கழகத்திற்கு நன்கொடையாக வழங்கினார், இதனால் பழங்காலவியல் நிபுணர்கள் அதை நெருக்கமாகப் பார்வையிட முடிந்தது. இந்த படிமம் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான சைலெசவுரிடுகளில் ஒன்றாகும். இதுகுறித்த ஆழமான ஆய்வுகள் இப்போதுதான் செய்யப்பட்டு வருகின்றன. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com